Business Technology

ரான்சம்வேர் பாதிப்பில் சிக்கிய, சிக்காமல் தப்பித்த இந்திய நிறுவனங்கள்: முழு தகவல்

புதுடெல்லி:
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை உருவாக்கிய இணையவழி தாக்குதல் கருவிகள் மூலம் உலகம் முழுக்க 150-க்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் கணினிகளை ‘ரான்சம்வேர்’ வைரஸ் தாக்கியது. உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள ரான்சம்வேர் வைரஸ் பாதிப்பினால் பல்வேறு நிறுவனங்கள் முடங்கின.
தற்சமயம் வரை சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஸ்வீடன், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் பதிவு செய்யப்பட்ட ரான்சம்வேர் மூலம் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பாதிப்பில் சிக்கிய நிறுவனங்கள்:
இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசு நிறுவனங்களின் கணினிகள் ரான்சம்வேர் மூலம் பாதிக்கபட்ட நிலையில் ஆந்திர பிரதேச மாநிலத்தின் சட்டமன்ற வளாகத்தின் கணினிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறும் போது சட்டமன்ற வளாகம் முழுக்க 20 கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட கணினிகளில இருந்து தரவுகளை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதே போன்று அம்மாநில வருவாய் துறையில் இருந்தும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக அம்மாநில காவல் துறையும் சைபர் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக திருப்பதி தேவஸ்தான கம்ப்யூட்டர்களில் ரன்சம்வேர் தக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று குஜராத் அரசுக்கு சொந்தமான சுமார் 120 கணினிகள் மீது ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் கணினியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தகவல்கள் அனைத்தும் அழிந்துபோனதாக அதிகாரி தெரிவித்தார்.
ஆந்திரா, குஜராத் போன்று கேரளாவிலும் ரான்சம்வேர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி வயநாடு மாவட்டத்தின் தரியோடு பஞ்சாயத்து அலுவலகத்தின் கம்ப்யூட்டர்கள் வைரஸ் தாக்குதலுக்கு பலியாகின. அதில் இருந்த தரவுகள் முடக்கப்பட்டதை தொடர்ந்து அவற்றை மீட்க 300 டாலர்கள் பிட்காயின்களாக தர வேண்டும் என்ற பிணைத் தொகை கேட்டு திரையில் தகவல் தெரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோன்று தமிழ் நாடு, ஒடிசா, மேற்கு வங்கம், மகாராஷ்ட்ரா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் ரான்சம்வேர் பாதிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரான்சம்வேர் பாதிப்பில் சிக்காமல் தப்பித்த நிறுவனங்கள்:
வானாகிரை ரான்சம்வேர் மூலம் ஏடிஎம் இயந்திரங்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதை தொடர்ந்து பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் முடக்கப்பட்டிருந்ததாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஏடிஎம் மையங்கள் ரான்சம்வேர் தாக்குதலில் இருந்து தப்பித்து கொண்டதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைமை தகவல் அதிகாரி ருத்யுன்ஜெய் மஹபத்ரா தெரிவித்துள்ளார்.
ஆதார் அடையாள அட்டைகளுக்கான தரவுகளை கொண்டுள்ள சர்வெர்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்டிருந்ததால் இவை ரான்சம்வேர் மூலம் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் சர்வர்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்கள் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டிருப்பதால் இவற்றை கொண்டு எதுவும் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சில முன்னணி நிறுவனங்கள் ரான்சம்வேர் மூலம் அதிகப்படியான பாதிப்புகளை சந்திக்கவில்லை என்றே தெரிவித்தன. ரான்சம்வேர் சார்ந்த முன் அறிவிப்புகள் ஏற்கனவே வெளியானதால் பல்வேறு நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு ரான்சம்வேர் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடிந்ததாக சைபர் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.