Business Technology

எல்லா இடங்களிலும், அனைத்து சூழல்களிலும் சிக்னல் கிடைக்கும் செயற்கைக்கோள் போன்: பி.எஸ்.என்.எல். அதிரடி

புதுடெல்லி:
இந்தியா முழுக்க செயற்கைக்கோள் போன் சேவையை வழங்குவதற்கான பணிகளில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் ஈடுப்பட்டுள்ளது. அதன்படி இந்த சேவைக்கான பணிகள் முழுமையாக நிறைவுபெற இரண்டு ஆண்டுகள் ஆகும் என்றும், நிறைவுற்றதும் எவ்வித இயற்கை பேரிடர்களின் போதும் செல்லுலார் இணைப்புகள் முடங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் போன் சேவை வழங்குவதற்கான உரிமம் பெற சர்வதேச மாரிடைம் நிறுவனத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழிமுறைகள் நிறைவுபெற 18-24 மாதங்கள் ஆகும். அனைத்து பணிகளும் நிறைவுற்றதும் இந்தியர்களுக்கு விரிவான சேவையை வழங்குவோம் என பி.எஸ்.என்.எல் நிறுவன தலைவர் அனுப்பம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளிலும், எல்லா சூழலிலும் செயற்கைக்கோள் போன்கள் வேலை செய்யும். இதற்கென பூமியில் இருந்து 35,700 கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள செயற்கைக்கோள்களை சார்ந்து சிக்னல்களை வழங்குகிறது. சாதாரன மொபைல் நெட்வொர்க்கள் 25-30 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட டவர்கள் மூலம் சிக்னல்களை வழங்குகின்றன.
முதற்கட்டமாக செயற்கைக்கோள் போன் சேவை INMARSAT சேவைகளாக வழங்கப்படுகிறது. இந்த சேவையானது முதற்கட்டமாக அரசு துறை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு அதன்பின் அனைவருக்கும் பல்வேறு கட்டங்களில் வழங்கப்படும். இந்த சேவை முற்றிலும் நெட்வொர்க் இல்லாத இடங்களிலும் வேலை செய்யும், இதற்கென 14 செயற்கைக்கோள்களை கொண்டுள்ள INMARSAT வழி செய்யும். பேரிடர் மீட்பு குழுவினர், மாநில காவல் துறை, எல்லை பாதுகாப்பு படை மற்றும் இதர அரசு நிறுவனங்களுக்கு செயற்கைக்கோள் போன்கள் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் செயற்கைக்கோள் போன் இணைப்புகள் மிகவும் குறைவாக இருந்தாலும், பி.எஸ்.என்.எல் சேவைகள் வழங்கப்பட்டதும் இந்த நிலை முற்றிலும் மாறிவிடும் என அனுப்பம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். செயற்கைக்கோள் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் ரூ.1 என்ற கட்டணத்தை மட்டுமே நிர்ணயம் செய்யவுள்ளோம். முதற்கட்டமாக செயற்கைக்கோள் போன்களின் அழைப்பு கட்டணங்கள் ரூ.30-ரூ.35 வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் போன்களின் விலை ரூ.40,000க்கும் அதிகமாக இருக்கும், எனினும் பயன்பாடு அதிகரிக்கும் போது அவற்றின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் செயற்கைக்கோள் போன் நிறுவனங்கள் இந்தியாவில் தயாரிப்பு ஆலைகளை கட்டமைக்கலாம். இதன் மூலம் செயற்கைக்கோள் சேவைகளுக்கு என தனி அத்தியாயம் துவங்கும் என அனுப்பம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.