Cinema

கஞ்சா க உதவுவார்கள்” – நெகிழ வைத்த சமுத்திரகனி

டூவிலரில் போன ஒரு மருத்துவர் அடிபட்டுக் கிடக்கிறார். என் காரில் இருந்து இறங்கி ஓடி அவரைத் தூக்கி அவருக்கு முதலுதவி செய்ய முயன்று கொண்டிருக்கிறேன். அப்போது ஒருவர் செல்பி எடுக்க என் தோளைத் தொட்டுத் திருப்பினார். படாரென அவரை அடித்து விட்டேன். ஒரு அவசர சூழலைக்கூடப் புரிந்து கொள்ளமுடியாத அளவுக்குச் சுயவிளம்பர மோகத்தில் இந்தச் சமூகம் இருக்கிறது. நாம் தொலைத்துக்கொண்டிருக்கும் மனிதத்தைத் தேடும் முயற்சிதான் இந்தப்படம்” என்று  தனது அடுத்தப் படமான ‘தொண்டன்’ குறித்து நம்பிக்கையுடன் பேசுகிறார் இயக்குநரும்,நடிகருமான சமுத்திரகனி.

படம் பற்றிக் கேட்ட போது..

“அப்பாவுக்குப் பிறகு நான் எழுதி இயக்கி இருக்கும் படம் ‘தொண்டன்’. இது அரசியல் படம் கிடையாது. படத்தின் தலைப்பை பார்த்து அனைவரும் அரசியல் படம் என்றுதான் நினைக்கிறார்கள். நானும் இதில் நடித்து இருக்கிறேன். யாரோ ஒருத்தன் அடிபட்டு விழுந்தால்,  தன்னை அறியாமல் உதவ ஓடும் யாருமே தொண்டன் தான். நம்மால் அடுத்தவன் தொந்தரவுக்குள்ளாகக்கூடாது என நினைக்கும் யாருமே தொண்டன் தான். அதை மனதில் வைத்துத்தான் இந்தப்படத்தை உருவாக்கி இருக்கிறேன். ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் ஓர் ஆண்டுக்கால வாழ்க்கைதான் இந்தப்படம். எப்பவுமே முதுகிற்குப் பின்னே   துடித்துக்கொண்டிருக்கும் ஒரு உயிரைக் காப்பாற்ற விரைந்து கொண்டிருப்பவனின் வாழ்க்கை. இதில் அழகான காதல் இருக்கும், கல்லூரி இருக்கும், இளமை, நகைச்சுவை என ஜனரஞ்சகமான படமாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் என் இயக்கத்தில் சிறந்த ஒன்றாக இது இருக்கும்”

“படத்தின் கதை ஏதோ ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது எனச் செய்திகள் வெளியானதே?”

“ஆமாம், எனக்கு நாளிதழ்களை ஒரு வரிகூட விடாமல் படிக்கும் பழக்கம் இருக்கிறது. அப்படிப் படித்துக் கொண்டிருந்த போது கரூரில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கு ஒரு கல்லூரியில் உள்ளே நுழைந்த ஒருவன் 60 மாணவ,மாணவர்கள் நிரம்பிய வகுப்பறையில் புகுந்து ஒரு மாணவியின் தலையில் கட்டையால் தாக்கியிருக்கிறார். அதை ஒருவர்கூடத் தடுக்கவில்லை. அப்படி ஒருவர் துணிச்சலாகத் தடுத்து இருந்தால் கூட அந்த மாணவி இன்று உயிருடன் இருந்து இருப்பார். அந்தச் சம்பவத்தை இதில் ஒரு காட்சியில் வைத்து இருக்கிறேன். மற்றபடி இது நிஜமும்,கற்பனையும் கலந்து மனித உணர்வுகளைப் பேசக்கூடிய படமாக இருக்கும்.”

“நண்பர்களை எந்தச் சூழலிலும் விட்டுக்கொடுக்காதவர் நீங்கள். உங்களிடம் முரண்பட்ட நண்பர் ஒருவர் இதில் மீண்டும் நடிக்கிறாரே?”

“சகோதரன் கஞ்சா கருப்பைச் சொல்லுகிறீர்களா? அவருக்குச் சினிமாவில் முதல் வசனத்தை சொல்லிக்கொடுத்ததே நான்தான்.  என்னுடைய படங்களிலும், நான் இருந்த படங்களிலும் உடன் இருந்தே வந்தவர். இடையில் அவர் என்னைப் பற்றிச் சில விஷயங்கள் ஊடகங்களில் பேசி இருந்தார். ஆனால் நான் அவற்றை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஏதோ ஒரு சூழ்நிலையில் அப்படிப் பேசுகிறார் என்று இருந்துவிட்டேன்.  இது பற்றிப் பேட்டி ஒன்றில் கேட்ட போது  சொன்னேன்; ‘என் அடுத்தப் படத்தில் கஞ்சா கருப்பு நடிக்கிறார். இதுதான் அவர் என்னைப் பற்றிப் பேசியதற்கு நான் சொல்லும் பதில்’ என்று தெரிவித்து இருந்தேன். இந்தப் படத்திற்கு இரண்டு முறை அழைத்தும் அவர் வரவில்லை. பின்னர் நானே போன் செய்து வரச்சொன்னேன். கதையில் அவரின் ரோலை கேட்டவுடன் ‘எனக்கு இவ்வளவு பெரிய ரோலா’ எனக்  கலங்கி விட்டார். என்றைக்கு இருந்தாலும் அவர் என் சகோதரன் தானே. நான் அவருக்குக் கைகொடுக்காமல் யார் கொடுப்பது.

தொடர்ந்து சமூகக் கருத்துக்கள் சொல்லும் படங்களாக நடித்துக்கொண்டிருக்கிறீர்கள்? அது சலிப்பாகத் தோன்றவில்லையா?

அது சராசரி மனிதனுக்கு இருக்கும் கோபமும்,கேள்வியும்தான் இது. பத்து பேரு இருக்கிற இடத்தில் ஒரு தவறான விஷயம் நடந்தா ஒருத்தனாவது எதிர்க் கேள்வி கேட்கவேண்டாமா? அதுதான் என் படங்கள். கேள்வி கேட்பது என் தவறென நினைக்க வில்லை. கேட்காமல் ஒதுங்கி நிற்பவர்களின் தவறு அது. என் குணம் கேள்வி கேட்கும் குணம். என் படைப்பிலும் அதுதான் வெளிப்படும்.