Fitness HealthTips

மனதிற்கு அமைதி தரும் சீதளி பிராணாயாமம்

சீதளி பிராணாயாமத்தை தொடர்ந்து செய்து வந்தால் உடல் குளிர்ச்சியடையும். சுவாசிக்கும் மூச்சுக்காற்றை உடலாலும் மனதாலும் ஆழமாக உணர முடியும். ஆழ்ந்த அமைதியை, மகிழ்ச்சியைப் பெறலாம்.

இப்போது சீதளி பிராணாயாமம் செய்யப்போகிறோம். வசதியான நிலையில் உட்கார்ந்துகொள்ளுங்கள். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இந்தப் பிராணயாமத்தை இடது, வலது மற்றும் நடுப்பகுதி என மூன்று நிலைகளில் செய்யப்போகிறோம்.

கைகளை இடது கால் முட்டியின் மேல் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்துக்கொள்ள வேண்டும். தலையைக் குனிந்த நிலையில் வைத்து, நாக்கை நீட்டி உருட்டிக்கொள்ளவும். உருட்டிய நாக்கு மூலம் (வாய் வழியாக) மூச்சை உள்ளிழுத்தபடியே தலையை மேலே கொண்டுசெல்லவும்.

மூச்சை நன்றாக இழுத்து முடித்ததும், ஓரிரு விநாடிகளுக்குப் பின் நாக்கை மடித்துக்கொண்டு வாயை மூடிக்கொண்டு மூக்கு வழியாக முச்சை வெளியேவிட்டபடி தலையை பழைய நிலைக்குக் கொண்டுவரவேண்டும். இதேபோல கைகளை வலது முட்டியின் மேல் வைத்து செய்ய வேண்டும். பின்னர், வலது கையை வலது மூட்டின் மேலும், இடது கையை இடது மூட்டின் மேலும் வைத்து செய்ய வேண்டும்.

நாக்கு லேசாக வெளியே வந்தால் போதும். மூச்சு உள்ளிழுக்கும்போது சிறிது சத்தம் வரலாம். முடிந்தால் கண்களை மூடிக்கொள்ளுங்கள். மூன்று நிலைகளிலும் செய்து முடித்தவுடன், சிறிது நேரம் அமைதியாக இருக்கலாம். தேவையெனில், முதுகுப் பக்கம் படுத்து ஓய்வு எடுக்கலாம்.

பலன்கள்:  உடல் குளிர்ச்சியடையும், மனம் அமைதியாகும். சுவாசிக்கும் மூச்சுக்காற்றை உடலாலும் மனதாலும் ஆழமாக உணர முடியும். நிறைவான உணர்வு ஏற்படும். ஆழ்ந்த அமைதியை, மகிழ்ச்சியைப் பெறலாம்.

ஆசனத்தை முடித்தவுடன், சிறிது நேரம் வசதியான நிலையில் இருந்து ஓய்வு எடுக்கலாம். அது, மூச்சை இயல்பு நிலைக்குக் கொண்டுவர உதவும்.

குறிப்பு: நாக்கை உருட்ட முடியவில்லை என்றால், நாக்கை லேசாக உள்ளிழுத்தபடி, இரு பல் வரிசைகளுக்கு இடையில் வைத்துக்கொண்டு சீதளியின் தலை அசைவு, மூக்குவழி வெளிமூச்சு ஆகியவற்றைச் செய்யலாம். இது சீத்காரி பிராணாயாமம் எனப்படும். இதற்குப் பிறகு கைகளை கோர்த்துக்கொண்டு சிறிது நேரம் அமைதியாக இருக்கலாம்.