மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா அவர்கள், ஆந்தர மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வாழும் ஒரு கர்நாடக இசைக் கலைஞராவார். இவர் பாடகர் மட்டுமல்லாமல், சிறந்த பாடல் இயற்றுநர் மற்றும் மாபெரும் இசைக்கருவி வல்லுனரும் ஆவார். “பத்ம ஸ்ரீ”, “பத்ம பூஷன்”, “பத்ம விபூஷன்” மற்றும் “சங்கீத கலாநிதி” போன்ற இசையுலகின் உயரிய விருதுகள் அனைத்தையும் பெற்று, சங்கீத சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாக விளங்கும்பாலமுரளிகிருஷ்ணா தன்னுடைய வசீகரக்குரலால் சிறு வயதிலேயே இசைமேதை என புகழப்பட்டார். இப்படிப்பட்ட மாபெரும் கலைஞனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி விரிவாகக் காண்போம்.
பிறப்பு:ஜூலை 06, 1930
இடம்:சங்கரக்குப்பம், கிழக்கு கோதாவரி மாவட்டம்(ஆந்திரப் பிரதேசம்)
பணி:கர்நாடக இசை பாடகர்
நாட்டுரிமை:இந்தியா
பிறப்பு:
மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணாஅவர்கள், 1930ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06ஆம் நாள், இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் வடகிழக்கு பகுதியிலுள்ள கிழக்குகோதாவரி மாவட்டத்தில், சங்கரக்குப்பம் என்ற ஊரில் மங்களம்பிள்ளை பட்டாபிராமையாவுக்கும், சூர்யகாந்தம்மாவிற்கும் மகனாகப் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை:
மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் தந்தை, தாய் இருவருமே மிகச்சிறந்த இசைக் கலைஞர்கள் ஆவார்கள்.அவருடைய தந்தையாகிய மங்களம்பிள்ளை பட்டாபிராமையா அவர்கள், ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும்,புல்லாங்குழல் வாசிப்பதில் சிறப்புப் பெற்றவராகவும் திகழ்ந்தார். இவருடைய தாய் சூர்யகாந்தம்மா, வயலின் மற்றும் வீணை வாசிப்பதில் சிறப்புப்பெற்றவராகவிளங்கினார். இவர் குழந்தையாக இருக்கும் பொழுதே இவருடைய தாய் இறந்துவிடவே, தன்னுடைய தந்தையின் அரவணைப்பில்இருந்தார்.பின்னர், கர்நாடக இசைப் பாடகரான “ஸ்ரீ பருபள்ளி ராமகிருஷ்ணய்யா பந்துலுவின்(இவர் கர்நாடக இசை மற்றும் பாரம்பரிய தென்னிந்திய இசையில் புகழ்பெற்று விளங்கிய தியாகராஜரின்(1767-1847) சீடர் ஆவார்) கீழ் வளர்ந்தார்.
இசைப் பயணம்:
ஸ்ரீ பருபள்ளி ராமகிருஷ்ணய்யா பந்துலுவின் வழிகாட்டுதலில், இளம் வயதிலேயே கர்நாடக இசையில் தேர்ச்சிப்பெற்று விளங்கிய முரளிகிருஷ்ணா அவர்கள்,தன்னுடைய எட்டு வயதில் “தியாகராஜ ஆராதனா” என்ற முழு நீல இசை நிகழ்ச்சியை விஜயவாடாவில் முதன் முதலில் மேடையில் அரங்கேற்றினார்.இவ்வளவு சிறுவயதில் முரளிகிருஷ்ணாவின் மனம்மயக்கும் இசையில் நெகிழ்ந்து போன ஹரிகதை மேதை “முசூநுரி சூர்யநாராயண மூர்த்தி பாகவதர்” கிருஷ்ணாவின் பெயருக்கு முன்னால் “பாலா” என்ற சொல்லை இணைத்தார். அன்று வரை ‘முரளிகிருஷ்ணா’ என அழைக்கப்பட்ட அவர், பிறகு ‘பாலகிருஷ்ணா’ என அழைக்கப்பட்டு மிகவும் பிரபலமானார்.
தன்னுடைய இளம் வயதிலேயே இசைப் பணியைத் தொடங்கிய பாலகிருஷ்ணா,பதினைந்து வயதில் கர்நாடக இசையின் ராகங்களில் ‘ச-ரி-க-ம-ப-த-நி’ என்ற ஏழு சுரங்களையும் கொண்ட மேளகர்த்தா இராகத்தில் 72 கீர்த்தனைகளைத் தொகுத்து வழங்கினார்.வர்ணங்கள், கீர்த்தனைகள், ஜாவளிகள், தில்லானாக்கள் என்று 400-க்கும் மேற்பட்ட உருப்படிகளை தமிழ், தெலுங்கு மற்றும் சமஸ்கிருத மொழிகளில் உருவாக்கியுள்ளார். தாய்மொழி தெலுங்கு என்றாலும், அவர் தமிழ், கன்னடம், சமஸ்கிருதம், மலையாளம், இந்தி, பஞ்சாபி, வங்கம் என பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்தப்‘பன்முக மேதை’ஆவார். கர்நாடக இசைப் பாடகராக புகழ்பெற்று விளங்கிய அவர், பிறகு கஞ்சிரா, மிருதங்கம், வயோலா மற்றும் வயலின் வாசிக்கவும் தொடங்கினார்.
இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாட்டவர் மத்தியிலும் இந்திய இசையை கொண்டுசேர்த்துள்ளார். அமெரிக்கா, கனடா, பிரிட்டன், இத்தாலி, ஃ,பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, ரஷ்யா, மத்திய கிழக்கு ஆசியா மற்றும் பல நாடுகளில் தன்னுடைய இசை நிகழ்ச்சியை அரங்கேற்றியுள்ளார். புகழ் பெற்ற பீம்ஷன் ஜோஷி, ஹரிபிரசாத் சௌராஷியா, கிஷோரி மற்றும் அமோம்கர் போன்றோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
திரைப்படத் துறையில் பாலமுரளிகிருஷ்ணா:
கர்நாடக சங்கீதத்தை சினிமாவில் வெற்றிகரமாகப் பயன்படுத்தியவர்களுள் இவரும் ஒருவர். பால முரளிகிருஷ்ணா அவர்கள், தெலுங்கு, தமிழ், கன்னடா மற்றும் மலையாளம் போன்ற மொழித் திரைபடங்களில் பின்னணிப் பாடகராகவும், மற்றும் ஒரு சில திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். 1967 ஆம் ஆண்டு, ஏ.வி.எம் தயாரிப்பில் வெளிவந்த “பக்தா பிரஹலாதன்” என்ற திரைப்படத்தில் நாரதராக நடித்துள்ளார்.1976 ஆம் ஆண்டு, இவருக்கு சிறந்த பின்னணிப் பாடகருக்கான “தேசிய திரைப்பட விருது” (‘ஹிமாத்ரி சுதே பஹிமம்’ என்ற பாடலுக்காக) மற்றும் 1987 ஆம் ஆண்டு சிறந்த இசை அமைப்பாளருக்கான “தேசிய திரைப்பட விருது” (‘மத்வாச்சார்யா’ என்ற திரைப்படத்திற்காக) வழங்கப்பட்டது.
விருதுகள்:
- 1978 ஆம் ஆண்டு “சங்கீத கலாநிதி விருது”,சென்னை மியூசிக் அகாடெமி என்ற அமைப்பால் வழங்கப்பட்டது.
- 2002 ஆம் ஆண்டு “இசைப் பேரறிஞர்” விருது தமிழ் இசைச் சங்கம் மூலமாக வழங்கப்பட்டது.
- 2011ஆம் ஆண்டுவாழ்நாள் சாதனையாளருக்கான “குளோபல் இந்தியன் மியூசிக் அகாடெமி” விருது வழங்கப்பட்டது.
- 1971ஆம் ஆண்டு “பத்மஸ்ரீ” விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது.
- 1991 ஆம் ஆண்டு மத்திய அரசால் “பத்ம விபூஷன்” விருது வழங்கி கௌரவிக்கபட்டது.
பாலமுரளிகிருஷ்ணா அவர்கள்நல்ல குரல்வளம் மட்டுமன்றி,பலமொழிகளில் சிறந்த உச்சரிப்புடன் அழகாகப் பாடும் வல்லமைப் பெற்றவரும் கூட.உண்மையான கர்நாடக சங்கீதத்தை மக்கள் ரசனைக்கு எடுத்துச் சென்ற முரளிகிருஷ்ணா அவர்கள்,மற்றவர்கள் இதுவரை எடுத்தாளாத இராகங்களை இயற்றிப் பாடியிருக்கிறார்.இந்திய இசையை இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாட்டவர் மத்தியிலும் கொண்டு சென்ற சங்கீத மாமேதை பாலமுரளிகிருஷ்ணாவின் இசைப் பணிகள் மகத்தானவையே!