Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

கே. பாலசந்தர்

தமிழ் திரையுலக இயக்குனர் சிகரம்’ எனப் புகழப்படும் கே. பாலச்சந்தர் அவர்கள், ஒரு புகழ் பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடைநாடக இயக்குனர், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் ஆவார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் திரைப்படங்கள் இயக்கியுள்ள இவர், தென்னிந்திய திரைப்பட உலகில் சிறந்த இயக்குனராகத் தன்னை வெளிப்படுத்தி, எதிர்கால கலைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறார். பல துணிச்சலானக் கருத்துகளைத் தன்னுடைய படங்களில் மூலம் திரையில் தந்த அவரது திரைப்படங்களான ‘அபூர்வ ராகங்கள்’, ‘புன்னகை மன்னன்’, ‘எதிர்நீச்சல்’, ‘தண்ணிர் தண்ணீர்’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘சிந்து பைரவி’ போன்றவைத் தமிழ் திரையுலகில் அற்புத படைப்புகளாகப் போற்றப்படுகிறது. தமிழ் திரையுலகில் தற்போது ஜாம்புவான்களாக விளங்கும், ‘கமல்ஹாசன்’ மற்றும் ‘ரஜினிகாந்த்’ எனப் பல நடிகர்களைத் திரையுலகிற்கு தந்தவர். செறிவான கதை, நுட்பமான வசனம், பொருத்தமான பாடல்கள், அழுத்தமான நடிப்பு போன்றவை இவர் இயக்கிய திரைப்படைப்புகளின் முத்திரைகளாகும். திரைப்படத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்தியாவின் உயரிய விருதான “பத்ம ஸ்ரீ”, வழங்கி கெளரவிக்கப்பட்டார். மேலும், ‘தேசிய விருது’, ‘மாநில விருது’, ‘அண்ணா விருது’, ‘கலைஞர் விருது’, ‘ஃபிலிம்ஃபேர் விருது’, ‘கலைமாமணி விருது’ எனப் பல விருகதுளையும் வென்றுள்ளார். ஒரு மேடைநாடக கலைஞராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, தமிழ்த் திரைப்படத்துறையில் அரைநூற்றாண்டுகளையும் கடந்து, சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தரமான படைப்புகளைத் தந்து, மாபெரும் இயக்குனராக விளங்கிய கே. பாலச்சந்தரின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஜூலை 09, 1930

இடம்: நன்னிலம், தஞ்சாவூர், தமிழ்நாடு மாநிலம், இந்தியா

பணி: இயக்குனர், திரைகதை எழுத்தாளர், தயாரிப்பாளர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

‘இயக்குனர் சிகரம்’ கே. பாலச்சந்தர் என அழைக்கப்படும் கைலாசம் பாலச்சந்தர் அவர்கள், 1930  ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09  ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள “நன்னிலம்” என்ற இடத்தில் தண்டபாணி என்பவருக்கும், சரஸ்வதிக்கும் மகனாக ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு கிராம அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

பள்ளிப்படிப்பை தன்னுடைய சொந்த ஊரிலேயே முடித்த கே. பாலச்சந்தர் அவர்கள், 1949 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி விலங்கியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், சென்னையில் உள்ள ஏ.ஜி அலுவலகத்தில் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்த அவர், பணியில் இருந்து கொண்டே நாடகங்களில் நடித்து வந்தார். ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘எதிர் நீச்சல்’, ‘நாணல்’, ‘வினோத ஒப்பந்தம்’, போன்றவை அதிக வரவேற்பைப் பெற்ற நாடகங்களாகும்.

திரைப்படத்துறையில் கே. பாலச்சந்தரின் பயணம்

மேடைநாடகத் துறையில் இருந்து திரைப்படத்துறையில் கால்பதித்த கே. பாலச்சந்தர் அவர்கள், 1965 ஆம் ஆண்டு வெளியான “நீர்க்குமிழி” திரைப்படத்தை இயக்கினார். நாகேஷ் இதில் கதாநாயகனாக நடித்திருப்பார். மனித உணர்வுகளுக்கிடையிலான சிக்கல்களைக் கதைக் கருவாகக்கொண்டு இவர் இயக்கிய இத்திரைப்படம் இவருக்கு ஒரு மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. இத்திரைப்படம், தமிழ் சினிமாவில் சில மாறுதல்களை ஏற்படுத்திய படமாகவும் அமைந்தது. இதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களை இயக்கிய கே. பாலச்சந்தர் அவர்களுக்கு, ‘அபூர்வ ராகங்கள்’, ‘சிந்து பைரவி’, ‘இருகோடுகள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘தில்லு முல்லு’ போன்றவை மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தது. இதில், ‘இருகோடுகள்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ ஆகிய நான்கு படங்களும் இவருக்கு ‘தேசிய விருதை’ பெற்றுத்தந்தன. தமிழில் மட்டுமல்லாமல், ஹிந்தியில் “ஏக் துஜே கேலியே” மற்றும் தெலுங்கில் “மரோ சரித்ரா” மற்றும் “ருத்ர வீணா”, கன்னடத்தில் “அரலிதா ஹூவு” போன்ற மிகச்சிறந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும், ‘கவிதாலயா’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தாயாரித்து இருக்கிறார்.

பாலச்சந்தர் இயக்கிய புகழ்பெற்ற படைப்புகள்

‘நீர்க்குமிழி’, ‘மேஜர் சந்ரகாந்த்’, ‘இருகோடுகள்’, ‘பூவா தலையா’, ‘பாமா விஜயம்’, ‘நான் அவனில்லை’, ‘புன்னை’, ‘எதிர் நீச்சல்’, ‘சிந்து பைரவி’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘தில்லு முல்லு’, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘அக்னிசாட்சி’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘புது புது அர்த்தங்கள்’, ‘வானமே எல்லை’, ‘ஜாதிமல்லி’, ‘நூற்றுக்கு நூறு’, ‘கல்கி’, ‘பார்த்தாலே பரவசம்’, ‘பொய்’.

கே. பாலச்சந்தரின் சின்னத்திரை படைப்புகள்

1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதிகளில் தன்னுடைய கவனத்தை சின்னத்திரையின் மீது செலுத்திய கே. பாலச்சந்தர் அவர்களுக்கு, தூர்தர்ஷனில் வெளிவந்த இவருடைய “ரயில் சிநேகம்” இன்றளவும் பேசப்படுகிறது. மேலும், ‘கையளவு மனசு’, ‘ரகுவம்சம்’, ‘அண்ணி’ போன்ற தொலைக்காட்சி தொடர்கள் இவருடைய சின்னத்திரைப் படைப்புகளாகும்.

விருதுகளும், மரியாதைகளும்

மேலும், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி அரசிடமிருந்து ‘கலைமாமணி விருது’, ‘அண்ணா விருது’, ஆந்திரபிரதேச அரசிடம் இருந்து ‘நந்தி விருது’, ‘எம்.ஜி.ஆர் விருது’, ‘கலைஞர் விருது’, ‘திரைப்பட உலக பிரம்மா’, ‘பீஷ்மா விருது’, ‘கலையுலக பாரதி’ என மேலும் பல விருதுகளையும் வென்றுள்ளார்.

இயக்குனராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடைநாடக இயக்குனர், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ‘சகலகலா வல்லவராக’ விளங்கிய கே. பாலசந்தர் அவர்கள், தமிழ் திரையுலகில் தோன்றிய இயக்குனர்களில் மிக முக்கிய இடத்தை பிடித்தவராவார்.  சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கித் திரைப்படத்துரையில் முத்திரைப் பதித்த கே. பாலசந்தர் அவர்கள், வருங்கால இயக்குனர்களுக்கு ஆசானாக விளங்குகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

Exit mobile version