தென்னாடுடைய சிவபெருமான் கொங்குநாட்டில் கம்பீரமாய் வீற்றிருக்கும் இடம் கோயம்பத்தூரில் உள்ள பேரூர் ஆகும். இங்கே பட்டீஸ்வரர் உமையாள் பச்சைநாயகியுடன் ஸ்வயம்பு லிங்கமாய் வீற்றிருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்ப்பட்ட தொன்மையுடைய இக்கோயிலை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
பின்னர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகால் சோழன் கல்லால் ஆன சிறிய கருவறை ஒன்றை அமைத்து அதனுள் பட்டீஸ்வரர் லிங்கத்தை பிரதிர்ஷ்டை செய்திருக்கிறார். பின்னர் 16ஆம் நூற்றாண்டு காலத்தில் கொங்கு நாட்டின் மீது படையெடுத்து வந்த விஜயநகர அரசர்கள் மற்றும் பாளையக்காரர்கள் இக்கோயிலை விரிவுபடுத்தி தற்போதிருக்கும் தோற்றத்தை அளித்திருக்கின்றனர்.
இக்கோயிலினுள் சென்றால் நிச்சயம் பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை நுட்பங்களை காணலாம். இங்குள்ள கோயில் மண்டபத்தில் உள்ள தூண்களில் சிவபெருமானின் பல்வேறு ரூபங்கள் அத்தனை நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளன. அதில் உள்ள ஒரு சிற்பம் இடது புறம் இருந்து பார்த்தால் கோபத்துடன் இருப்பது போலவும், வலது புறம் நின்று பார்த்தால் புன்னகிப்பது போன்றும் இருக்கும். அதே போன்று நடராஜர் சந்ததிக்கு அருகில் உள்ள கூரையில் கற்களால் ஆன சங்கிலியை காணலாம்.
நொய்யல் நதிக்கரைக்கு பக்கத்தில் அமைந்திருப்பதால் இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் சடங்கும் இங்கு பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகளை காணமுடியும். மேலும் இக்கோயிலினுள் கோயில் யானை ஒன்றும், கோ சாலை ஒன்றும் இருக்கிறது. கோயம்பத்தூருக்கு வருபவர்கள் கட்டாயம் செல்லவேண்டிய கோயில் என்றால் அது இந்த பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தான்.