கூன் விழுந்த முதுகுடன் இருப்பவர்கள் முதுகை சீராக்க உஷ்ட்ராசனம் உதவுகிறது. இப்போது இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.
உஷ்ட்ரம் என்றால் ஓட்டகம். இந்த ஆசனத்தை செய்யும் போது ஓட்டகத்தைப் போன்று தோற்றம் தருவதால் இதற்கு உஷ்ட்ராசனம் என்று பெயர்.
ஆண், பெண் பாகுபாடின்றி வயது பாகுபாடின்றி இளையோர் முதல் பெரியோர் வரை அவர்களது உடல் அமைப்பிற்கும் ஏற்றவாறு இவ்வாசனத்தை செய்யலாம்.
மலசலம் கழித்த பின்னரே இதை செய்ய வேண்டும். உணவு உண்டபின் ஆசனம் செய்யலாகாது. இவ்வாசனம் செய்யும் போது உடலில் வலி ஏற்பட்டால் ஆசனம் செய்வதை நிறுத்தி விட வேண்டும். எந்த ஒரு உறுப்பும் இறுக்கம் இன்றி தசைகள் தளர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.
செய்முறை :
முதலில் தரையில் முட்டி போட்டு நிற்கவும். அதாவது முழங்கால்களும் கணுக்கால்களும் தரையில் படுமாறு நிற்கவும். இரு பாதங்களும் மேல்நோக்கி இருக்க வேண்டும். இருபாதங்களையும் ஒன்றோடொன்று சேர்த்து வைக்கவும். மெதுவாக மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்துக் கொண்டே பின்பக்கமாக சாய வேண்டும். இடது உள்ளங்கையை இடது கால் பாதத்திலும் வலது உள்ளங்கையை வலது கால் பாதத்திலும் வைக்கவும்.
முதுகை எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு நன்றாக வளைக்கவும். தலையை பின்பக்கமாக தொங்கவிடவேண்டும். தலையின் உச்சிப்பகுதி தரையை பார்த்தபடி இருத்தல் சிறப்பானது. தொடைப்பகுதி உள்பக்கமாக சாய்ந்திருக்கக் கூடாது. தரைக்கு செங்குத்தாக இருக்க வேண்டும். இந்த நிலையில் சுமார் 30 நிநாடிகள் இருந்த பின் சாதாரண நிலையில் மூச்சு விடவும். பிறகு கைகளை ஒவ்வொன்றாக மேலே எடுத்து இயல்பு நிலைக்கு திரும்பவும்.
பயிற்சியின் போது வாயினால் மூச்சு விடக்கூடாது. உடல் குறுகுதலை தவிர்க்க வேண்டும். ஆடைகள் தளர்ச்சியாக இருத்தல் நல்லது. ஆசனம் நிதானமாகவும் மெதுவாகவும் படிப்படியாகவும் செய்ய வேண்டும். இவ்வாசனம் செய்ய காலை 4 மணி முதல் 6 மணி வரை செய்யலாம்.
இதய நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், முதுகுதண்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் இவ்வாசனத்தை செய்யக்கூடாது.
பயன்கள் :
இவ்வாசனம் முதுகு தண்டை உறுதி செய்வதில் மிக முக்கியமானதாகும். எளிதில் உணவுகளை ஜீரணிக்க செய்கிறது. குடல் இறக்கத்தை சரிசெய்து உணவு செரிமானத்தை சீராக்குகிறது. கூன் விழுந்த முதுகுடன் இருப்பவர்கள் முதுகை சீராக்க உஷ்ட்ராசனம் உதவுகிறது. கணையத்தின் சுரப்பு தன்மையை சீராக்குகிறது.
தோள் மூட்டுகளில் உள்ள குறைகளை தீர்க்க உதவுகிறது. கண்களின் பார்வை திறனை அதிகரிக்க செய்கிறது. இதயத்தை வன்மையடையச் செய்து இரத்த ஒட்டத்தை சீராக்குகிறது. கழுத்துபகுதி தசைகளை வலுப்படுத்துகிறது. மார்பு பகுதியை விரிவடையச் செய்து மார்பு தசைகளை வன்மையடையச் செய்கிறது. சிறுநீரக பிரச்சனைகளை சீர் செய்கிறது. நரம்பு தளர்ச்சியை நீக்கி புத்துணர்வு அளிக்கிறது. ஞாபக சக்தி, மன ஒருமைப்பாடு இவற்றை அதிகரிக்கிறது.