பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே, இப்போது ஹாலிவுட்டிலும் பிரபலமாகிவிட்டார். தற்போது அவர், வின் டீசல் உடன் ‛டிரிபிள் எக்ஸ்’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதனிடையே இன்னொரு ஹாலிவுட் படத்தில் நடிக்க தீபிகாவுக்கு வாய்ப்பு வந்தது. அதாவது ஹாலிவுட்டின் ஆக்ஷ்ன் ஸ்டாரான டாம் குரூஸ் நடிப்பில் ‛தி மம்மி’ படம் உருவாக இருக்கிறது. இதில் நடிக்க தீபிகாவிற்கு வாய்ப்பு வந்தது.
படத்தின் கதைப்படி பிளாஸ்பேக்கில் வரும் ராணி கதாபாத்திரத்தில் தீபிகா நடிக்க வேண்டுமாம். இந்த ராணி வேடத்திற்கு ஆசிய பெண் ஒருவர் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று இயக்குநர் கருத, தீபிகாவை வைத்து நேர்முக தேர்வு நடத்தியிருக்கிறார். ஆனால் தீபிகாவிற்கு அந்த ரோல் செட்டாகவில்லையாம். இதனால் தீபிகாவிற்கு இப்பட வாய்ப்பு கிட்டாமல் போய்விட்டது.
வின் டீசலை தொடர்ந்து டாம் குரூஸ் உடனும் நடித்து விடலாம் என்று எண்ணியிருந்த தீபிகாவிற்கு இது ஏமாற்றமாகிவிட்டது.
முன்னதாக தீபிகாவை போன்று பாலிவுட்டின் மற்றுமொரு நடிகையான ஹூமா குரேசியும் நேர்முக தேர்வுக்கு சென்றிருக்கிறார், அவருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.