‘பாரதிராஜா பன்னாட்டுத் திரைப்படப் பயிற்சி’ நிறுவனத்தின் துவக்க விழா, சென்னையில் உள்ள தேனாம்பேட்டையில் நடைபெற்றது. ரஜினிகாந்த் கலந்துகொண்டு இந்த பயிற்சிப் பள்ளியைத் திறந்து வைத்தார்.
ராஜேஷ் வைத்யாவின் வீணை இசையுடன் துவங்கிய விழாவில், ரஜினிகாந்த், கமல், வைரமுத்து, கே.எஸ்.ரவிகுமார், நாசர், பார்த்திபன், சேரன், ராம், ஆர்.கே.செல்வமணி, நல்லி குப்புசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், திருநாவுக்கரசர், சாரு நிவேதா, சுஹாசினி உள்ளிட்ட பல நடிகை, நடிகர்களும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை ஜோ மல்லூரி தொகுத்து வழங்கினார்.
வைரமுத்து, “இனி வருகிற உலகம் மிகவும் வேகமான உலகம். இந்தத் தொழில்நுட்ப உலகம் ஐந்து நிமிடத்தில் ஒருவனை உலகப் புகழ் அடையச் செய்யும். அடுத்த மூன்று நிமிடத்தில் மறக்கடித்துவிடும். ஆனால், கருப்பு வெள்ளை யுகத்தில் இருந்து இந்த டிஜிட்டல் யுகம் வரை வந்திருக்கும் இந்த ரெண்டு பேரையும் (ரஜினி, கமலை கையால் காட்டி) பார்க்கும்போது இனி வரும் நூற்றாண்டில் இந்த இருவரைப் போல தமிழ் சினிமாவில் இருப்பார்களா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. இவர்களோடு ஒரு இயக்குநரும் ஓடி வந்திருக்கிறார் என்பது மிகப்பெரிய செய்தி. இன்னொரு செய்தி இந்தியாவில் கிராமத்துக்கும் நகரத்துக்குமான இடைவெளி குறைந்துகொண்டே வருகிறது. எங்கள் ஊருக்குப் போனால் உரல் இல்லை; உலக்கை இல்லை; அம்மி இல்லை; திண்ணை இல்லை; வெள்ளாடு கட்டிக்கிடக்கிற வீடுகள் இல்லை; முறம் இல்லை. இவைகள் எல்லாம் ஏழாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்க் கலாசாரத்தின் கருவிகள். இந்த ஏழாயிரம் ஆண்டுகளான தமிழ் கலாசாரத்தின் கருவிகள் இந்த அண்மைக் காலத்தில் காணாமல் போயின. இப்படிப்பட்ட ஒரு யுகத்தில், பாரதிராஜாவின் படங்கள் மட்டும்தான் தமிழக நாகரிகத்தின் படிமங்களைக் காட்டக் கூடிய எச்சங்கள். அவர் பெரிய ஆவணமாகத் திகழ்கிறார். இந்தப் பல்கலைக்கழகம் பல நூற்றாண்டுகளுக்குப் பெயர் சொல்லும் அளவுக்கு பாரதிராஜா வளர்த்து எடுக்க வேண்டும். கற்றதை சொல்லிக்கொடுப்பதில் தற்போது சமண முனிவருக்கு ஈடானவர் பாரதிராஜா” என்று வாழ்த்தினார்.
கமல் பேசுகையில் “40 ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவைப் பார்ப்பவர். மூன்று தலைமுறைகளைக் கண்டவர் பாரதிராஜா. அவர் வயதைச் சொல்லுவதற்கான நேரம் வந்துடுச்சே. உச்சத்திற்கு வரும்போது இந்த மாதிரி விலை எல்லாம் கொடுக்கத்தான் வேண்டும். (சிரிக்கிறார்). எனக்கு என்ன ஆச்சரியம்னா பாரதிராஜாவப் பார்த்துட்டு அவர் மாதிரி கிராமத்துல இருந்து கிளம்பி வர்றவங்களைப் பார்த்தால் நான் திட்டுவேன்.
‘அவர் பயிற்சி இல்லாமல் வெறுமன டிக்கெட் மட்டும் வாங்கிக்கொண்டு டைரக்டர் ஆனவர் இல்லை. பலரிடம் உதவியாளராக இருந்தவர். ஒரு அரங்கத்தில் பிழை நேர்ந்தால் எப்படித் திருத்துவது என்பதை தெரிந்துகொண்டு இயக்க வந்தவர். எப்படி உருவாக்குவது என்பதை விட, உருவாக்கும் முயற்சியில் ஏற்படும் தடங்களை எப்படித் தாண்டி வருவது என்பதை அறிந்த தடகள வீரர் அவர்’னு சொல்வேன். சினிமா, 200 பேர் செய்யும் ஜனநாயகக் கலை. இதில் எங்கு வேண்டுமானாலும் பிழை ஏற்படலாம். அதை எல்லாம் பார்த்து சரி செய்வதால்தான் என்னவோ இயக்குநர்களை ‘கேப்டன் ஆஃப் தி ஷிப்’னு சொல்றாங்கனு நினைக்கிறேன். இந்தப் பள்ளியில் கற்பிக்கப் போகிறவர்கள் எல்லாம் ஆசான்கள் என்று நம்பி விட வேண்டாம். நான் நிறையப் பேருக்கு பாடங்களைக் கற்றுக்கொடுக்கும்போதுதான் அவையடக்கம் அடைந்தேன். ஒருத்தர் ஒரு கேள்வி கேட்டபிறகு பதில் சொல்ல முற்படும்போதுதான், நாம் கற்றுக்கொண்டது கையளவு என்பது எனக்கே தெரிகிறது. அதனால், இங்கு ஆசிரியர்களும், மாணவர்களும் ஒன்றாகக் கற்கும் வாழ்வு போல கற்க வேண்டும் என்றவர், தேசிய விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவையும் வாழ்த்திச் சென்றார்.
“மேடைகளில் பேசும்போது யோசிச்சுட்டு பேசணும். அழகான வார்த்தையைப் போட்டு, மரியாதையா பேசணும் என்பது சம்பிரதாயம். ஆனா, எனக்கு இந்தச் சம்பிரதாயம் எல்லாம் கொஞ்சம் கூட கிடையாது. என்ன தோணுதோ அதைப் பேசுவேன் அவ்வளவுதான்” என்று சொல்லியே மைக் பிடித்தார் இயக்குநர் பாரதிராஜா. “நான் கார் வெச்சிருக்கேன். வீடு வெச்சிருக்கேன் என்று சொல்வது எல்லாமே வெறும் பணம்தான். ஆனா, நான் உண்மையாகவே சம்பாதித்தது நான் அழைத்த அழைப்பிற்கு எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் மூன்று தலைமுறைகளும் வந்து இங்கு அமர்ந்ததுதான். இதுவே அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நடந்திருந்தால் கொஞ்சம் மெல்ட் ஆகி அழுதிருப்பேன். ஆனா, இப்ப அழுகலை. கொஞ்சம் பக்குவப்பட்டுட்டேன். ரஜினி முன்னாடி ரொம்ப சாதாரணமா இருப்பார். இப்ப இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறார்னா… அவர் உழைத்த உழைப்பும், எடுத்த முயற்சியும்தான் காரணம். வைரமுத்து எழுதிய வரிகளை எனக்கு ஒழுங்காவே படிக்கத் தெரியாது. ஆனா, வைரமுத்து அறிமுகப்படுத்திய பெருமையை பெற வேண்டி இருக்கிறது. எனக்குள் இருந்த உள்ளுணர்வுதான் என்னை இயக்கிக்கொண்டிருக்கிறது. அந்த உணர்வு முக்கியம். இந்த இடத்துல குளோசப், இங்க லாங் ஷாட்னு உள்ளுணர்வு சொல்லுச்சு.. நான் எடுத்தேன். தட்ஸ் இட். எந்த நடிகனையும், சிறந்த நடிகனாக உருவாக்கவே முடியாது. எந்த டெக்னிஷியனையும் சிறந்த டெக்னிஷியனாக நாம உருவாக்கவே முடியாது. என்னடா இன்ஸ்டிட்யூட் ஆரம்பிச்சுட்டு இப்படி சொல்லுறார்னு நினைக்க வேண்டாம். கற்றுக் கொள்பவனுக்கு சுய முயற்சி வேண்டும். தானாகப் பயிற்சி எடுத்தவன் மட்டும்தான் சிறந்த கலைஞர்களாக வர முடியும். ஸ்டில் ஐ யம் திங்கிங். ஒரு மழை காலத்துல ஊர்ல இருந்து ஒரு லாரியில டிரங்க் பெட்டியில நாலு அஞ்சு சட்டையை எடுத்து வந்தது. இப்ப நாற்பது, ஐம்பது வருஷம் ஓடிடுச்சு. அந்த அனுபவத்தைத்தான் சொல்லித்தரப்போறேன்” என்றவர், “கமலுக்குப் பதில் சொல்லும் விதமாக, “கமல், you become old. but, i never become old. நான் ஓல்ட் ஆகவே இல்லை. இன்னும் 24 மணி நேரம் ஓடச் சொன்னாலும் ஓடிட்டே இருப்பேன்.” என்று சிரித்தவாறு சொல்லி முடித்தார் பாரதிராஜா.
ரஜினிகாந்த் பேசும் போது, “நான் முதல்ல பாரதிராஜா சாரை, ‘பாரதி… பாரதி’னு தான் கூப்பிட்டு இருப்பேன். ஒருநாள் இளையராஜா சார் என்கிட்ட பாரதிராஜா சாரின் வயசைச் சொன்னார். அதுக்குப்பிறகு நான் ‘பாரதி சார்’னு கூப்பிட ஆரம்பிச்சேன். அவருடைய உண்மையான வயசை நீங்க தெரிஞ்சுகிட்டீங்கன்னா… கையெடுத்துக் கும்பிடுபவர்கள் எல்லாம் சாஷ்டாங்கமா அவர் கால்ல விழுந்துடுவாங்க. ஆனா, இப்பவும் இவ்வளவு இளமையா இருக்கிறார்னு சொன்னால், அதுக்கு ரெண்டு காரணம்தான். ஒண்ணு, மதுரை மண்ணுல, சின்ன வயசுல அந்த பட்டிக்காட்டுல சாப்பிட்ட ஆர்கானிக் சாப்பாடு. ரெண்டாவது, அவர் சுவாசிக்கிறது; விரும்புகிறது; கஷ்டப்படுகிறது; ஜீவிக்கிறதுனு எல்லாமே இந்தச் சினிமாதான். அதை இன்னும் உற்சாகமா செஞ்சுட்டு இருக்கிறார். இந்த ரெண்டும்தான் அவர் இளமையின் ரகசியம். வாழ்க்கையில நல்லா இருக்கணும்னு சொன்னா, இளமைக் காலத்துல நல்லா உழைக்கணும். முதுமையில நல்லா இருக்கணும்னு சொன்னால் எப்போதும் பிஸியா இருக்கணும். அதைத்தான் பாரதிராஜா சார் செஞ்சுட்டு இருக்கார்.
என்னை நல்ல நடிகன்னு ஒத்துக்கவே மாட்டார். ‘நானும் ஒரு படத்துல ஹீரோவா நடிச்சேன், என்னை யாரும் ஒத்துக்கலை… உன்னை எப்படிய்யா… ஒத்துகிட்டாங்க’னு அவர் நினைக்கிறது எனக்கு கேட்குது.
பாரதிராஜா சாரை எனக்குப் பிடிக்கும். அவருக்கு என்னைப் பிடிக்கும்… ஆனா பிடிக்காது. ஊடகங்கள், பத்திரிகையாளர்களுக்கு எல்லாம் தெரியும். ‘ரஜினி பத்தி என்ன நினைக்கறீங்க?’னு அவர்கிட்ட கேட்டால், ‘நல்ல மனிதர்’னு சொல்லுவார். ‘சரி, ஆர்ட்டிஸ்டா என்ன நினைக்கறீங்க’னு திரும்பக் கேட்டால், ‘He is a good man’னு சொல்லுவார். என்னை நல்ல நடிகன்னு ஒத்துக்கவே மாட்டார். ‘நானும் ஒரு படத்துல ஹீரோவா நடிச்சேன், என்னை யாரும் ஒத்துக்கலை… உன்னை எப்படிய்யா… ஒத்துகிட்டாங்க’னு அவர் மனசுக்குள்ள நினைக்கிறது எனக்கு கேட்குது. (சிரிக்கிறார்)
பாரதிராஜா சார் இரண்டே முறைதான் என் நேரத்தைக் கேட்டு இருக்கார். ஒண்ணு ’16 வயதினிலே’ நடிக்கும்போது கால்ஷீட் கேட்டார். இரண்டாவது இந்த விழாவுக்காகதான் கேட்டார். உடனே வரேன்னு சொன்னேன். நான் சினிமா இன்ஸ்டிடியூட்ல படித்ததால் எனக்கு சினிமா கல்வியின் அருமை தெரியும். நடிக்க விரும்பும் நடிகர்களைப் படம் பிடிப்பவர்களுக்கு முதல்ல பிடிக்கணும். சில பேர் பார்ப்பதற்கு நல்லா இருப்பாங்க. கேமரா முன்னாடி நல்லா இருக்கமாட்டாங்க. சிலர் பார்க்க சுமாரா இருப்பாங்க. கேமராவுல அழகா இருப்பாங்க. அப்புறம் ஸ்கிரீன்ல காட்டும்போது ஜனங்களுக்கு பிடிக்கணும். ஆனா, ஜனங்களுக்கு யாரைப் பிடிக்கும்னே தெரியாது. அதுஒரு மாயை. அவங்களுக்கு பிடிச்சுப் போய்டுச்சுன்னா… என்ன செஞ்சாலும் பிடிக்கும். பிடிக்காதுனு சொன்னால், என்ன செஞ்சாலும் அவங்களுக்குப் பிடிக்காது. அது ஒரு மாயா ஜாலம்தான்.
அரசியலுக்குத் தேவை தகவல்கள். சினிமாவுக்குத் தேவை தொடர்புகள். பாரதிராஜா சாருக்கு தெரியாத ஆட்களே கிடையாது. அவர் சினிமால பெரிய மதிப்பு மரியாதையை சம்பாதிச்சு வைச்சிருக்கார். இங்க படிக்கறவங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்னு நம்புறேன்” என்றார் ரஜினிகாந்த்.