Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

பங்குனி உத்திரத்தில் காவடி தூக்குவது ஏன் ?

முருகன் கோவில்களில் பழனி கோவிலில் பங்குனி உத்திரம் விழா மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த விழாவின்போது பழனிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வருவார்கள். பழனி முழுவதும் காவடி காட்சிகளாக இருக்கும். முருக பக்தர்கள் காவடி எடுப்பதற்கு ஒரு புராணக்கதை கூறப்படுகிறது.

பார்வதிதேவிக்கும் பரம சிவனுக்கும் திருமணம் நடந்த சமயம் தேவர்களும் முனி வர்களும் மற்றும் எல்லோரும் தெய்வீக திரு மணத்தைக் காண கயிலை செல்கின்றனர். இதனால் வடபுறம் தாழ்ந்து தென்புறம் உயர்ந்தது.

பூமியை சரிசமமாக செய்வதற்கு சிவபெருமான் அகத்திய முனிவரை தென் திசைக்கு அனுப்பி வைத்தார். அகத்திய முனி வரும் தென்திசையில் பொதிய மலையில் தங்கினார். அகத்திய முனிவர் அங்கிருந்த காலத்தில் தாம் வழிபட சிவகிரி, சக்திகிரி என்னும் இரு சிகரங்களைக் கொண்டு வருமாறு தன் சீட னாகிய இடும்பாசுரனிடம் கட்டளையிட்டார்.

இடும்பாசுரன் மிகப்பெரிய பக்திமான். தன் குருவான அகத்தியர் இட்ட கட்டளையை நிறைவேற்ற தன் மனைவி இடும்பியுடன் கயிலை சென்று முருகப்பெருமானுக்கு உரிய கந்தமலையில் உள்ள சிவகிரி, சக்திகிரி என்னும் இரு குன்று களையும் பெயர்த்தெடுத்து ஒரு பெரிய பிரமதண்டத்தின் இரு புறங்களிலும் காவடியாகக் கட்டினான்.

தன் தோள் மீது பிரம தண்டத்தின் மையப் பகுதியை வைத்துக்கொண்டு பொதிய மலைக்குத் திரும்பி வரும்வழியில் திருவா வினன்குடிக்கு மேலே ஆகாயத்தில்பறந்தபோது முருகப்பெருமான் அவ் விரு மலைகளையும்அங்கேயே இறங்குமாறு செய்து அவ்விடத்திலேயே நிலைபெறச்செய்து விட்டார்.

தன்னை யறியாமல் தரையில் இறங்கிய இடும்பன் எவ்வளவு முயன்றும் பிரமதண்டத்தின் ஓரங்களில் கட்டிய மலை களை அசைக்கமுடியாமல் திகைத்து நின்றான். மறுபடி அக்காவடியைத் தூக்க முயன்றபோது சிவகிரி குன்றின் மீது ஓர் அழகிய சிறுவன் கோவணத்துடன் ஆண்டியின் உருவில் சிரித்துக் கொண்டு நிற்பதைக் கண்டான்.

அச்சிறுவனால்தான் மலையை அசைக்கக்கூட முடியவில்லை எனக்கருதிய இடும்பாசுரன் அச்சிறுவனை மலையிலிருந்து இறங்கும்படி அதட்டினான். சிறுவனோ மலை தனக்கே சொந்தம் என வாதிட்டான். சினம் கொண்ட இடும்பாசுரன் சிறுவனை தாக்க முயன்றான். தாக்க வந்த இடும்பன் வேரற்ற மரம் போல் சாய்ந்துவிட அவன் மனைவி இடும்பி கணவனை காப்பாற்ற சிறுவனை வேண்டினாள்.

தன் தவ வலிமையால் நிகழ்ந்தவற்றை அறிந்த அகத்தியர் முருகப்பெருமானை வணங்கினார். அக்கணமே இடும்பாசுரனும் உயிர்பெற்று எழுந்து முருகப்பெருமானின் திருவிளையாடல் அறிந்து மூவரும் முருகப்பெருமானை வணங்கி பக்தி யோடு துதித்தனர். குரு பக்தியை மெச்சிய முருகப் பெருமான் இடும்பனை பழனி தலத்தின் காவல் தெய்வமாக இருக்கும்படி பேரருள் செய்தார்.

இரு குன்றினையும் காவடிபோல் தூக்கி வந்த இடும்பாசுரன் முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றதுபோல் இன்றும் பக்தர்கள் காவடி தூக்கிச்சென்று முருகப்பெருமானின் பேரருளைப் பெறுகின்றனர். இளவரசனாக முருகன் இடும்பனுக்குக் காட்சியளித்ததால் இன்றும் பழனி முருகனுக்கு ராஜ அலங்காரம் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

Exit mobile version