Business Technology

ஏர்டெல் பிராட்பேண்ட்: பழைய விலையில் இருமடங்கு டேட்டா அறிவிப்பு

புதுடெல்லி:
பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு பழைய விலையில் 100 சதவிகிதம் கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சலுகை அதிவேக பிராட்பேண்ட் திட்டங்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சலுகை திட்டங்களின் படி மாதாந்திர பிராட்பேண்ட் திட்டங்களில் வாடிக்கையாளர்கள் 100 சதவிகிதம் கூடுதல் டேட்டா பெற முடியும் என பாரதி ஏர்டெல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ரூ.899 திட்டத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட 30 ஜிபி டேட்டாவுக்கு பதில் இம்முறை 60 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. இதேபோல் ரூ.1,099 திட்டத்தில் தற்சமயம் 90 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது, முன்னதாக இந்த திட்டத்தில் 50 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது.
ஏர்டெல் ரூ.1,299 திட்டத்தில் புதிய சலுகையின் கீழ் 125 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது, முன்னதாக இந்த திட்டத்தில் 75 ஜிபி மட்டுமே வழங்கப்பட்டது. ரூ.1,499 திட்டத்தில் 100 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்த நிலையில், புதிய சலுகையின் கீழ் 160 ஜிபி வழங்கப்படுகின்றது.
இதேபோன்ற கூடுதல் டேட்டா சலுகைகள் அனைத்து நகரங்களிலும் ஒவ்வொரு திட்டத்திலும் வழங்கப்பட்டுள்ளது, இத்துடன் அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் சேவையும் வழங்கப்படுகிறது என பாரதி ஏர்டெல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அதிவேக டேட்டா பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலரும் அதிக தரமுள்ள வீடியோ ஸ்டிரீமிங், புகைப்படங்களை தரவிறக்கம் செய்வது மேலும் டேட்டாவினை ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட் டிவி உள்ளிட்டவற்றிலும் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.