Cinema

நகைச்சுவை வேடத்தில் 300 படங்களில் நடித்த டி.பி.முத்துலட்சுமி

டி.ஏ.மதுரம், சி.டி.ராஜகாந்தம் ஆகியோரை அடுத்து, நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர், டி.பி.முத்துலட்சுமி. அவர் நடித்த படங்கள் சுமார் 300. முத்துலட்சுமியின் சொந்த ஊர் தூத்துக்குடி. தந்தை பொன்னைய பாண்டியர். தாயார் சண்முகத்தம்மாள். அவர்களுடைய ஒரே மகள் முத்துலட்சுமி.

தூத்துக்குடியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். படிக்கும்போதே, `பாட்டும், நடனமும் கற்றுக்கொண்டு சினிமா துறையில் நுழைய வேண்டும்’ என்ற ஆசை ஏற்பட்டது. எட்டாம் வகுப்பை முடித்தபோது, தன் விருப்பத்தை பெற்றோரிடம் கூறினார். அவர்கள் திடுக்கிட்டனர்.

முத்துலட்சுமியின் தந்தை ஒரு விவசாயி. “நமக்கெல்லாம் சினிமா ஒத்து வராது. அந்த ஆசையை விட்டு விடு” என்று கூறிவிட்டார்.

ஆனால் முத்துலட்சுமி மனம் தளரவில்லை. எப்படியும் சினிமா நடிகை ஆகவேண்டும் என்று உறுதி கொண்டார். சென்னையில் அவருடைய மாமா எம்.பெருமாள், டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் சினிமா கம்பெனியில் நடனக்கலைஞராகப் பணியாற்றி வந்தார். அவருடைய உதவியுடன் சினிமாத்துறையில் நுழைய முடிவு செய்தார். பெற்றோரிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு ரெயில் ஏறினார்.

முத்துலட்சுமிக்கு, பெருமாளே நடனமும், பாட்டும் கற்றுக்கொடுத்தார்.

அந்த சமயத்தில் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், “சந்திரலேகா”வை பிரமாண்டமாகத் தயாரித்து வந்தார். பெருமாளின் முயற்சியினால், “சந்திரலேகா”வில் வரும் முரசு நடனத்தில் இடம் பெறும் வாய்ப்பு முத்துலட்சுமிக்கு கிடைத்தது. ஏராளமான பெண்கள் பங்கு கொண்ட அந்த நடனக் காட்சியில், முத்துலட்சுமி நடனம் ஆடியதுடன், சில காட்சிகளில் டி.ஆர்.ராஜகுமாரிக்கு “டூப்”பாக ஆடினார்.

ஜெமினியில் 65 ரூபாய் மாத சம்பளத்தில் சில காலம் வேலை பார்த்தார்.

பின்னர் “மகாபலிசக்ரவர்த்தி”, “மின்மினி”, “தேவமனோகரி”, “பாரிஜாதம்” முதலான படங்களில் நடித்தார்.

1950-ல், மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த “பொன்முடி” படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். அது முத்துலட்சுமியின் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஏராளமான பட வாய்ப்புகள் தேடிவந்தன.

1951-ல் ஏவி.எம். தயாரித்த அண்ணாவின் “ஓர் இரவு” படத்தில், டி.கே.சண்முகத்தின் மனைவி பவானியாக நடித்தார்.

பின்னர் “சர்வாதிகாரி”, “ஏழை உழவன்” போன்ற படங்களில் நடித்தார்.

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த “திரும்பிப்பார்” படத்தில், சிவாஜிகணேசனின் தந்தையாக தங்கவேலு நடித்தார். (ஆரம்ப காலப்படங்களில், வயோதிக வேடத்தில் நடித்துப் புகழ் பெற்றவர் தங்கவேலு)

வயதான காலத்தில் தங்கவேலு மணக்கும் ஊமைப் பெண்ணாக டி.பி.முத்துலட்சுமி நடித்தார்.

1958-ல் வெளியான எம்.ஜி.ஆரின் பிரமாண்ட படமான “நாடோடி மன்ன”னில் முத்துலட்சுமிக்கு நகைச்சுவை வேடம் கிடைத்தது. அதில், தனக்கு விரைவில் கல்யாணம் நடக்க வேண்டும் என்பதற்காக, “புருஷன்! புருஷன்! புருஷன்” என்று பூஜை செய்வார்.

இதுபற்றி முத்துலட்சுமி கூறுகையில், “இந்தக் காட்சி படமாக்கப்படும்போது, படத்தின் டைரக்டரான எம்.ஜி.ஆர். அங்கே இருந்தார். “நன்றாக வேண்டிக்கொள். படம் திரையிடப்படுவதற்கு முன்பே உனக்கு நல்ல கணவர் கிடைப்பார்” என்றார். அவர் சொன்னபடியே, எனக்குத் திருமணம் நடந்தது. என்னையும், என் கணவரையும் வீட்டுக்கு அழைத்து எம்.ஜி.ஆர். விருந்து கொடுத்தார்” என்றார்.

சிவாஜி -சரோஜாதேவி நடித்த “இருவர் உள்ளம்” படத்தில், எம்.ஆர்.ராதாவின் ஜோடியாக முத்துலட்சுமி நடித்தார்.

“அறிவாளி” படத்தில் தங்கவேலுவுடன் இணைந்து நடித்தார். இதில், நகைச்சுவை காட்சிகள் பிரமாதமாக அமைந்தன.

மனோகரா, வஞ்சிக்கோட்டை வாலிபன், அடுத்த வீட்டுப்பெண், கொஞ்சும் சலங்கை, வீரபாண்டிய கட்டபொம்மன், தங்கப்பதுமை, மரகதம், வடிவுக்கு வளைகாப்பு, மக்களைப்பெற்ற மகராசி, மாயாபஜார், அனுபவிராஜா அனுபவி, திருவருட்செல்வர் உள்பட 300-க்கும் மேற்பட்ட படங்களில் முத்துலட்சுமி நடித்துள்ளார்.

பட உலக அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-

“தங்கவேலு அண்ணனுடன் பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளேன். அவர் நல்ல திறமைசாலி. கலைவாணரைப் பின்பற்றி படத்திற்கு ஏற்ப நகைச்சுவை காட்சிகளை அமைப்பார். பந்தா இல்லாதவர். படங்களில், அபசகுனமான எந்த வார்த்தையையும் உச்சரிப்பதில்லை என்று கொள்கையே வைத்திருந்தார்.

“டவுன் பஸ்” படத்தில், நானும், அஞ்சலிதேவியும் பஸ் கண்டக்டர்களாக நடிப்போம். அஞ்சலிதேவியின் ஜோடியாக கண்ணப்பாவும், எனக்கு ஜோடியாக ஏ.கருணாநிதியும் நடித்தனர். குறைந்த பட்ஜெட் படம். மிக வெற்றிகரமாக ஓடியது.

நடிகர் திலகம் சிவாஜி அண்ணன் நடித்த “அன்னையின் ஆணை”யில், தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்தப் படம் வெளிவந்தபோது, சிவாஜி அண்ணனுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு “தேன்மொழி” என்று அண்ணன் பெயரிட்டார்.

அரியலூர் ரெயில் விபத்தில் என் தாயார் இறந்துவிட்டார். அதுபற்றி எனக்கு தந்தி வந்தது. அது ஆங்கிலத்தில் இருந்ததால், சிவாஜியிடம் கொடுத்து, படித்துச் சொல்லும்படி கேட்டேன். அதைப் படித்த அவர், உண்மையைச் சொன்னால் நான் மிகவும் அதிர்ச்சி அடைவேன் என்று கருதி, “உன் தாயாருக்கு உடம்பு சரி இல்லையாம். உடனே புறப்படு” என்றுகூறி, தன்னுடைய காரில் என்னை அனுப்பி வைத்தார். ஒரு தங்கை போல் என்னிடம் பாசம் வைத்திருந்தார்.”

இவ்வாறு முத்துலட்சுமி கூறினார்.

முத்துலட்சுமியின் கணவர் பி.கே.முத்துராமலிங்கம். அரசு நிறுவனத்தில் சூப்பர்வைசராகப் பணியாற்றியவர். “தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக”த்தின் நிறுவனத் தலைவர்.

தமிழக அரசின் “கலைமாமணி” விருது, “கலைவாணர் விருது” உள்பட பல விருதுகளைப் பெற்றவர், முத்துலட்சுமி. இவருடைய மாமன் மகன்தான் டைரக்டர் டி.பி.கஜேந்திரன்.