ஆன்மிகம்

மயிலாப்பூரில் உள்ள ஏழு சிவாலயங்கள்

 ‘மயிலையே கயிலை.. கயிலையே மயிலை’ என்ற சிறப்பு பெற்றுள்ளது, மயிலாபுரி என அழைக்கப்பட்ட மயிலாப்பூர் திருத்தலமாகும். சென்னையின் மையப்பகுதியாக இது திகழ்கிறது. மயிலாப்பூரில் ஏழு சிவாலயங்கள் அருகருகே அமைந்திருக்கின்றன.

அவை: கபாலீசுவரர் ஆலயம், வெள்ளஸ்வரர் ஆலயம், வாலீஸ்வரர் ஆலயம், காரணீஸ்வரர் ஆலயம், மல்லீஸ்வரர் ஆலயம், விருபாட்சீஸ்வரர் ஆலயம், தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் ஆகியவையாகும். இந்த 7 சிவாலயங்களையும் தரிசித்தால் முக்தி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த 7 சிவாலயங்களைப் பற்றியும் சிறிய குறிப்புகளாக இங்கே பார்க்கலாம்.

கபாலீஸ்வரர் ஆலயம் :

மயிலையின் மத்திய பகுதியில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் முன்பு கடற்கரையில் இருந்ததாக கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.

பிரம்மா, ஈஸ்வரருக்கு சரியான மரியாதை செய்யாததால் ஈஸ்வரர் பிரம்மனின் ஒரு தலையைக் கொய்தார். அந்த கபாலம் கையில் ஒட்டியதால் கபாலீஸ்வரர் என்ற திருநாமம் வந்ததாக கூறப்படுகிறது. பிறகு பிரம்மா இந்த தலத்தில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கி ஈசனை மகிழ்வித்தார். பார்வதி தேவி, மயில் வடிவில் இங்கு ஈசனை பூஜித்ததால் மயிலாபுரி என்ற பெயர் கொண்ட இத்தலம், தற்போது மயிலாப்பூர் என அழைக்கப்படுகிறது.

ஏழாவது நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் நிர்மாணம் செய்த ஆலயம் இது. கடற்கரை ஆலயம் போர்த்துக்கீசியரால் அழிக்கப்பட்ட பிறகு 16-வது நூற்றாண்டு முடிவில் தற்போதுள்ள ஆலயம் கட்டப்பட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. 120 அடி உயர 7 நிலை ராஜகோபுரம் கொண்டது இந்த ஆலயம்.

திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலம். சிவனேசன் என்ற சிவபக்தரின் மகள் பூம்பாவையை, திருஞானசம்பந்தர் உயிர்ப்பித்த தலம் இது. சிங்கார வேலர் சன்னிதிக்கு கொடிமர அமைப்பு இருப்பது ஒரு சிறப்பான அம்சமாகும். ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து பார்த்தால் ஒரு சேர எல்லா விமானங்களையும் தரிசிக்கலாம்.

இறைவனின் திருநாமம் கபாலீஸ்வரர், இறைவியின் திருநாமம் கற்பகாம்பாள்.

ஆலயம் காலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

வெள்ளஸ்வரர் ஆலயம் :

கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு அருகிலும், தெற்கு மாட வீதியின் பிரதான சாலையிலும் வெள்ளஸ்வரர் கோவில் இருக்கிறது. வெள்ளி என்பது சுக்ரனைக் குறிக்கும். சுக்ரனின் பிரதான தலமானதால் இவ்வாலயம் (வெள்ளி + ஈஸ்வரர்) வெள்ளஸ்வரர் ஆலயமென பெயர் பெற்று விளங்குகிறது. அசுர குல குருவான சுக்ராச்சாரியார் இந்த ஆலய ஈசனை வழிபட்டு, இழந்த தன்னுடைய கண் பார்வையை அடைந்தார் என்கிறது தல வரலாறு.

இறைவனின் திருநாமம் வெள்ளஸ்வரர், இறைவியின் திருநாமம் காமாட்சி. இவ்வாலயத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகு காலத்தில் சரபேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் கண் நோய் தீர, சுக்ரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.

கோவில் ராஜகோபுரம் சுதைச் சிற்பங்களுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந் திருக்கும்.

விருபாட்சீஸ்வரர் ஆலயம் :

காரணீஸ்வரர் ஆலயத்திற்கு அருகில்தான் இந்த விருபாட்சீஸ்வரர் ஆலயமும் அமைந்திருக்கிறது. ஈசனின் மூன்றாவது கண், இயற்கை ஓட்டத்திற்கு எதிர்மாறாக அமைந்ததாக சொல்லப்படுகிறது. நாம் இவ்வுலகில் ஈடுபட்டு செய்யும் காரியங்களுக்கு ஏற்ப, கர்ம பலன் அமைகிறது. மனதையும் எண்ண ஓட்டங்களையும் தவறான பாதையில் செல்லாதவாறு, சரணடைந்தவர்களை காப்பவரே விருபாட்சீஸ்வரர் ஆவார்.

இறைவனின் திருநாமம் விருபாட்சீஸ்வரர், இறைவியின் திருநாமம் விசாலாட்சி. ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந் திருக்கும்.

காரணீஸ்வரர் ஆலயம் :

மயிலையில் கச்சேரி சாலையில் செல்கையில், பஜார் சாலையின் உள்ளே நடு மையத்தில் பிரதான சாலையில் காரணீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

எல்லாவற்றிற்கும் மூல காரணமாகவும், உலகம் இயங்குவதற்கு காரணமாகவும் இருந்து ஈஸ்வரன் இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கிறார். எனவேதான் (காரணம்+ ஈஸ்வரன்) காரணீஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது.

பல நூற்றாண்டுகளை கடந்த பழமையான ஆலயம். இங்குள்ள சிவலிங்கத் திருமேனி, திருக்கடையூர் மற்றும் காலஹஸ்தி தலங்களில் உள்ள சதுர வடிவ லிங்கத் திருமேனி போல் காட்சி தருகிறது.

நோய் நொடிகள் தீர, வாழ்வில் வளம் பெருக பக்தர்கள் இத்தல இறைவனை வணங்கி பலனடைகின்றனர். இவ்வாலயம் வந்து இறைவனை வழிபட்டால் மன அமைதி கிடைப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

இறைவனின் திருநாமம் காரணீஸ்வரர், இறைவியின் திருநாமம் சொர்ணலதாம்பிகை (பொற்கொடி அம்பிகை) என்பதாகும். காலை 6.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் :

மயிலையிலிருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில் நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் உள்ளது. மாசிமாத தீர்த்த நீராட்ட விழாவின் போது கடலுக்குள் ஏழு சிவாலயங்களில் இருந்து எழுந்தருளும் சுவாமிகளில், தீர்த்தபாலீஸ்வரருக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறுவதால், இந்த ஈஸ்வரருக்கு தீர்த்தபாலீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.

அகஸ்தியர் தனக்கு ஏற்பட்ட நோய் நீங்குவதற்காக, இந்த ஆலயத்திற்கு எழுந்தருளி இறைவன், இறைவியை வணங்கினார் என்பது தல வரலாறு. இறைவனின் திருநாமம் தீர்த்தபாலீஸ்வரர், இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி.

ஆலயம் திறந்திருக்கும் நேரங்கள்: காலை 6.30 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை.

வாலீஸ்வரர் ஆலயம் :

கோலவிழியம்மன் ஆலயத்திற்கு அருகில் வாலீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்தத் தலம், வாலி வழிபட்ட தலமாகும்.

பராக்கிரமசாலியான வாலி, தனது தாய் சொற்படி இங்கு ஈசனை வணங்கி வந்தார். ஈசன், வாலியின் பக்தியில் மகிழ்ந்து, வரங்கள் நல்கியதோடு இனிமேல் இந்த லிங்கத்திருமேனி வாலீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுமென கூறி அருள்புரிந்தார்.

மிகவும் பழமை வாய்ந்த ஆலயம் இது. கருவறை மண்டபம் கல் கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் விசேஷ பீடத்தில் விநாயகர் வீற்றிருக்கிறார். இந்த விசேஷ அமைப்பு இந்த ஆலயத்தின் சிறப்பான ஒன்றாக விளங்குகிறது. பஞ்சலிங்க சன்னிதியின் விமானம், வடக்கே உள்ள காசி ஆலய கோபுரத்தை ஒத்துள்ளது.

பஞ்சலிங்கத்திற்கு மாதுளம் பழ முத்துக்களால் அர்ச்சனை செய்வது, இந்த ஆலயத்தில் சிறப்பான வழிபாடுகளில் ஒன்றாகும். பிரகார சுற்றுச் சுவரில் பல்லியின் உருவ புடைப்புச் சிற்பத்தை காணலாம். இதனை பக்தர்கள் மஞ்சள் சந்தனம் பூசி வழிபடுகின்றனர்.

இறைவனின் திருநாமம் வாலீஸ்வரர், இறைவியின் திருநாமம் பெரியநாயகி.

ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மல்லீஸ்வரர் ஆலயம் :

காரணீஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் இந்த ஆலயம் இருக்கிறது. முன்னொரு காலத்தில் மல்லிகை மலர்கள் நிறைந்த இவ்வனத்தில், ஈசன் எழுந்தருளியிருந்ததால் இத்தல இறைவனுக்கு மல்லீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது.

வேம்பு மற்றும் அஸ்வத (அரசு) மரம் இணைந்து ஒரு மரமாக வளர்ந்துள்ளது ஆலயச் சிறப்பாகும். இருப்பினும் இந்த ஆலயத்தின் தல மரம் மல்லிகை மரமே. பிப்ரவரி மாதக் கடைசியில் தொடர்ச்சியாக 15 நாட்கள், இத்தல இறைவனின் மீது சூரிய கதிர்கள் விழுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

இறைவனின் திருநாமம், மல்லீஸ்வரர், இறைவியின் திருநாமம் மரகதாம்பாள். ஆலயம் திறந் திருக்கும் நேரங்கள்: காலை 6 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.