ஆன்மிகம்

ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது

ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரதிருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்
ஆரல்வாய்மொழி பரகோடிகண்டன் சாஸ்தா மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற 11-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி நேற்று அதிகாலையில் தேவாரம் நிகழ்ச்சியுடன் கணபதிஹோமம், காலை 11 மணிக்கு கொடியேற்றம் போன்றவை நடந்தன. தொடர்ந்து சிறப்பு வழிபாடும், பிரசாதம் வழங்குதலும், அன்னதானமும் நடைபெற்றது.

கொடியேற்று விழா நிகழ்ச்சியில் கோவில் ஸ்ரீகாரியம் சிவபாஸ்கரன், பக்தர்கள் சேவா சங்க தலைவர் முத்துக்குமார், மேல்சாந்தி கிருஷ்ணன்பட்டர், பக்தர்கள் சங்க ஆலோசகர்கள் ஆறுமுகம்பிள்ளை, ஈஸ்வரபிள்ளை, கணபதியாபிள்ளை, செயலாளர் பெருமாள், பொருளாளர் ராக்கோடியான், துணைத்தலைவர்கள் இசக்கியப்பன், விநாயகம், உறுப்பினர்கள் சங்கரலிங்கம், கணபதி, அ.தி.மு.க. பேரூர் செயலாளர் மாடசுவாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாலையில் சுவாமிகள் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் சாமி வாகனத்தில் பவனி வருதல், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறுகிறது.

வருகிற 10-ந் தேதி காலையில் சிறப்பு அபிஷேகங்களும், மாலை 6 மணிக்கு சிறப்பு நாதஸ்வரம் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து தொழில்அதிபர் முத்துக்குமார் தலைமையில் அன்னதானம் நடைபெறுகிறது. இரவு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தம்புரான் விளையாட்டு நடக்கிறது.

11-ந் தேதி காலை 8 மணிக்கு சாமி வாகனத்தில் ஆறாட்டுக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு நாட்டியாஞ்சலி, 8 மணிக்கு சாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்திலும், சாஸ்தா அம்பாள் பூ பந்தல் வாகனத்திலும், சுசீந்திரம் சிவ தொண்டர்களின் கயிலை வாத்திய நிகழ்ச்சியுடன் வாகனம் வீதி உலா வருதல் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம், பக்தர்கள் சேவா சங்க தலைவர் முத்துகுமார் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.