தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய சரித்திரம் உருவாவதற்கான பேச்சு வார்த்தை ஒன்று சமீப காலமாக நடைபெற்று வருவதாக கோலிவுட் வட்டாரங்களிடையே பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
அப்படி ஒரு பிரம்மாண்டமான படைப்பு உருவானால் அது தமிழ் சினிமாவிற்கு மட்டும் சரித்திரமல்ல இந்திய சினிமாவிற்கே ஒரு சரித்திரமாக இருக்கும் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.
ஆனால், அது பேச்சு வார்த்தையிலிருந்து முன்னேறி செயல் வடிவம் பெறுமா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி. ‘லிங்கா’ படத்தின் தோல்விக்குப் பிறகு மீண்டும் தன்னை வெற்றிகரமான ‘பாக்ஸ் ஆபீஸ்’ நாயகனாக காட்ட வேண்டிய சூழ்நிலையில் உள்ள ரஜினிகாந்த், ஷங்கரிடம் தனக்காக ஒரு படத்தை இயக்கித் தரும்படி கேட்டுக் கொண்டாராம்.
ஷங்கரும் அதற்கு சம்மதித்து கதையைச் சொல்லி விட்டார் என்கிறார்கள். அந்தப் படத்திற்கான வில்லனாக நடிக்க வைக்க கமல்ஹாசனிடம் பேசியுள்ளார்களாம். முதலில் வில்லனாக நடிக்க மறுத்த கமல்ஹாசன், பின்னர் யோசித்துச் சொல்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
ஒரு வேளை கமல்ஹாசன் வில்லனாக நடிக்க சம்மதித்தால் ஷங்கர் – ரஜினிகாந்த் – கமல்ஹாசன் கூட்டணியில் ஒரு பிரம்மாண்டமான படைப்பு தமிழ் சினிமாவில் உருவாக வாய்ப்புள்ளது.
இதற்கு முன் ஆமீர்கானை வில்லனாக நடிக்க முடியுமா எனக் கேட்ட செய்திகளும் வந்து பரபரப்பை ஏற்படுத்தின. இப்போது அந்தக் கதாபாத்திரத்தில்தான் கமல்ஹாசனை நடிக்கக் கேட்டிருக்கிறார்கள் என்று வேறொரு தகவலும் உலா வருகிறது.
ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இருவரும் கடைசியாக இணைந்து நடித்த படம் ‘நினைத்தாலே இனிக்கும்’. பாலசந்தர் இயக்கிய அந்தப் படம் வெளிவந்து 36 ஆண்டுகள் ஆகிவிட்டது. ரஜினியும், கமலும் மீண்டும் இணைந்து நடித்து புதிய சாதனை புரிவார்களா என்பது அவர்கள் கையில்தான் உள்ளது.