ilaiyaraja-இசைஞானி இளையராஜா
ilaiyaraja-இசைஞானி இளையராஜா
Life History இசைக்கலைஞர்கள் இசையமைப்பாளர்கள்

Ilaiyaraja-இசைஞானி இளையராஜா

தமிழக இசையை உலகளவில் பிரசித்தியடைய செய்து, தனது அபரிமிதமான இசைத் திறமையாலும், இசை நுணுக்கத்தாலும் இசையுலகமே அவரை ‘இசைஞானி’ என்று பெயர் சூட்டும் அளவிற்கு உயர்ந்தவர், ‘இசைஞானி’ இளையராஜா அவர்கள். இந்தியாவின் தலைச்சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவராகத் திகழும் இவர், இசைத்துறையில் மிகவும் புலமைப் பெற்றவராக விளங்குகிறார். 1976ல் ‘அன்னக்கிளி’ என்ற திரைப்படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்துவைத்த அவர், இதுவரை 950க்கும் மேற்பட்ட படங்களில் நான்காயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அவர் மட்டுமல்லாமல், அவரது பிள்ளைகள், சகோதரர்கள், மற்றும் அவர்களுடைய குழந்தைகள் என அவரது குடும்பத்தினர் அனைவரும் இசைத்துறைக்காகத் தங்களையும், தங்களது திறமைகளையும் அற்பணித்தவர்கள். இந்தியத் திரைப்படங்களில் மேற்கத்தியப் பாரம்பரிய இசையைப் புகுத்தி, தமிழ் திரைப்படக் கலைஞர்களால் “மேஸ்ட்ரோ” என்று அழைக்கப்படும் அவர், இந்திய அரசின் ‘பத்ம பூஷன் விருது’, நான்கு முறை ‘தேசிய விருதையும்’, நான்கு முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதையும்’, மூன்று முறை ‘கேரள அரசின் விருதையும்’, நான்கு முறை ‘நந்தி விருதையும்’, தமிழக அரசின் ‘கலைமாமணி விருதையும்’, ஆறு முறை ‘தமிழ்நாடு மாநில திரை விருதையும்’, ‘சங்கீத் நாடக அகாடெமி விருது’ எனப் பல்வேறு விருதுகளைப் பெற்று, இசையால் தமிழ் நெஞ்சங்களில் உதிரத்தில் கலந்து, நீங்கா இடம் பிடித்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. “பஞ்சமுகி” என்ற கர்நாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கிய இளையராஜா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் இசை மற்றும் திரைத்துறையில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: 2 ஜூன், 1943

பிறப்பிடம்: பண்ணைப்புரம், தேனி, சென்னை மாகாணம், இந்தியா

பணி: திரைப்பட இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், வாத்தியக்கலைஞர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

அவர், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் டேனியல் ராமசாமி மற்றும் சின்னத்தாயம்மாள் தம்பதியருக்கு மகனாக ஜூன் மாதம் 2 ஆம் தேதி, 1943 ஆம் ஆண்டில், கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் ஞானதேசிகன். இவருக்கு பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் என்று மூன்று சகோதரர்களும், கமலாம்மாள், பத்மாவதி என்ற இரு சகோதரிகளும் உள்ளனர். அவரது சகோதரரான அமர் சிங் என்ற கங்கை அமரனும் ஒரு இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

ஞானதேசிகனாகப் பிறந்த அவர், டேனியல் ராசய்யா என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டு, பள்ளியில் சேர்க்கப்பட்டார். சில காலம் கழித்து, ராஜையா என்று மறுபடியும் பெயர்மாற்றம் செய்ததால், அனைவரும் அவரை ராசய்யா என்று அழைத்தனர். சிறு வயதிலிருந்தே வாத்தியங்கள் வாசிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்த அவர், தன்ராஜ் மாஸ்டரிடம் வாத்தியங்கள் கற்கத் தொடங்கினார். ஆர்மோனியம், பியானோ மற்றும் கிட்டார் போன்ற இசைக்கருவிகளை மேற்கத்திய பாணியில் வாசிப்பதில் தேர்ச்சிப் பெற்ற அவரது பெயரை, அவரது மாஸ்டர் ‘ராஜா’ என்று மாற்றினார். வீட்டில் வறுமைக் காரணமாகத் தனது பள்ளிப்படிப்பைப் பாதியிலே நிறுத்திக்கொண்டார். தனது 14வது வயதில் நாட்டுப்புறப் பாடல்களால் ஈர்க்கப்பட்ட அவர், 19வது வயதில், அதாவது 1961 ஆம் ஆண்டில் தனது சகோதரர்களுடன் நாடகக்குழுவில் சேர்ந்து, இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு சென்று சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட கச்சேரிகளிலும், நாடகங்களிலும் கலந்து கொண்டார். பின்னர், லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் சேர்ந்து, கிளாஸ்ஸிக்கல் கிட்டார் தேர்வில் தங்கப் பதக்கமும் வென்றார்.

இசையுலகப் பிரவேசம்

நாடகக்குழுவில் இசைக் கச்சேரிகளும், நாடகங்களும் பங்கேற்று வந்த அவர், 1970களில் பகுதிநேர வாத்தியக்கலைஞராக சலில் சௌத்ரியிடம் பணிபுரிந்தார். பின்னர், கன்னட இசையமைப்பாளரான ஜி. கே. வெங்கடேஷ் அவர்களின் உதவியாளராக சேர்ந்த அவர், அவரது இசைக்குழுவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்திருக்கிறார். இந்தக் காலக்கட்டங்களில் தான், அவருக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில் அவர் சுயமாகப் பாடல்கள் எழுதி, அவர் இருந்த இசைக்குழுவில் உள்ள சக வாத்தியக்கலைஞர்களை அதற்கு இசை அமைக்குமாறு கேட்டுக் கொள்வார். மேலும், அவர் ஏ. ஆர். ரகுமான் அவர்களின் தந்தையான ஆர். கே. சேகரிடம் வாத்தியங்களை வாடகைக்கு எடுத்தும் இசையமைப்பார்.

திரையுலக வாழ்க்கை

அவரைத் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர், பஞ்சு அருணாச்சலம் அவர்கள். 1975ல் பஞ்சு அருணாச்சலம் அவர்களின் அடுத்தப் படமான ‘அன்னக்கிளி’ திரைப்படத்தில் இசையமைப்பாளராக அவரை ஒப்பந்தம் செய்தார். இப்படத்தில், மேற்கத்திய இசையோடு தமிழ் மரபையும் புகுத்தி, அவர் உருவாக்கிய ‘மச்சானப் பாத்தீங்களா?’ என்ற பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்ததால், அவர் தொடர்ந்து ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘16 வயதினிலே’, ‘24 மணி நேரம்’, ‘100வது நாள்’, ‘ஆனந்த்’, ‘கடலோர கவிதைகள்’, ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, ‘ஆணழகன்’, ‘ஆண்டான் அடிமை’, ‘ஆராதணை’, ‘ஆத்மா’, ‘ஆவாரம்பூ’, ‘ஆபூர்வ சகோதர்கள்’, ‘அடுத்த வாரிசு’, ‘மூன்றாம் பிறை’, ‘மௌன ராகம்’, ‘முதல் மரியாதை’, ‘முள்ளும் மலரும்’, ‘முந்தானை முடிச்சு’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘அமைதிப்படை’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘அன்புக்கு நான் அடிமை’, ‘நாயகன்’,  ‘அன்புள்ள ரஜனிகாந்த்’, ‘பத்ரக்காளி’, ‘சின்ன கவுண்டர்’, ‘சின்ன தம்பி’, ‘சின்னவர்’, ‘தர்ம துரை’, ‘பாயும் புலி’, ‘பணக்காரன்’, ‘எஜமான்’, ‘குணா’, ‘இன்று போய் நாளை வா’, ‘இதயத்தை திருடாதே’, ‘காக்கி சட்டை’, ‘காதலுக்கு மரியாதை’, ‘கைராசிக்காரன்’, ‘கலைஞன்’, ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘நாயகன்’,  எனப் பல நூற்றுக்கணக்கானப் படங்களுக்கு இசையமைத்துப் புகழின் உச்சிக்கே சென்றார்.

தமிழ் மொழி மட்டுமல்லாமல், அவர் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி என 950 க்கும் மேற்பட்ட படங்களில் நான்காயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்களுக்குப் பல மொழிகளில் இசையமைத்துள்ளார்.

பிற இசையாக்கங்கள்

ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில், அவர் ‘சிம்பொனி’ ஒன்றை இசையமைத்தார். அந்த ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்களை “மேஸ்ட்ரோ” என்று அழைப்பர். ஆனால், அவர் இசையமைத்த சிம்பொனி இன்றளவும் வெளியிடப்படவில்லை என்றாலும், அவரைத் தமிழ் திரைப்படக் கலைஞர்கள் “மேஸ்ட்ரோ” என்று அழைக்கின்றனர்.

  • “பஞ்சமுகி” என்ற கர்நாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கினார்.
  • இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்த ‘ஹவ் டு நேம் இட்’ (“How to name it”) என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார்.
  • “இளையராஜாவின் கீதாஞ்சலி” என்ற தமிழ் பக்தி இசைத்தொகுப்பினையும்,  “மூகாம்பிகை” என்ற கன்னட பக்தி இசைத் தொகுப்பினையும் வெளியிட்டார்.
  • ஆதி சங்கரர் எழுதிய “மீனாக்ஷி ஸ்தோத்திரம்” என்ற பக்திப்பாடலுக்கு இசையமைத்தார்.

எழுத்தாளராக இளையராஜா

அவரது பெற்றோர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினாலும், நடைமுறையில் அவர் இந்துமதத்தின் மீது மிகவும் ஆர்வமுடையவராகவும், ஒரு பக்திமார்க்கமான வாழ்க்கையே வந்து வந்தார். ஆன்மீகத்திலும், இலக்கியத்திலும், புகைப்படக்கலையிலும் மிகுந்த ஆர்வமுள்ள அவர், ‘சங்கீதக் கனவுகள்’, ‘வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது’, ‘வழித்துணை’, ‘துளி கடல்’, ‘ஞான கங்கா’, ‘பால் நிலாப்பாதை’, ‘உண்மைக்குத் திரை ஏது?’, ‘யாருக்கு யார் எழுதுவது?’, ‘என் நரம்பு வீணை’, ‘நாத வெளியினிலே’, ‘பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள்’, ‘இளையராஜாவின் சிந்தனைகள்’ போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.

இல்லற வாழ்க்கை

அவர், ஜீவா என்பவரை மணமுடித்தார். அவர்களுக்கு கார்த்திகேயன், யுவன் ஷங்கர் என்ற இரு மகன்களும், பவதாரிணி என்ற மகளும் பிறந்தனர். இவர்கள் மூவரும் தமிழ்த் திரையுலகின் இசைத்துறையில் இசையமைப்பாளர்களாகவும், பாடகர்களாகவும் இருந்து வருகின்றனர்.

விருதுகள் 

  • 1988 – தமிழ்நாடு அரசு அவருக்கு ‘கலைமாமணி விருது’ வழங்கி சிறப்பித்தது.
  • 2010 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன்’ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
  • 2012 – ‘சங்கீத நாடக அகாடமி விருது’ வென்றார்.
  • 1988 – மத்திய பிரதேச அரசின் ‘லதா மங்கேஷ்கர் விருது’ வழங்கப்பட்டது.  இசையில் அவர் புரிந்த சாதனைக்காக, 1994ஆம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகமும், 1996ஆம் ஆண்டில் மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் அவருக்கு ‘முனைவர் பட்டம்’ வழங்கி கௌரவித்தது.
  • தேசிய விருதுகளை ‘சாகர சங்கமம்’ என்ற படத்திற்காக 1984லும், ‘சிந்து பைரவி’ என்ற படத்திற்காக 1986லும், ‘ருத்ர வீணா’ என்ற படத்திற்காக 1989லும், ‘பழசி ராஜா’ என்ற படத்திற்காக 2௦௦9லும் பெற்றார்.
  • 1989ல் அவரது சிறந்த பங்களிப்பிற்காகவும், 1990ல் ‘போபிலி ராஜா’ என்ற தெலுங்கு திரைப்படத்திற்காகவும், 2௦௦3ல் ‘மனசினக்கரே’ என்ற மலையாளத் திரைப்படத்திற்காகவும், 2௦௦5ல் ‘அச்சுவிண்டே அம்மா’ என்ற மலையாளத் திரைப்படத்திற்காகவும் ஃபிலிம்ஃபேர் விருதுகளைப் பெற்றார்.
  • தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதுகளை 1977ல் ‘16 வயதினிலே’ படத்திற்காகவும், 1980ல் ‘நிழல்கள்’ படத்திற்காகவும், 1981ல் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்காகவும், 1988ல் ‘அக்னி நட்சத்திரம்’ படத்திற்காகவும், 1989ல் ‘வருஷம் 16’ மற்றும் ‘கரகாட்டக்காரன்’ படங்களுக்காகவும், 2009ல் ‘அஜந்தா’ படத்திற்காகவும் வென்றார்.
  • கேரள மாநிலத் திரைப்பட விருதுகளை, 1994ல் ‘சம்மோஹனம்’ என்ற படத்திற்காகவும், 1995ல் ‘கலபாணி’ படத்திற்காகவும், 1998ல் ‘கள்ளு கொண்டொரு பெண்ணு’ என்ற படத்திற்காகவும் பெற்றார்.