ஆன்மிகம்

கஷ்டங்களை தீர்க்கும் கரிக்ககம் சாமுண்டி கோவில்

 பாண்டிய மன்னர்களும், சோழ மன்னர்களும் போட்டியிட்டு பல திருக்கோவில்களை அமைத்து வழிபட்டு வந்தனர். பாண்டிய மன்னர்கள் சிற்ப கலைஞர்களை பல்வேறு இடங் களில் இருந்து அழைத்து வந்து, பொன்னையும், பொருளையும் வாரி வழங்கி திருக்கோவில் களையும், அதில் கோபுர சிற்பங்களையும் வியக்கும் வகையில் அமைத்தனர்.

சேர நாடு மன்னனும், பாண்டிய நாட்டு மன்னர்களின் துணை கொண்டு சேர நாட்டில் சில சிவன் திருக்கோவில்களை அமைத்து வழிபட்டார். இந்த நிலையில் பிற்காலத்தில் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படும் பரசுராமர் 108 சிவாலயங்களையும், சக்தி சொரூபிணியான பரமேஸ்வரியின் 108 பகவதி கோவில்களையும் அமைத்தார்.

பிற்கால சேர நாடு பரசுராமரின் கேரளநாடு என்று அழைக்கப்பட்டது. பிற்கால சேரர்கள் சிவன் கோவில்களுடன், அன்னை பராசக்தியை பகவதியாக, அம்மனாக, சாமுண்டி தேவியாக பல இடங்களில் நிறுவி, அந்த அம்மன்களை இடத்தின் பெயருடன் சேர்த்து அழைத்து வழிபட்டு வந்தனர்.

கரிக்ககத்தம்மன் :

இவ்வாறு கரிக்ககம் என்ற இடத்தில் உருவானதுதான், ‘தேவி கரிக்ககத்தம்மா’ என்று அழைக்கப்படும் கரிக்ககம் சாமுண்டி ஆலயம். சேர மன்னனான அனுஷம் திருநாள் ராமவர்மா காலத்தில் உருவான இந்த ஆலயம், சக்திமிக்க கோவிலாக திகழ்ந்து வருகிறது. இவ்வாலயத்தில் உக்கிர சொரூபிணியாக வீற்றிருக்கும் ரத்த சாமுண்டி அம்மன், சத்தியத்தை நிலை நாட்டும் தெய்வமாக அருள்பாலித்து வருகிறார்.

சேர மன்னன் ஒருவனின் ஆட்சி காலம் நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அரசியின் விலை மதிப்பு மிக்க காதணி ஒன்று காணாமல் போய்விட்டது. அப்போது காவல் பணியில் ஈடுபட்டு காவலர் ஒருவரின் மீது சந்தேகம் கொண்டு, அவனை சிறையில் அடைத்து விட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட காவலனுக்கு காதலி ஒருத்தி இருந்தாள். அவள் அதே அரண்மனையில் அரசியின் தோழியாக இருந்தாள். அவள் அரசியிடம் ஓடிச் சென்று, ‘என் காதலருக்கு பதிலாக என்னை சிறையில் அடைத்து விட்டு, அவரை விடுவித்து விடுங்கள்’ என்று கூறினாள்.

காவலனோ, ‘அவளை விட்டு விடுங்கள். நான்தான் குற்றவாளி. என்னை தண்டியுங்கள்’ என்றான்.

காதலர்களை காப்பாற்றிய அம்மன் :

மன்னனுக்கு வியப்பு ஏற்பட்டது. யார் குற்றவாளி என்று கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறினான். அமைச்சரின் ஆலோசனைப்படி உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முற்பட்டான். கரிக்ககம் கோவிலில் ரத்த சாமுண்டி சன்னிதானத்தில் சத்தியம் செய்வித்து, உண்மையை கண்டுபிடிக்க முடிவானது. பொய் சத்தியம் செய்பவர்களுக்கு அம்மன் தண்டனை வழங்குவார் என்பது திண்ணம். காவலரும், அவரது காதலியும் ஆலயக் குளத்தில் நீராடி, ஈர உடையுடன் ரத்த சாமுண்டி சன்னிதி முன்பாக வந்து நின்றனர்.

அப்போது அரசியின் துணிகளை சலவை செய்யும் பெண் ஒருத்தி, அங்கு ஓடோடி வந்தாள். சலவைக்குப் போடப்பட்ட துணியில் அரசியின் காதணி இருப்பதைக் கண்டேன். அப்போது விண்ணில் கரிக்ககம் சாமுண்டி தேவியின் வாக்கு ஒலித்தது. அதன்படி இந்த காதணியை உங்களிடம் ஒப்படைக்க வந்தேன். காவலரும், அவரது காதலியும் நிரபராதிகள். அவர்களை விடுவிக்க வேண்டும். இதோ காதணி’ என்று கூறி மன்னனிடம் அதை சமர்ப்பித்தாள்.

மன்னன் தன் தவறுக்கு வருந்தினான். பின் காதணி கிடைத்ததால் மகிழ்ச்சியுற்றான். காவலரையும், அவரது காதலியையும் விடுவித்தான். அரசி தன் இரு காதணிகளையும் தேவிக்கு சமர்ப்பணம் செய்தாள்.

இந்த ஆலயத்தில் ஜாதி, மத வேறுபாடின்றி சில சிக்கலான வழக்குகளுக்கு இங்கு தீர்வு காணப்படுகின்றன. குற்றம் சாட்டியவரும், குற்றவாளியும் தீபச்சுடரில் அடித்து சத்தியம் செய்கிறார்கள். இதன் மூலம் நிச்சயம் உண்மை வெளிப்படும் என்பது அனைவரின் நம்பிக்கையாகும். சாமுண்டிதேவியின் தண்டனைக்கு பயந்தே அனைவரும் உண்மையை ஒப்புக்கொள்வார்கள்.

திருவிதாங்கூர் மன்னனின் படையில் களரிச் சண்டை பயின்ற நிபுணர்களின், களரிக்களமாக இவ்விடம் விளங்கியது. அந்த பெயரே தற்போது மருவி கரிக்ககம் என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் வடமேற்கு திசையில், பார்வதி புத்தனாற்றின் கரையில் அமைந்துள்ளது கரிக்ககம் சாமுண்டி கோவில்.

சிறுமியாக வந்த அம்பாள் :

வேத விற்பன்னரும், தெய்வீக அருள் பெற்றவருமான ஒரு அந்தணர், பராசக்தியின் தீவிர பக்தனாக இருந்தார். அவர் மந்திர, தந்திரங்களை நன்கு கற்று தேர்ந்திருந்த ஒரு குடும்பத் தலைவரான யோகீஸ்வரன் என்பவரை தன் சீடனாக ஏற்றுக்கொண்டார். அவருக்கு உபதேசமும், அருள்வாக்கும் அருளினார். யோகீஸ்வரனும், தன் குருவைப் போலவே பராசக்தியின் மீது அதிக பக்தி கொண்டிருந்தார். இருவரின் பக்தியை மெச்சிய அம்பிகை, ஒரு நாள் சிறுமி உருவில் இருவர் முன்பாகவும் தோன்றி காட்சியளித்தார்.

யோகீஸ்வரரும், அவரது குருவும் அன்னைக்கு பூலோகத்தில் சிறப்பு மிக்க ஒரு ஆலயத்தை அமைக்க திட்டமிட்டனர். அதற்கான இடம் தேடி கரிக்ககம் என்ற பகுதிக்கு வந்தனர். உடன் சிறுமி உருவில் இருந்த அம்பிகையும் வந்தார். கரிக்ககத்தில் ஒரு இடத்தில் பச்சை பந்தல் அமைத்து, அம்மனை குடியிருத்தினர். அம்பிகையும், அவர்களுக்கு அருளாசி வழங்கி அங்கிருந்து மறைந்தாள்.

இதையடுத்து யோகீஸ்வரன், குருவின் அறிவுரைப்படி அம்மனுக்கு ஒரு சிலை செய்து அங்கு பிரதிஷ்டை செய்தார். அதுதான் இன்றைய சாமுண்டியாக அனைவரும் வழி படும், அருள் சுரக்கும் கரிக்ககத்தம்மா ஆகும். காத்து அருள்புரிவதிலும், அநீதி இழைப்பவர்களை தண்டிப்பதிலும் நிகரில்லாதவளாக, சாமுண்டிதேவி திகழ்கிறாள்.

கரிக்ககம் கோவிலில் ராஜ கோபுரம் கம்பீரமாக நிற்கிறது. ஆலயத்தில் சாஸ்தா, குரு பகவான், யோகீஸ்வரன், நவக்கிரகங்களுக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. ஆயிரம் வல்லி என்ற பெயரில் மேலும் ஒரு அம்மன் சன்னிதியும் உள்ளது.

இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் பொங்கல் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (1-ந் தேதி) தொடங்கி, 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. இறுதிநாளான 7-ந் தேதி அன்று ஆலயத்தில் பொங்கல் வைக்கும் வைபவம் நடைபெறும்.

மூன்று வடிவில் அம்மன் :

இந்த ஆலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கரிக்ககம் தேவியை, ‘பராசக்தி’ என்றும், ‘பகவதி’ என்றும், ‘பரமேஸ்வரி’ என்றும் பல பெயர்களில் அழைத்து மக்கள் வழிபாடு செய்கின்றனர். ஒரே தேவியை மூன்று வடிவங்களில் வழிபடுவது இந்த ஆலயத்தின் சிறப்புகளில் முக்கியமானதாகும். ஆம்.. இந்த ஆலய அம்மனை, சாமுண்டி தேவி, ரத்த சாமுண்டி தேவி, பால சாமுண்டி தேவி என்று மூன்று வடிவங்களில் அழைத்து பக்தர்கள் வழிபடுகிறார்கள். இந்த மூன்று தேவியர்களில் சாமுண்டி தேவிக்கு மட்டுமே சிலை வடிவம் உள்ளது. ரத்த சாமுண்டி, பால சாமுண்டி ஆகிய அம்மனின் உருவங்களை, தனிச் சன்னிதிகளில் சுவர் சித்திரமாகவே நாம் காண முடியும்.