Cinema

நடிகர் ரித்தீஷ் மீது ரூ.2.18 கோடி மோசடி வழக்கு

 சென்னையை சேர்ந்தவர் ஆதிநாராயணன் சுப்பிர மணியன். இவர், சென்னை போலீஸ் கமி‌ஷனரிடம் கடந்த 2015-ம் ஆண்டு ஒரு புகார் கொடுத்தார். அதில், முன்னாள் எம்.பி.யும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் என்ற சிவகுமாரும், அவரது ஆட்களும் என்னுடைய மருமகனிடம் ரூ.2 கோடியே 18 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளனர் என்று கூறியிருந்தார்.
இந்த புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யாததால், ஆதிநாராயணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணையின்போது, புகார் மனுவில் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்பதால், இந்த புகாரை கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ந் தேதி முடித்து வைத்து விட்டதாக அரசு தரப்பு வக்கீல் கூறினார்.
இதை ஏற்காத நீதிபதி, முகாந்திரம் இல்லை என்று கூறி புகாரை முடித்து வைத்து போலீசார் தாக்கல் செய்த அறிக்கையை ரத்து செய்தார். ஜே.கே.ரித்தீஷ் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில், இந்த புகாரை மத்திய குற்றப்பிரிவு உதவி கமி‌ஷனர் விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறியிருந்தார். ஆனால், ஐகோர்ட்டு உத்தரவிட்டும் போலீசார் வழக்குப்பதிவு செய்யாததால், ஆதிநாராயணன், போலீஸ் கமி‌ஷனர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, 4 வாரத்துக்குள் வழக்குப்பதிவு செய்யாவிட்டால் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தார்.

இந்த நிலையில், நடிகர் ரித்தீஷ், அவரது மனைவி ஜோதீஸ்வரி, நாகநாத சேதுபதி பஷீர் என்ற நடிகர் வாலி, சுரேஷ் கண்ணன், முரளிதரன் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.