Cinema Entertainment

60-ல் 6 மட்டுமே ஹிட் : மலையாள சினிமா 6மாத ரிப்போர்ட்..!

மலையாள திரையுலகம் படங்களை ரிலீஸ் செய்வதில் நம் தமிழ்சினிமாவை போல அவ்வளவு வேகமாக எல்லாம் இயங்குவதில்லை. நம்மவர்கள் இந்த ஆறு மாதத்தில் நூறு படங்களை தாண்டி ரிலீஸ் செய்துவிட மலையாளத்திலோ இப்போதுதான் 60 படங்களை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். இந்த 60 படங்களில் ஹிட், சூப்பர் ஹிட் என எல்லாம் சேர்த்தே வெறும் ஏழு படங்கள் தான் என்கிறது புள்ளிவிபரம். இதிலும் 100 நாட்கள் தாண்டியதோ ஒரு படம் தான்.

அந்தவகையில் நிவின்பாலி நடித்த ‘ஆக்சன் ஹீரோ பிஜூ’ தான் சுமார் 30 கோடி வசூலித்து முதலிடத்தில் இருக்கிறது. இத்தனைக்கும் இந்தப்படம் வெளியான முதல் வாரத்தில் வரவேற்பு குறைவாக இருந்ததால், அசலாவது தேறுமா என சந்தேகத்தையும் கிளப்பியது. ஆனால் மவுத் டாக்கினால் படம் பிக்கப் ஆகி, வெற்றிகரமாக 100வது நாளையும் தொட்டது. இதற்கு பிறகு வெளியான நிவின்பாலியின் இன்னொரு படமான ‘ஜேக்கப்பிண்டே சுவர்க்கராஜ்யம்’ படத்தின் வசூலையும் ஓட்டத்தையும் கூட ‘ஆக்சன் ஹீரோ பிஜூ’ தான் மட்டுப்படுத்தவும் செய்தது.

திலீப்பின் ‘கிங் லையர்’, துல்கர் சல்மானின் ‘கலி’, பிருத்விராஜின் ‘பாவாட’ ஆகிய படங்கள் இந்த வருடத்தில் அவர்களுக்கு முதல் வெற்றியாக அமைந்தன. ஆனால் துல்கரின் அடுத்த ரிலீஸாக வெளியான ‘கம்மட்டிப்பாடம்’ இப்போதும் சில தியேட்டர்களில் ஓடினாலும் கூட கலெக்சனில் டல் தான். அதேபோல பிருத்விராஜின் ‘ஜேம்ஸ் அன்ட் ஆலிஸ்’ படமும் சோபிக்கவில்லை. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான மம்முட்டி-நயன்தாரா இணைந்து நடித்த ‘புதிய நியமம்’ படம் ஏனோ பாக்ஸ் ஆபிசில் சோபிக்கவில்லை.

‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் வெற்றி கடந்த இரண்டு வருடங்களாக அதல பாதாளத்தில் சரிந்து கிடந்த பஹத் பாசிலின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது. இது தவிர ஜெயராமின் ‘ஆடுபுலியாட்டம்’ படமும் போட்ட முதலுக்கு மோசமில்லாமல், பதினான்கு பிளாப் படங்களுக்கு அடுத்து ஜெயராமுக்கு வெற்றிப்படமாக அமைந்து அவரது களங்கத்தை துடைத்தது. சமீபத்தில் முற்றிலும் புதுமுகங்களை வைத்து ‘பிரேமம்’ சாயலில் வெளியான ‘ஹேப்பி வெட்டிங்’ படம் ஆச்சர்யகரமாக 13 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

கடந்த வருட இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகை ரிலீஸாக வெளியான திலீப்பின் ‘2 கண்ட்ரீஸ்’ மற்றும் துல்கரின் ‘சார்லி’ இரண்டையும் இந்த பட்டியலில் சேர்த்துக்கொண்டால் இவையிரண்டுமே நூறு நாட்கள் ஓடியதுடன் நல்ல லாபத்தையும் சம்பாதித்து கொடுத்தன. மோகன்லாலின் படம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.. ஆனால் அடுத்த இன்னிங்ஸ் துவங்க இருப்பதுபோல வரும் ஜூலை மாதத்தில் மம்முட்டியின் ‘கசாபா’, மோகன்லாலின் ‘புலி முருகன்’, பிருத்விராஜின் ‘ஊழம்’ என மெகா ஹிட் படங்கள் அணிவகுக்க காத்திருக்கின்றன. முதல் இன்னிங்க்ஸ் ரெக்கார்டுகளை அவை மாற்றி எழுதும் என நம்புவோம்..!

image