கவுதம புத்தரின் முன்பாக அவரது சீடர்கள் பலர் அமர்ந்திருந்தனர். தினமும் அவரிடம் புதிது புதிதாக விஷயங்களையும், தெளிவையும் கற்றுவந்ததால், அனைத்து சீடர்களின் முகத்திலும் ‘இன்று என்ன?’ என்ற எதிர்பார்ப்பு மிகுந்திருந்தது.
புத்தருக்கு சீடர்களின் முகமே காட்டிக்கொடுத்து விட்டது.. அவர்களிடம் கற்றுக்கொள்ளும் அல்லது புதியதாக ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை மிகுந்திருப்பதை.
அவர் தன்னுடைய சீடர்களைப் பார்த்து ஒரு கேள்வியை எழுப்பினார். ‘ஒரு மனிதனின் ஆயுள் எவ்வளவு காலம்?’.
அனைவருக்குமே பதில் தெரியும் என்பதால், கூட்டத்தின் நடுவில் இருந்து வேகமாக எழுந்த ஒரு சீடன் ‘நூறு வருடங்கள்’ என்றான்.
புத்தரின் முகத்தில் புன்னகை. அதே புன்னகையுடன், ‘தவறு’ என்றார்.
சீடர்கள் அனைவரும் திகைத்தனர். ‘ஒரு மனிதனின் ஆயுள் காலம் 100 ஆண்டுகள் இல்லையா?. அப்படியானால் எவ்வளவு காலமாக இருக்கும். 100 ஆண்டுகளுக்கு மேல் மனிதன் வாழ்வது என்பது அத்தி பூத்தாற்போன்றதுதான். ஆகையால் வருடம் குறைவாக இருக்கவே வாய்ப்பிருக்கிறது என்று கருதினர் சீடர்கள்.
உடனே ஒரு சீடன் எழுந்து, ‘எழுபது வருடங்கள்’ என்றான்.
‘இதுவும் தவறு’ என்றது புத்தரின் மென்மையான குரல்.
‘அறுபது வருடங்கள்’ என்றான் மற்றொரு சீடன்.
‘இது கூட தவறுதான்’ என்றார் புத்தர்.
இவை அனைத்தும் அதிக காலம் போல என்று எண்ணிய மற்றொரு சீடன் ‘ஐம்பது வருடங்கள்’ என்று கூறிவிட்டு, புத்தரின் பதிலை எதிர்பார்த்து மவுனமாக நின்றிருந்தான்.
புத்தரின் வார்த்தை அந்தச் சீடனையும் வருத்தம் கொள்ளச் செய்தது. ஆம்.. அந்தப் பதிலையும் தவறானது என்று கூறிவிட்டார் புத்தர்.
சீடர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ‘இதென்ன ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு மனிதனால் ஐம்பது ஆண்டுகள் கூடவா உயிர்வாழ முடியாது?’ என்று குழம்பிப் போனார்கள்.
கொஞ்ச நேரம் தன்னுடைய சீடர்களையே பார்த்துக் கொண்டிருந்தார் புத்தர். சரியான பதிலைச் சொல்ல முடியாமல் வருந்துவதை அவர்களின் முகமே காட்டிக்கொடுத்தது. தன்னுடைய சீடர்களின் மன வருத்தத்தை காணச் சகிக்காத புத்தர், ‘ஒரு மனிதனின் ஆயுள் ஒரு மூச்சு விடும் நேரம்!’ என்றார்.
சீடர்கள் அனைவருக்கும் வியப்பு. அந்த வியப்பு மாறாமலேயே, ‘மூச்சு விடும் நேரம், கணப் பொழுதுதானே!’ என்றனர்.
‘உண்மைதான். மூச்சு விடும் நேரம் கணப்பொழுதுதான். ஆனால் வாழ்வு என்பது மூச்சு விடுவதில்தான் இருக்கிறது. எனவே ஒவ்வொரு கணமாக நாம் வாழ வேண்டும். மனிதர்கள் பலர் கடந்த கால சந்தோஷங்களிலும், இன்னும் பலர் எதிர்காலத்தைப் பற்றிய பயத்திலும், கவலையிலும்தான் வாழ்கிறார்கள்.
நேற்று என்பது முடிந்த விஷயம். அது இறந்து போன காலம். அதே போல நாளை என்பது யாரும் அறிந்துகொள்ள முடியாத எதிர்காலம். எனவே அவற்றில் நேரத்தை செலவிடுவது மடமை. அந்த வகையில் நிகழ்காலம் மட்டுமே நம்முடைய ஆளுகைக்கு உட்பட்டது. அதை ஒவ்வொரு கணமாக முழுமையாக வாழ வேண்டும்’ என்றார் புத்தர்.