Cinema Entertainment Flash

வியக்க வைக்கும் ‛கபாலி’ வியாபாரம்

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள ‘கபாலி’ படம் விரைவில் சென்சார் ஆக உள்ளது. இப்படத்தின் வியாபாரம் பற்றி நாளுக்கொரு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு உரிமை மட்டுமல்லாது பிற மாநில உரிமைகள், வெளிநாட்டு உரிமைகள், சாட்டிலைட் உரிமைகள் ஆகியவை இதுவரை தமிழ்த் திரைப்பட உலகில் வேறு எந்தப் படத்திற்கும் இல்லாத அளவிற்கு விலை பேசப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டு உரிமை மட்டும் சுமார் 80 கோடி ரூபாய் வரை விற்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதுவரை ரஜினிகாந்த் நடித்த படங்களிலேயே ‘எந்திரன்’ திரைப்படம்தான் அதிக அளவிற்கு விற்கப்பட்டது. அதிக அளவில் வசூல் செய்தது. சுமார் 132 கோடி ரூபாய் செலவில் தயாரான ‘எந்திரன்’ திரைப்படம் சுமார் 179 கோடி ரூபாயை வசூலித்தது.

‘கபாலி’ படத்தின் பட்ஜெட்டை ‘எந்திரன்’ படத்தை விட குறைவுதான். ஆனாலும், வியாபார அளவில் ‘எந்திரன்’ வியாபாரத்தையும் வசூலையும் முறியடிக்க வாய்ப்புகள் அதிகம் என கோலிவுட்டில் சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டு உரிமையுடன் படத்தின் சாட்டிலைட் உரிமையும் சேர்ந்து சுமார் 120 கோடி ரூபாய் வரை படம் விலை பேசப்பட்டு வருவதாகத் தெரிகிறது. அப்படி ஒரு வியாபாரம் நடைபெறும் பட்சத்தில் வேறு எந்த ஒரு படத்திற்கும் கிடைக்காத பெருமை ‘கபாலி’ படத்திற்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின், பிற மாநில உரிமை, வெளிநாட்டு உரிமை என ‘கபாலி’ படத்தின் வியாபாரம் மட்டுமே 200 கோடியைத் தாண்டும் என்கிறார்கள்.

image