அணு ஆயுதப் பரவலைத் தடுக்கும் வகையில் செயல்படும் இந்தியாவின் கொள்கைக்கு வலுவூட்டும் வகையில், எம்.டி.சி.ஆர்., எனப்படும், ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பின், 35வது உறுப்பினராக, இந்தியா இணைந்துள்ளது.
ஏவுகணைகள், ராக்கெட்கள், ஆளில்லா விமானம் உள்ளிட்டவற்றை அதிக அளவில் தயாரிப்பதை கட்டுப்படுத்தவும், 500 கிலோ எடையுள்ள, 300 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை தாக்கக்கூடிய அணு ஆயுதம் மற்றும் பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய ஆயுதத் தயாரிப்பை கட்டுப்படுத்தவும் அமைக்கப்பட்டது, இந்த அமைப்பு.இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள், மிகவும் உயர்ந்த ஏவுகணை தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வதுடன், கூட்டாக இணைந்து ஏவுகணைகளை தயாரிக்கவும் முடியும். இந்த அமைப்பில் உறுப்பினராவது, இந்தியாவின் அணு ஆயுதப் பரவலைத் தடுக்கும் சுயக் கட்டுப்பாட்டு கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.
கடந்த, 1998ல், பொக்ரானில் அணு ஆயுத சோதனையை இந்தியா நடத்தியது. அதன் பின், அணுசக்தியை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு மட்டுமே இந்தியா பயன்படுத்தி வருகிறது. 2008ல், அமெரிக்காவுடன் அணுசக்தி
தொடர்பான ஒப்பந்தத்தை இந்தியா செய்து கொண்டது.
அதன்பின், என்.எஸ்.ஜி., எனப்படும் அணுசக்தி வினியோக குழுமம், எம்.டி.சி.ஆர்., ஆஸ்திரேலிய குழுமம் மற்றும் ‘வெஸ்ஸநார்’ அமைப்பு ஆகிய அணு, உயிரி மற்றும் ரசாயன ஆயுதம் மற்றும் தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்தும் அமைப்பில் இணைய, இந்தியா முயற்சித்து வருகிறது.
அந்த
வகையில், 34 நாடுகள் உறுப்பினராக உள்ள ஏவுகணை கட்டுப்பாட்டு அமைப்பான, எம்.டி.சி.ஆர்., அமைப்பில் இந்தியா தற்போது நிரந்தர உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இதற்கான ஒப்பந்தத்தில், வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர் கையெழுத்திட்டார்.
பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் லக்ஸம்பர்க் ஆகிய நாடுகளின் துாதர்கள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ‘இந்தியாவின் அணு ஆயுதப் பரவலுக்கு எதிரான கொள்கைக்கு கிடைத்த அங்கீகாரம் இது’ என, வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
என்ன பயன் கிடைக்கும்?
விமான உதிரிபாக மற்றும் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு ஆலைகள் சங்கத்துக்கான தமிழக தலைவர் சேகர் கூறியதாவது:தலிபான் போன்ற பயங்கரவாதிகள் மற்றும் அதுபோன்ற குழுக்களுக்கு ஆதரவாக உள்ள நாடுகளின் கைகளுக்கு, அதிநவீன ஏவுகணை தொழில்நுட்பம் போய்விடக் கூடாது என்றநோக்கில், இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த அமைப்பில் சேர்ந்திருப்பதன் மூலம், இந்தியாவிற்கு இதுவரை கிடைக்காத ராணுவ தொழில்நுட்பங்கள் குறிப்பாக, ஏவுகணைகள் பற்றிய விரிவான தகவல்கள் கிடைக்கும். இதுவரை அமெரிக்கா, ரஷ்யா போன்ற ராணுவ வல்லரசுகளின் ஏவுகணை தொழில்நுட்பம், நமக்கு கிடைத்தது இல்லை. இனி, அந்நாடுகளின் தொழில்நுட்பம் நமக்கு எளிதாக கிடைக்கும். இதன் மூலம், இந்தியாவின் ராணுவ வல்லமை அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சீனாவுக்கு இல்லை
எம்.டி.சி.ஆர்., அமைப்பில் உறுப்பினராவதற்கு, சீனாவும் விண்ணப்பித்திருந்தது; ஆனால், அந்த விண்ணப்பம் மீது, எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.என்.எஸ்.ஜி.,யில் உறுப்பினராக இந்தியா விண்ணப்பித்திருந்தது. 48 நாடுகள் அடங்கிய அந்த அமைப்பில், இந்தியா உறுப்பினராக, சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இத்தாலி திடீர் ஆதரவு
இந்த அமைப்பில் இந்தியா இணைவதற்கு, கடந்த ஆண்டு இத்தாலி எதிர்ப்பு தெரிவித்தது. கேரளா அருகே, மீனவர்களை சுட்டுக் கொன்றதாக இத்தாலி கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தால் இத்தாலி எதிர்ப்பு தெரிவித்து வந்தது.தற்போது, இந்த வீரர்களுக்கு ஜாமின் அளிக்கப்பட்டு, இத்தாலிக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், இந்தியாவுக்கு இத்தாலி ஆதரவு தெரிவித்துள்ளது.