Cinema Entertainment History Tamil World

உலகை மாற்றிய சாப்ளிங்- சுவாரசிய தகவல்கள

ஹாலிவுட்டின் தன்னிகரற்ற கலைஞரும், உலகுக்கே நம்பிக்கை யையும் நகைச்சுவையையும் வாரிவழங்கியவரு மான சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l லண்டனில் உள்ள வால்வோர்த் என்ற இடத்தில் பிறந்தவர் (1889). பெற்றோர் இசை அரங்குகளில் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். குடிப்பழக்கத்தால் சீரழிந்த தந்தை குடும்பத்தை விட்டுப் பிரிந்தார். இசை அரங்க நிகழ்ச்சிகளில் பங்கேற்று பார்வையாளர்களின் எதிர்பார்ப்புக்கு தாயால் ஈடுகொடுக்க முடியவில்லை.

l இதனால், ஐந்து வயது சிறுவன் சார்லியை முதலாளி மேடையில் ஏற்றினார். அவனும் ஆடிப்பாடி மற்றவர்களைப் போல பேசிக்காட்டி முதல் நாளன்றே ரசிகர் கூட்டத்தை வசியப்படுத்தி விட்டான்.

l சிறுவன் சார்லி குடும்பத்தைக் காப்பாற்ற லண்டன் நகரில் உள்ள நாடகக் குழுக்களுக்கான ஒரு செயலாளரை சந்தித்து வாய்ப்புக் கோரினான். வாய்ப்பும் கிடைத்து. 1912-ல் இந்தக் குழுவுடனான அமெரிக்கப் பயணம் திருப்புமுனையாக அமைந்தது.

l இளம் கலைஞரின் அபாரத் திறமையை உணர்ந்த ‘கீ ஸ்டோன்’ சினிமா நிறுவனத் தயாரிப்பாளர் தனது நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டார். இவர் நடித்த முதல் மவுனத் திரைப்படம் ‘மேக்கிங் ஏ லிவிங்’ 1914-ல் வெளிவந்தது. ‘கிட் ஆட்டோ ரேசஸ்’ இவரது இரண்டாவது படம். இதில் தொள தொள கால் சட்டை, சிறிய கோட்டு, ஹிட்லர் மீசை, சின்னத் தொப்பி, சிறு தடி’ என்ற இந்த கெட்டப்பில் இவரைப் பார்த்த உலகமே விழுந்து விழுந்து சிரித்தது. இதுவே பின்னர் இவரது அடையாளமானது. படம் பிரம்மாண்ட வெற்றியை ஈட்டியது.

l ஒரே வருடத்தில் 35 திரைப்படங்களில் நடித்தார். அனைத்துமே சாதனை படைத்தன. வெறும் நடிப்பு மட்டும் இல்லாமல், கதை, வசனம், இயக்கம், என அனைத்து துறைகளிலும் தன் தனி முத்திரையைப் பதித்தார். நடன அமைப்பு, இசையமைப்பையும்கூட இவர் விட்டுவைக்கவில்லை. பணமும், பெயரும் புகழும் குவிந்தது.

l 1919-ல் யுனைடட் ஆர்டிஸ்ட்’ என்ற ஸ்டுடியோவைத் தொடங்கினார். 1924-ல் இவர் தயாரித்த திரைப்படம் தி கிட் (The Kid) மகத்தான வெற்றி பெற்றது தொடர்ந்து வெற்றி மேல் வெற்றிதான். சமகால சமூகப் பிரச்சினைகளை மையமாக வைத்து இவர் தயாரித்த சிறந்த திரைப்படங்களில் ‘தி இமிகிரன்ட்’ முதன்மையானது.

l இவரது நிறுவனம் படங்களைத் தயாரித்ததுடன் விநியோகமும் செய்தது. 1936-ல் மவுனப் பட யுகம் நிறைவடைந்து பேசும் படக்காலம் தொடங்கியது. ‘மாடர்ன் டைம்ஸ்’ என்ற பேசும் படம் தயாரித்தார். இதில் இவர் பேசாமல்தான் நடித்தார். இந்தப் படமும் மகத்தான வெற்றி பெற்றது.

l படங்களில் இவர் பயன்படுத்திய நகைச்சுவை காட்சிகளைப் பயன்படுத்தாத உலகத் திரைப்படங்களே இல்லை என்று கூறிவிடலாம். மவுனப்படக் காலத்திலேயே உலகம் முழுவதும் பிரபலமான இவர் நடித்த படங்களின் விசிடிக்கள் இன்றும் உலகம் முழுவதும் விற்பனையாகின்றன.

l இவரது தி இம்மிகிரன்ட், தி கிட், தி கோல்ட் ரஷ், சிட்டி லைட்ஸ், மாடர்ன் டைம்ஸ், தி கிரேட் டிக்டேடர் ஆகிய ஆறு திரைப்படங்கள் அமெரிக்காவின் நேஷனல் ஃபிலிம் ரெஜிட்ரி அமைப்பில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இரண்டு முறை ஆஸ்கர் சிறப்பு விருதுகளை வென்றுள்ளார்.

l இங்கிலாந்து அரசு 1985-ல் இவரது உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலையை வெளியிட்டது. உலகையே சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து ஹாலிவுட்டில் தனித்துவம் வாய்ந்த மேதையாக இன்றளவும் போற்றப்படும் சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின் 1977-ம் ஆண்டில் 88-வது வயதில் காலமானார்.