உட்கார்ந்து செய்யும் ஆசனங்களில் சுகாசனம் சுலபமானது. எளிமையானது. இப்போது இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
செய்முறை :
கீழே ஒரு விரிப்பை விரித்துக்கொள்ள வேண்டும். நேராக அமர்ந்து வலது காலின் குதியை இடது தொடையின் மேல் இருக்கும்படி செய்யவேண்டும். இடது காலின் குதிகால் வலது தொடையின் அடியில் செருக வேண்டும். இரண்டு கைகளையும் இரண்டு முழங்கால்களில் வைக்க வேண்டும்.
சுவாசம் இயல்பாய் போய்க்கொண்டிருக்க வேண்டும். முதுகுத்தண்டும், கழுத்து, தலையும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். கண் பார்வை மூக்கு நுனியை பார்க்க வேண்டும். சரீரத்தை மிகவும் விறைப்பாக வைக்க வேண்டாம். சோர்வாக இருந்தால் கால்களை மாற்றி அமர்ந்து கொள்ளலாம்.
பூஜை, தியானம், போஜனம் ஆகிய சந்தர்ப்பங்களில் இந்த ஆசனத்தை செய்யலாம். ஐந்து நிமிடத்திலிருந்து மூன்று மணிநேரம் வரை அமர்ந்து இருக்கலாம். ஜபம் செய்யும்போது மூன்று மணிநேரம் வரை காலை மாற்றாமல் சோர்வின்றி அமர முடிந்தால் இந்த ஆசனம் சித்தியாகிவிட்டது என்று யோகிகள் கூறுவார்கள்.
சரீர ஆசனத்தை முன்னிட்டு இந்த ஆசனத்தை அவ்வளவு நீண்ட நேரம் செய்யத் தேவையில்லை. வசதிக்கு ஏற்றவாறு காலை மாற்றி மாற்றி செய்யலாம். ஆனால் முதுகுப்பகுதி நேராக இருப்பது அவசியம். மிகவும் விறைப்பாக இருக்க வேண்டாம். நாம் சுகமாக அமர்ந்துள்ளோம் என்று மனதை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்.
இதில் தேகம், மனம், பிராணன், புலன்கள் ஆகியவை அதிகம் சோர்வாவதில்லை. சரீரத்தின் கீழ் பகுதியும், இடுப்பும் நரம்புகளும் உறுதிப்பட்டு பலப்படுகின்றன. முதுகுத்தண்டும் ஆரோக்கியமாகி பலப்படுகிறது. யோகிகளுக்கு சுஷுனா நாடி வழியாக பிராணவாயு சீராக போகும். தியானத்தில் மனம் ஒருமைப்படும். சஞ்சலம் அடையாது