Home » சந்திரசேகர ஆசாத்
Life History சுதந்திர போராட்ட வீரர்கள்

சந்திரசேகர ஆசாத்

சந்திரசேகர ஆசாத் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தன்னுடைய மாணவப் பருவத்திலிருந்தே பாரத நாட்டின் மீது தீவிர பற்றுடையவராகவும், சோசலிச முறையில் இந்தியா விடுதலை அடைவதை கொள்கையாக கொண்டும் போராடியவர்.

ஒரு துடிப்பு மிக்க இலஞனாக மட்டுமல்லாமல், இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் மாபெரும் புரட்சிவாதியாக திகழ்ந்த சந்திரசேகர ஆசாத்தின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாக காண்போம்.

பிறப்பு: ஜூலை 23, 1906

இடம்: பாப்ரா (சபுவா மாவட்டம்) உத்திரபிரதேசம், இந்தியா

பணி: விடுதலை போராட்ட வீரர்

இறப்பு: பிப்ரவரி 27, 1931

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

சந்திரசேகர சீதாராம் திவாரி எனப்பட்ட சந்திரசேகர ஆசாத் அவர்கள், 1906 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23  ஆம் நாள் இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சபுவா மாவட்டத்திலுள்ள “பாப்ரா” என்ற இடத்தில் சீதாராம் திவாரிக்கும், ஜக்ராணி தேவி என்பவருக்கும் மகனாகப் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

இவருடைய தந்தை அலிஜார்பூரில் பணியாற்றி வந்ததால், இவர் தன்னுடைய இளமைக் காலத்தை மத்திய பிரதேச மாநிலம் சபூவா என்ற மாவட்டத்திலுள்ள பாப்ராவில் கழித்தார். இவரது தாயான ஜக்ராணி தேவி, இவரை சமஸ்கிரதம் கற்க காசியிலுள்ள பெனாரசுக்கு அனுப்பினார். சந்திரசேகர ஆசாத் முறையாக வில் வித்தையும் கற்றுத் தேர்ந்தார்.

விடுதலை போராட்டத்தில் சந்திரசேகர் ஆசாத்தின் பங்கு

1919ல் நடந்த ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்’, சந்திரசேகர ஆசாத்தினை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது எனலாம். இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஆங்கில அரசு ‘ரெஜினால்ட் டையர்’ என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் வெள்ளையர் ஆட்சி மீது சந்திரசேகர ஆசாத்திற்கு வெறுப்புணர்வை அதிகரித்தது. பிறகு, பிரித்தானிய இந்தியாவில் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு தன்னுடைய 15 வயதில் கைது செய்யப்பட்டு குற்றவியல் நடுவரிடம் கொண்டு செல்லப்பட்டார். நடுவர் அவரிடம் பெயர், தந்தைப்பெயர் மற்றும் முகவரியை கேட்டபொழுது அவர் முறையே “ஆசாத் (ஆசாத் என்றால் விடுதலை), சுதந்திரம் மற்றும் சிறை” என்றார். இதனால், கோபமுற்ற நடுவர், சந்திரசேகரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கு சந்திரசேகர ஆசாத், ‘நான் அப்படிக் கூறினால்தான், நீங்கள் என்னை சிறைக்கு அனுப்புவீர்கள்’ என்றார். மேலும் கோபம் கொண்ட நடுவர், 15  பிரம்படி கொடுக்கவும் உத்தரவிட்டார். தண்டனையை வீரமுடன் ஏற்ற அவர், ஒவ்வொரு பிரம்படிக்கும் “பாரத் மாதா கீ ஜே” என குரலெழுப்பி பாரத நாட்டின் மீது கொண்ட சுதந்திரப்பற்றை வெளிபடுத்தினார். அன்று முதல், அவர் ‘சந்திரசேகர ஆசாத்’ என அழைக்கப்பட்டார்.

மகாத்மா காந்தி, ஒத்துழையாமை கொள்கையைக் கைவிட்ட பிறகும், கொள்கையில் உறுதியாய் இருந்த சந்திரசேகர ஆசாத், முழு சுதந்திரத்தை எந்த வழியிலும் அடைந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். பிறகு, இந்துஸ்தான் குடியரசு அமைப்பின் கொள்கைகளில் ஈடுபாடுகொண்ட அவர், 1925  ஆம் ஆண்டு காகோரி ரயில் கொள்ளையில் ஈடுபட்டார். இந்த ரயில் கொள்ளைக்கு பிறகு, ஆங்கில அரசு புரட்சியாளர்களை ஒடுக்க தீவிரம் காட்டியது.

சந்திரசேகர ஆசாத், பகவத் சிங், சுக் தேவ், ராஜ்குரு போன்றவர்கள் இணைந்து சோசலிச முறையில் இந்தியா விடுதலை அடைவதை கொள்கையாக கொண்டு இந்துஸ்தான் குடியரசு அமைப்பினை “இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு” என உருவாக்கினர்.

இறப்பு

1931 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் நாள் அலகாபாத்திலுள்ள “அல்ப்ரெட்” பூங்காவில் தன்னுடைய இயக்கத்தாருடன் பேசிக்கொண்டிருந்த பொழுது ஆங்கில அரசால் சுற்றிவளைக்கப்பட்டார். நீண்ட நேரம் ஆங்கில காவல் துறையினரிடம் போராடிய அவர், காலில் குண்டடிபட்டு தப்பிசெல்லமுடியாமல், துப்பாக்கியில் ஒரே ஒரு தோட்டா மீதம் இருந்த நிலையில், அவர்களிடம் சிக்கிவிட கூடாது என நினைத்து தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்.

சந்திரசேகர ஆசாத் மறைந்து விட்டாலும் அவர் விட்டு சென்ற சுவடுகள் இன்னும் மறையாமால்தான் இருக்கின்றன. அவர் பயன்படுத்திய துப்பாக்கி அலகாபாத் அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கபட்டுள்ளது. அவர் கொள்ளப்பட்ட இடமான “அல்ப்ரெட்” பூங்கா இன்று அவர் பெயரிலேயே “சந்திரசேகர ஆசாத் பூங்கா” என அழைக்கப்பட்டு வருகிறது

About the author

Julier

Add Comment

Click here to post a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.