சென்னை ஐகோர்ட்டில் ஏ.சி.இ. என்ற நிதி நிறுவனம் ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தது. அதில், ஸ்ரீ கிரீன் புரொடக்சன் நிறுவனம் பாகுபலி-2 திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட உரிமம் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.சரவணன், கடந்த 2016-ம் ஆண்டு ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் கடன் கேட்டார்.
இந்த தொகை பிரபுதேவா ஸ்டூடியோ நிறுவனத்தில் பெயரில் வழங்கப்பட்டது. இந்த கடன் தொகையுடன் ரூ.10 லட்சம் வட்டியுடன் சேர்த்து, பாகுபலி படத்தை வெளியிடுவதற்கு முன்பாக தருவதாக சரவணன் கூறினார். இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் ஒப்பந்தமும் செய்யப்பட்டது.
இந்த கடன் தொகையை பாகுபலி-2 படம் வெளியான பின்னர் தருவதாக சரவணன் கூறுகிறார். இது கடன் ஒப்பந்தத்தை மீறும் செயலாகும். மேலும், அவருக்கு கடனை திருப்பித் தரவேண்டும் என்ற எண்ணம் இல்லை. எனவே, கடன் தொகையை வட்டியுடன் திருப்பித் தராமல் பாகுபலி-2 படத்தை வெளியிடக்கூடாது என்றும் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதித்தும் உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு பதிலளிக்கும்படி ஸ்ரீகிரீன் புரொடக்சன் நிறுவனத்துக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். அதுவரை பாகுபலி-2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார். விசாரணையை வருகிற 18-ந் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.