Cinema

யார் மகன் என்ற வழக்கில் நடிகர் தனுஷ் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு

நடிகர் தனுஷ் தாக்கல் செய்த வக்காலத்து மனுவில் அவரது கையெழுத்து போலியானது என கதிரேசன்-மீனாட்சி தரப்பினர் புகார் கூறி உள்ளனர்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் -மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்றும், அவரிடம் இருந்து ஜீவானம்சம் பெற்றுதர நடவடிக்கை எடுக்கக்கோரி மேலூர் கோர்ட்டில் கடந்த டிசம்பர் மாதம் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுவை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் தரப்பு சார்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தனுசின் அங்க அடையாளங்களை சரி பார்க்க உத்தரவிட்டனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதுதொடர்பாக அரசு மருத்துவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில் தனுசின் அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் கதிரேசன் அவரது வக்கீல் டைட்டஸ் மூலம் இன்று மேலூர் கோர்ட்டில் ஒரு மனு செய்து உள்ளார். அதில், நடிகர் தனுஷ் சார்பில் மேலூர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் போடப்பட்டுள்ள தனுசின் கையெழுத்து போலியானது. எனவே தனுஷ் கையெழுத்திட்ட மனுவின் நகலை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

இதுகுறித்து கதிரேசன்-மீனாட்சி தரப்பு வக்கீல் டைட்டஸ் கூறுகையில், மேலூர் கோர்ட்டில் நடிகர் தனுஷ் தாக்கல் செய்த வக்காலத்து மனுவில் உள்ள அவருடைய கையெழுத்து போலியானது. எனவே அந்த மனுவின் நகலை கேட்டு இன்று மனு செய்துள்ளோம் என்றார்.