Business Technology

பேஸ்புக் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.773 கோடி அபராதம்

பிரசல்ஸ்
உலகின் பிரபல சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் இந்திய மதிப்பில் சுமார் 773 கோடி ரூபாய் அபராதம் செலுத்தும்படி அந்நிறுவனத்திற்கு ஐரோப்பிய யூனியன் உத்தரவிட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியை கைப்பற்றும் போது தவறான தகவல்களை வழங்கியதாக பேஸ்புக் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியனின் விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு பாடமாக இருக்கும் என ஐரோப்பிய யூனியனின் ஆணையர் மார்கரீத் வெஸ்டேகர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
நிறுவனங்கள் கைப்பற்றப்படும் போது ஏற்படும் போட்டிகள் குறித்து விரிவான தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முறையே வழங்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு குறித்து பேஸ்புக் வழங்கிய பதிலில் ஐரோப்பிய யூனியனுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் பேஸ்புக் வழங்கியுள்ளது. எனினும் சில தவறுகள் ஏற்பட்டது உண்மை தான், அவை வேண்டுமென்றே மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு நாங்கள் பதிவு செய்த தகவல்களில் சில தவறுகள் தெரியாமல் அரங்கேறியுள்ளன. மேலும் இந்த பிழை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இரு நிறுவனங்கள் இணைப்பு குறித்து நிறுவனங்கள் வழங்கும் தகவல்கள் முறையாகவும், மிகவும் துல்லியமானதாகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்க்ப்பட்டுள்ளது.