HealthTips

அடுத்த 20 ஆண்டுகளில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 12 கோடியாக அதிகரிக்கும்: பொது சுகாதார நிறுவனம் தகவல்

 ஐதராபாத்:

இந்தியாவில் தற்போது 7 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்காக சர்க்கரை நோயாளிகள் ஆண்டொன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்கின்றனர். இந்த நிலையில் அடுத்த 20 ஆண்டுகளில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 12 கோடியாக அதிகரிக்கும் என இந்திய பொது சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பொது சுகாதார நிறுவன தலைவர் ஜி.வி.எஸ்.மூர்த்தி கூறுகையில் “7 கோடி சர்க்கரை நோயாளிகளுடன் சர்க்கரை நோயாளிகள் அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. 11 கோடி சர்க்கரை நோயாளிகளுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அடுத்த 20 ஆண்டுகளில் 12 கோடியைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்க்கரை நோயாளிகள் நீண்ட காலத்திற்கு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நோயைக் கட்டுக்குள் வைக்காவிடில் கண்கள், சிறுநீரகம் ஆகியவற்றைப் பாதித்து விடும். தேவையான மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்ளாவிடில் மன அழுத்தம் வர வாய்ப்புண்டு. எனவே நோயாளிகள் முன்னதாகவே ஆலோசனை பெறுவது நல்லது.

சர்க்கரை நோய் உட்பட தொற்றாத நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மத்திய அரசு 2011-ம் ஆண்டு தேசிய அளவிலான திட்டம் ஒன்றை 100 மாவட்டங்களில் தொடங்கியது. தற்போது இத்திட்டம் 500 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனைகளில் சர்க்கரை நோய்க்கு இலவச மருந்துகள் வழங்கப்படும்” என்றார்.