விபூதி தருவித்தல், மோதிரங்கள், சங்கிலிகள், கடிகாரங்கள் போன்ற சிறிய பொருட்களை தருவித்தல் போன்ற இவரது செய்கைகளினால் இவர் மீது உலக நாடுகளில் பலத்த சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. இவை எளிய வித்தைகளே என பகுத்தறிவாளர்கள் நிரூபித்து உள்ளார்கள். ஆனாலும் இவற்றை இவரது பக்தர்கள் இறைவனின் அற்புதம் என கருதுகின்றனர்.
சத்திய சாயிபாபா தனது 14-வது வயதில் ஷீரடி சாய் பாபாவின் மறு அவதாரம் எனத் தன்னை அறிவித்துக் கொண்டார். சத்திய சாய் பாபா நிறுவனம் தனது சாய் அமைப்புகள் மூலம் இலவச மருத்துவ நிலையங்கள், பாடசாலைகள், உயர்கல்வி நிலையங்கள், கிராமங்களுக்கு குடிநீர்த் திட்டம் போன்ற பல சமூகநலத் திட்டங்களை இந்தியாவிலும் வேறு பல நாடுகளிலும் அறிமுகப்படுத்தி நடத்தி வருகிறது.
இவரது ஏறத்தாழ 1200 சத்ய சாய் அமைப்புகள் 114 மையங்களில் உலகெங்கிலும் செயல்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது. இவரின் வழிநடப்பவர்கள் சுமார் 60 இலட்சம் பேர் (1999-ல்) எனக் கணக்கிடப்பட்டுள்ளது. உலகெங்கிலும் 100 கோடி அடியார்கள் உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.
84 வயதான சாயி பாபா உடல் நலக்குறைவு, மூச்சுத் திணறல் காரணமாக சத்திய சாயி மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் 2011 மார்ச் 28-ம் திகதி சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார் இவரது உயிர் பிழைப்பிற்காக பக்தர்கள் பிராத்தினைகள் செய்து வந்தனர். இவரது உடல் நிலையில் பெரும் அளவில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் பாபாவின் உடல் நிலையை கவனித்து வந்தனர். இந்நிலையில் 2011 ஏப்ரல் 24 ஞாயிற்றுக்கிழமை காலை இந்திய நேரம் 07:40 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.