Fitness HealthTips

பிராணாயாமத்தைச் சரியாக எப்படிச் செய்வது?

ஒரு மூக்கை முழுவதுமாக மூடிக்கொண்டு, மற்றொரு மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுப்பதோ அல்லது வெளியே விடுவதோ செய்ய வேண்டும். அப்போது அந்த மூக்கு பாதி மூடியிருக்க வேண்டும். அப்போதுதான் உள்மூச்சு-வெளிமூச்சின் அளவு நன்கு நீளும்; மூச்சு மென்மையாகவும் சீராகவும் இருக்கும். இதில் உள்மூச்சையோ-வெளிமூச்சையோ அல்லது இரண்டையுமோ நீட்டச் செய்யலாம். இரு மூச்சு களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியைக் கூட்டலாம்.

நாங்கள் பயிற்சி செய்யும் யோகா மரபிலிருந்து முக்கியமான இரண்டு பிராணாயாமங்களை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். நீங்கள் ஆலோசனை பெறும் யோகா ஆசிரியர் தரும் பிராணாயாமம் இப்பயிற்சியிலிருந்து மாறுபடவும் வாய்ப்புள்ளது.

நாடி சோதனா பிராணாயாமம் :

* வலது கை விரல்களின் துணையோடு, வலதுபுற மூக்குத் துவாரத்தை முழுதாக அடைத்துக் கொள்ளவும்.

* இடது மூக்குத் துவாரம் பாதியளவு திறந்திருக்கட்டும்.

* இடது மூக்கு வழியே மூச்சை வெளியேற்றி, அதே மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும்.

* மூச்சை உள்ளே எடுத்து முடித்ததும் ஓரிரு வினாடிகளுக்குப் பின் இடதுபக்க மூக்கை முழுவதுமாக மூடிக்கொண்டு, வலதுபுற மூக்கைப் பாதியளவு திறந்து அதன் வழியே மூச்சை வெளியே விடவும்.

* ஓரிரு வினாடிகளுக்குப் பின், வலது மூக்கு வழியே மூச்சை உள்ளே இழுக்கவும். மீண்டும் இடது பக்க மூக்குத் துவாரம் வழியே மூச்சை வெளியே விடவும். இது ஒரு சுற்று ஆகும்.

இதுபோல ஆறு சுற்று, பத்து சுற்று அல்லது 12 சுற்று என்று தேவையை அறிந்து செய்த பின்பு வலது கையை மூக்கிலிருந்து எடுத்து விட்டு, சிறிது நேரம் அமைதியாக இருக்கலாம். எப்போது கை வலித்தாலும் கையைக் கீழிறக்கி சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம். பின்பு தொடரலாம். பிராணாயாமத்தை சரியான முறையில் செய்வது முக்கியம். ஆகவே, சரிபார்த்துக் கொள்ளுங்கள். கூடுதல் பலன்களை நிறைவாகப் பெறுங்கள்.