Life History நடிகர்

தனுஷ் (நடிகர்)

‘ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற பாடல் மூலமாக உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தவர், நடிகர் தனுஷ். பிரபல கிராமக்கதைகளின் இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன், இயக்குனர் செல்வா ராகவனின் தம்பி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் எனப் பல சிறப்பம்சங்களை உடைய அவர், தனது சகோதரர் செல்வராகவன் மூலமாகத் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். 2௦௦2ல் தமிழ்த் திரையுலகில் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படம் மூலமாக தமிழில் அறிமுகமான அவர், ஒரு பின்னணிப் [...]

‘ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற பாடல் மூலமாக உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தவர், நடிகர் தனுஷ். பிரபல கிராமக்கதைகளின் இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன், இயக்குனர் செல்வா ராகவனின் தம்பி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் எனப் பல சிறப்பம்சங்களை உடைய அவர், தனது சகோதரர் செல்வராகவன் மூலமாகத் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். 2௦௦2ல் தமிழ்த் திரையுலகில் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படம் மூலமாக தமிழில் அறிமுகமான அவர், ஒரு பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் எனப் படிப்படியாக உயர்ந்து, இன்று ஹிந்தித் திரையுலகிலும் ‘ரஞ்சனா’ திரைப்படம் மூலமாகத் தனது வெற்றிக்கொடியை நட்டுள்ளார். தனது இளம் வயதில் திரையுலகில் நுழைந்த இவர், ‘மயக்கம் என்ன’, ‘3’, ‘எதிர் நீச்சல்’, ‘மரியான்’ போன்ற படங்களில் பாடலாசிரியராகவும், ‘3’, ‘எதிர் நீச்சல்’, போன்ற படங்களின் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார். 2011 ஆம் ஆண்டில் அவர் நடித்த ‘ஆடுகளம்’ படத்தின் சிறந்த நடிகருக்காக ‘தேசிய விருது’, ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’ மற்றும் ‘ஃபிலிம்ஃபேர் விருது’ வென்ற அவர், 2012ல் நடித்து வெளியான ‘3’ படத்தின் சிறந்த நடிகருக்கான ‘விஜய் விருதையும்’ வென்றுள்ளார். ‘3’ படத்தில் அவர் எழுதிப் பாடிய பாடலான ‘ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற பாடல், யூட்யூப் இணையத்தளத்தில் வெளியாகி, சில மணி நேரங்களிலேயே அதிகளவில் பார்வையிடப்பட்டதால், ஓரிரு நாட்களிலேயே தேசிய அளவில் புகழ்பெற்றார். குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கே சென்ற நடிகர் தனுஷ் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: ஜூலை 28, 1984

பிறப்பிடம்: சென்னை, தமிழ்நாடு, இந்தியா

பணி: நடிகர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

நடிகர் தனுஷ், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் தலைநகரமான சென்னையில், இயக்குனர் கஸ்தூரிராஜா மற்றும் ராஜேஸ்வரி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக ஜூலை மாதம் 28 ஆம் தேதி, 1984 ஆம் ஆண்டில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

அவர், தனது பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள ஆழ்வார்த் திருநகரில் இருக்கும் செயின்ட் ஜான்’ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்தார். தனது 12ஆம் வகுப்பை வெற்றிகரமாக முடித்த அவரை, அவரது சகோதரரும், இயக்குனருமான செல்வராகவன் அவர்கள், திரையுலகில் நுழையுமாறு வற்புறுத்தியதால், அவர் தனது படிப்பை அத்துடன் நிறுத்திக் கொள்ள விரும்பினார்.

திரையுலகப் பிரவேசம்

தனது அண்ணனின் விருப்பத்தை ஏற்ற அவர், 2௦௦2 ஆம் ஆண்டில் ‘துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படம் மூலமாக இருவரும் தமிழ்த் திரையுலகில் கால்பதித்தனர். அவரது தந்தையான கஸ்தூரிராஜா அவர்கள் இயக்கிய அப்படத்தின் திரைக்கதையை செல்வராகவன் எழுதி, அவர் கதாநாயகனாக நடித்தார். அவர்கள் மூவரின் கூட்டணியில் வெளியான அப்படம், அமோக வெற்றிப் பெற்றதால், அடுத்த ஆண்டே அவர்கள் இருவரும் மீண்டும் ‘காதல் கொண்டேன்’ என்ற படத்தில் கைகோர்த்தனர். இப்படத்தை செல்வராகவன் அவர்கள் எழுதி, இயக்கினார். இப்படம் அபார வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதுக்காகப் பரிந்துரையும் செய்யப்பட்டார்.

திரையுலக வாழ்க்கை

தனது ‘காதல் கொண்டேன்’ படம் மூலமாக சிறந்த நடிகரென்ற பாராட்டைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் அவரது அற்புத நடிப்பைக் கண்ட இயக்குனர் வாசு அவர்கள், அவரது அடுத்தப் படமான ‘திருடா திருடி’ (2௦௦3) திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்தார். இப்படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், அவர் தொடர்ந்து, ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ (2௦௦4), ‘சுள்ளான்’ (2௦௦4), ‘ட்ரீம்ஸ்’ (2௦௦4), ‘தேவதையைக் கண்டேன்’ (2௦௦5), ‘அது ஒரு கனாக்காலம்’ (2௦௦5), ‘புதுப்பேட்டை’ (2006), ‘திருவிளையாடல் ஆரம்பம்’ (2006), ‘பரட்டை என்கிற அழகுசுந்தரம்’ (2007), ‘பொல்லாதவன்’ (2007), ‘யாரடி நீ மோகினி’ (2008), ‘படிக்காதவன்’ (2009), ‘குட்டி’ (2010), ‘உத்தமபுத்திரன்’ (2010), ‘ஆடுகளம்’ (2011), ‘சீடன்’ (2011), ‘மாப்பிள்ளை’ (2011), ‘வேங்கை’ (2011),       ‘மயக்கம் என்ன’ (2011), ‘3’ (2012) போன்ற படங்களில் நடித்துள்ளார். இப்போது, பரத் பாலா அவர்கள் இயக்கத்தில் ‘மரியான்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அவர், அப்படத்தின் வெளியீட்டைத் மிகவும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்குகிறார்.

பாலிவுட்டில் தனுஷ்      

2013, அவர் ஆனந்த் எல். ராய் அவர்கள் இயக்கிய பாலிவுட் திரைப்படமான ‘ரஞ்சனா’ என்ற படத்தில் நடிகை சோனம் கபூருடன் இணைந்து நடித்தார். வெளியான ஒரே வாரத்திலேயே 34 கோடி வசூல் சாதனைப் படைத்து, அமோக வெற்றிபெற்ற அப்படத்தை, ‘பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்’ என்று அறிவித்துள்ளது. மேலும், அவரை ஹிந்தித் திரையுலகிலும் ஒரு அற்புத நடிகரென்ற முத்திரையைப் பதிக்கச் செய்தது.

பிற சாதனைகள்

நடிகராகப் பெரிதும் சாதித்த அவர், தான் நடித்த ஒரு சில படங்களில் பாடல்கள் பாடி வந்தார். அவர் பாடிய அனைத்து பாடல்களும் பிரபலமாகி, மக்களிடையே வரவேற்பையும் பெற்றுத் தந்தது எனலாம். அவ்வாறு பாடியதே, அவரை சுயமாகப் பாடல்கள் எழுதவும் தூண்டியது. அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘மயக்கம் என்ன’ திரைப்படத்தில் அவர், ‘பிறைத் தேடும் இரவிலே’, ‘ஓட ஓட’ மற்றும் ‘காதல் என் காதல்’ போன்ற பாடல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய அனைத்துப் பாடல்களுமே வெற்றிப் பெற, அவர் அவரது மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியப் படமான ‘3’ (2012) படத்தில், அனைத்து பாடல்களையும் எழுதினார். அவர் எழுதிப் பாடிய பாடலான ‘ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற பாடல், யூட்யூப் இணையத்தளத்தில் வெளியாகி, சில மணி நேரங்களிலேயே அதிகளவில் பார்வையிடப்பட்டதால், ஓரிரு நாட்களிலேயே தேசிய அளவில் புகழ்பெற்றார். இதைத் தொடர்ந்து, அவர் ‘எதிர் நீச்சல்’ (2013) படத்தில் ‘நிஜமெல்லாம்’, ‘பூமி என்னை சுத்துதே’ மற்றும் ‘மரியான்’ (2013) படத்தில் ‘கடல் ராசா நான்’ போன்ற பாடல்களையும் எழுதியுள்ளார்.

நடிகர், பாடகர், பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்ட அவர், ‘3’ (2012) மற்றும் ‘எதிர் நீச்சல்’ (2013) போன்ற படங்களைத் தயாரித்து, ஒரு சிறந்த தயாரிப்பாளர் என்றும் தன்னை நிரூபித்துள்ளார்.

இல்லற வாழ்க்கை

அவர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்தமகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை, நவம்பர் மாதம் 18 ஆம் தேதி, 2004 ஆம் ஆண்டில் மணமுடித்தார். அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரு மகன்கள் உள்ளனர்.

விருதுகள்

  • 2008 – ‘யாரடி நீ மோகினி’ படத்திற்காக ‘ஆண்டின் சிறந்த கேளிக்கையாளருக்கான விஜய் விருது’ வழங்கப்பட்டது.
  • 2011 – ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் ‘சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருது’ வென்றார்.
  • 2011 – ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் சிறந்த நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருது’ மற்றும் ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’ பெற்றார்.
  • 2011 – ‘மயக்கம் என்ன’ படத்தின் சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதை’, ‘ஓட ஓட ஓட ஒன்னும் புரியல’ என்ற பாடலுக்காகப் பெற்றார்.
  • 2012 – ‘3’ படத்தின் சிறந்த நடிகருக்கான ‘விஜய் விருது’ வென்றார்.
  • 2012 – அவர் எழுதிப் பாடிய பாடலான ‘3’ படத்தில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற பாடல் ‘சி.என்.என் 2011ன் டாப் பாடலாகத்’ தேர்வு செய்யப்பட்டது.