தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘புன்னகை அரசி’ என அன்போடு அழைக்கப்படும் கே. ஆர். விஜயா அவர்கள், தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் தன்னுடைய கலைப் பயணத்தைத் தொடர்ந்த இவர், சுமார் 450–க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ‘கற்பகம்’, ‘கந்தன் கருணை’, ‘சரஸ்வதி சபதம்’, ‘இதயக்கமலம்’, ‘நம்ம வீட்டு தெய்வம்’, ‘தங்கப்பதக்கம்’, ‘திரிசூலம்’, ‘கல்தூண்’, ‘மிருதங்க சக்ரவர்த்தி’, ‘வாயாடி’, ‘திருடி’, ‘ரோஷக்காரி’, ‘ராமன் எத்தனை ராமனடி’, ‘கந்தன் கருணை’ போன்ற படங்கள் அவரது நடிப்பில் முத்திரைப் பதித்த திரைபடங்களாகும். தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி என்னும் இரண்டு ஜாம்பவான்களுடன் தொடர்ந்து பல படங்களில் நடித்தப் பெருமை இவருக்கு உண்டு. நாடக நடிகையாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு தமிழ் சினிமா ரசிகர்களால் ‘புன்னகை அரசி’ எனப் புகழப்பட்ட கே. ஆர். விஜயா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: நவம்பர் 30, 1948
பிறப்பிடம்: திருவனந்தபுரம், கேரளா மாநிலம், இந்தியா
பணி: திரைப்பட நடிகை
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
‘தெய்வநாயகி’ என்னும் இயற்பெயர் கொண்ட கே. ஆர். விஜயா அவர்கள், 1948 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் நாள் இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் ராமச்சந்திர ராவ் என்பவருக்கும், மங்களத்திற்கும் மகளாகப் பிறந்தார். இவருடைய தந்தை ஆந்திராவைச் சேர்ந்தவர்.
ஆரம்ப வாழ்க்கை
அவரது தந்தை ஆந்திராவை சேர்ந்தவர் என்றாலும், இவருடைய தாயார் கேரளா என்பதால் திருமணத்திற்குப் பிறகு கேரளாவில் வசித்து வந்தனர். பின்னர், தமிழ்நாட்டிலுள்ள பழனிக்குக் குடிபெயர்ந்தனர். தன்னுடைய குழந்தைப் பருவத்தை பழனியில் கழித்த அவர், பதினோரு வயதிலிருந்தே நாடகங்களில் நடிப்பதில் அதிக ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, அவருடைய நாடக நடிப்பில் மிகவும் ஈர்க்கப்பட்ட எஸ். எம். குமரேசன் என்னும் நடிகர், சென்னை வந்தால் நடிக்க வாய்ப்பு தருவேன் எனக்கூறியதின் பேரில், இவருடைய குடும்பம் பழனியில் இருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தது. சென்னைக்கு வந்து சேர்ந்த இவர், சினிமாவில் நடிப்பதற்காக ‘தெய்வநாயகி’ என்னும் தன்னுடைய பெயரை கே. ஆர். விஜயா என மாற்றிக்கொண்டார். அதன் பிறகு, இயக்குனர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் என்பவரிடம் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட அவர், 1963 ஆம் ஆண்டு ‘கற்பகம்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவருடைய முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்ததால், அதனைத் தொடர்ந்து, நிறைய படவாய்ப்புகள் வரத்தொடங்கின.
வெற்றிப் பயணம்
தன்னுடைய முதல் படத்திலேயே, தமிழ் ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்த அவருக்கு, ‘சர்வர் சுந்தரம்’, ‘சரஸ்வதி சபதம்’, ‘நம்ம வீட்டு தெய்வம்’ போன்ற திரைப்படங்கள் அவருக்கு நிறைய ரசிகர்களை ஏற்படுத்திக் கொடுத்தத் திரைப்படங்களாக அமைந்தது. குறுகிய காலத்திற்குள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு தென்னிந்திய மொழிகளிலும் நடித்த அவர், வெறும் பத்து ஆண்டுகளுக்குள் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, தென்னிந்திய ரசிகர்களால் ‘புன்னகை அரசி’ எனப் புகழ்பெற்றார். ‘கந்தன் கருணை’, ‘இதயக்கமலம்’, ‘தங்கப்பதக்கம்’, ‘திரிசூலம்’, ‘கல்தூண்’, ‘மிருதங்க சக்ரவர்த்தி’, ‘வாயாடி’, ‘திருடி’, ‘ரோஷக்காரி’, ‘ராமன் எத்தனை ராமனடி’, ‘கந்தன் கருணை’ போன்ற திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளது எனக் கூறலாம். அதுமட்டுமல்லாமல், இவர் ‘மடிசார் மாமி’, ‘குடும்பம்’, ‘ராஜ ராஜேஸ்வரி’, ‘ஆனந்தம்’ போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சொல்லப்போனால், சிவாஜியுடன் நடித்த அனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றிச் சித்திரங்களாக அமைந்தது எனலாம்.
தனிப்பட்ட வாழ்க்கை
தன்னுடைய வசீகர சிரிப்பால் அனைவரையும் கவர்ந்த அவர், வேலாயுதம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் சுதர்ஷன் சிட் ஃபண்ட்ஸ் நிறுவனத்தின் சேர்மேன் ஆவார். இவர்களுக்கு ஒரு மகள் பிறந்தார்.
கே.ஆர் விஜயா நடித்த சில திரைப்படங்கள்
‘சர்வர் சுந்தரம்’ (1967), ‘கை கொடுத்த தெய்வம்’ (1964), ‘செல்வம்’ (1966), ‘சரஸ்வதி சபதம்’ (1966), ‘பட்டணத்தில் பூதம்’ (1967), ‘தங்கை’ (1967), ‘கந்தன் கருணை’ (1967), ‘இரு மலர்கள்’ (1967), ‘ஊட்டி வரை உறவு’ (1967), ‘திருமால் பெருமை’ (1968), ‘நல்ல நேரம்’ (1972), ‘பால் மனம்’ (1968), ‘குறத்தி மகன்’ (1972), ‘ஸ்ரீ தேவி’ (1970), ‘பாரத விலாஸ்’ (1973), ‘ஜஸ்டிஸ் கோபிநாத்’ (1978), ‘திரிசூலம்’ (1979), ‘கை கொடுத்த தெய்வம்’ (1964), ‘நெஞ்சிருக்கும் வரை’ (1967), ‘திருடன்’ (1969), ‘என்தம்பி’ (1968), ‘சொர்க்கம்’ (1970), ‘தங்க பதக்கம்’ (1974) ‘ராமன் எத்தனை ராமனடி’ (1970), ‘எதிரொலி’ (1970), ‘தவப் புதல்வன்’ (1972), ‘சத்திய சுந்தரம்’ (1981), ‘ஊரும் உறவும்’ (1982), ‘நீதிபதி’ (1983), ‘மிருதங்க சக்கரவர்த்தி’ (1983), ‘வம்ச விளக்கு’ (1984), ‘தராசு’ (1984), ‘படிக்காத பண்ணையார்’ (1985), ‘சாதனை’ (1986), ‘கிருஷ்ணன் வந்தான்’ (1987), ‘மன்னவரு சின்னவரு’ (1999), ‘உடன் பிறப்பு’ (1993), ‘ஆணழகன்’ (1995), ‘விவசாயி மகன்’ (1997), ‘கவலைப் படாதே சகோதரா’ (1998), ‘துர்கா’ (2001), ‘ஷாக்’ (2004), ‘சந்திரமுகி’ (2005), ‘தசாவதாரம்’ (2008), ‘ஆடு புலி’ (2011).
சுமார் 30 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நடித்து வரும் கே. ஆர். விஜயா அவர்கள், இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், அவருடைய சிரிப்பு என்னும் மந்திரப் புன்னகையால் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கட்டிப் போட்டுள்ளார் என்று தான் கூற வேண்டும். குறிப்பாக சொல்லப்போனால் அவருடைய வசீகரப் புன்னகை ஆண்களை மட்டுமல்ல, பெண்களையும் கவர்ந்திழுக்கும் தன்மையுடையது. அவருடைய தாய்மொழி மலையாளம் என்றாலும், மிக அழகாகத் தமிழ் மொழி பேசி நடித்தார். 1963 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகியாகத் தன்னுடைய கலையுலக வாழ்க்கையைத் தொடங்கி, கிட்டத்தட்ட 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், நீண்ட காலம் கதாநாயகியாகவே நடித்த பெருமைக்குரியவர்