கமல்ஹாசன்
கமல்ஹாசன்
Life History நடிகர்

கமல்ஹாசன்

கமல்ஹாசன் இந்தியத் திரைப்படத்துறையில், குழந்தை நட்சத்திரமாக ‘களத்தூர் கண்ணம்மாவில்’ அறிமுகமாகி, தனது ஈடுஇணையற்ற நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, ‘உலகநாயகன்’ என்று போற்றப்படும் கமல்ஹாசன் அவர்கள்,

இருநூற்றுக்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது வாழ்க்கை முழுவதையும் திரைத்துறைக்கே அர்பணித்தத் திறமையான நடிகர்களுள் ஒருவராவர். நான்கு முறை தேசிய விருதும், பதினெட்டு முறை ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்ற கமல்ஹாசன் அவர்களைப் பற்றியறிய மேலும் தொடர்ந்துப் படிக்கவும்.

பிறப்பு: நவம்பர் 7, 1954

பிறந்த இடம்: பரமக்குடி, தமிழ்நாடு, இந்தியா

தொழில்: நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர், தயாரிப்பாளர்

நாட்டுரிமை: இந்தியா

ஆரம்ப கால வாழ்க்கை

கமல்ஹாசன் அவர்கள், தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்திலிருக்கும் பரமக்குடியில் குற்றவியல் வழக்கறிஞராக இருந்த டி.சீனிவாசனுக்கும், ராஜலக்ஷ்மி அவர்களுக்கும் மகனாக பிறந்தார். நான்கு குழந்தைகளில், கடைக்குட்டியாகப் பிறந்த கமலுக்கு, இளம் வயதிலிருந்தே, படிப்பைத் தவிர மற்ற கலைகளில் ஆர்வம் அதிகமிருந்ததால், மிகுதியான நேரத்தை அதில் செலவிட்டார். சாருஹாசன், சந்திரஹாசன், மற்றும் நளினி ரகு இவருடைய உடன் பிறந்தவர்கள். கமல் அவர்களின் தந்தை, கட்டுப்பாடு மிகுந்தவராக இருந்ததால், தனது மகன்களை நன்குப் படிக்க வைக்க எண்ணினார். அவரின் எண்ணத்திற்கேற்ப, கமலின் மூத்த சகோதரர்கள் இருவரும் தனது தந்தையை உதாரணமாகக் கொண்டு, சட்டம் பயின்றனர்.

இல்லற வாழ்க்கை

1978ல், வாணி கணபதி என்பவரை மணமுடித்த கமல்ஹாசன், பத்து ஆண்டுகள் கழித்து அவரிடம் விவாஹரத்துப் பெற்று, சரிகா என்ற நடிகையை மணமுடித்தார். அவர்களுக்கு, ஷ்ருதி ஹாசன்(shruti hassan)மற்றும் அக்ஷரா என்ற மகள்கள் உள்ளனர். பின்னர், சிம்ரனுடனான தொடர்பின் காரணமாக, சரிகா அவர்கள், கமலிடம் விவாஹரத்துக் கோரினார். 2002ல் சரிகாவுடனான உறவிலிருந்து விடுதலைப் பெற்ற பின், 2005லிருந்து கௌதமியுடன் இணைந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.

கமல்ஹாசன் திரையுலக வாழ்க்கை

தனது திரையுலக வாழ்க்கையை, ஒரு குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கிய கமல்ஹாசன் அவர்கள், தீவிர நாடகக் கலைஞராகவும் இருந்து வருகிறார். 1960ல் வெளியான ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் முதன்முதலில் அறிமுகமான போது, அவருக்கு வயது ஆறு. அத்திரைப்படத்தின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ‘இந்திய தேசிய விருதைப்’ பெற்றார். குழந்தை நட்சத்திரமாகப் பல திரைப்படங்களில் நடித்த இவர், ஒரு இளைஞனாக, 1970ல் வெளியான ‘மாணவன்’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலில் மற்றும் தோன்றினார். 1973ல், வெளியான கே.பாலச்சந்தர் அவர்களின் ‘அரங்கேற்றம்’ என்ற திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. துணைக் கதாப்பாத்திரமாக பல கதைகளில் நடித்தாலும், அவர் எதிர்மறையான கதாப்பாத்திரங்களில் நடித்த ‘சொல்லத்தான் நினைக்கிறன்’, ‘குமாஸ்தாவின் மகள்’ போன்ற திரைப்படங்கள் பெரிதும் பேசப்பட்டவை. 1974ல் வெளிவந்த, ‘நான் அவன் இல்லை’ திரைப்படமே அவர் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்த கடைசித் திரைப்படமாகும்.

 அறிமுகம்

1974ல் வெளியான ‘கன்னியாகுமரி’ என்ற மலையாளப் படம் மூலமாக கதாநாயகனாக உருவெடுத்தார். இந்தப் படம் அவருக்கு அம்மொழிக்கான ஃபிலிம்ஃபேர் விருதினைப் பெற்றுத் தந்தது. தமிழ்த் திரையுலகில் நாயகனாக அவர் அறிமுகமாகிய முதல் படம், கே.பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’. இப்படத்திற்காக, அவருக்கு ‘ஃபிலிம்ஃபேர் விருதும்’, ‘தேசிய விருதும்’ கிடைத்தது. 1970களில், ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்தனர். ’16 வயதினிலே’, ‘மூன்று முடிச்சு’, ‘அவர்கள்’, ‘இளமை ஊஞ்சல் ஆடுகிறது’ போன்ற திரைப்படங்கள் அவ்விருவரின் கூட்டணிக்கு நல்ல எடுத்துக்காட்டு. பின்னர், தொடர்ந்து வெற்றிப் படங்களான ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘வருமையின் நிறம் சிகப்பு’, ‘நீயா’, ‘கல்யாண ராமன்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ராஜப்பார்வை’, ‘மூன்றாம் பிறை’ ஆகிய படங்கள் இவருக்குப் பல விருதுகளைத் தேடித்தந்தது.

ஹிந்தி திரை உலகம்

அதே சமயத்தில், அவர் ஹிந்தித் திரையுலகிலும் கவனம் செலுத்தினார். ‘ஏக் துஜே கே லியே’, ‘சாகர்’, ‘ராஜ் திலக்’, கிரஃப்தார்’ ஆகிய திரைப்படங்கள் அவர் நடித்த ஹிந்தி திரைப்படங்களில் சில. 1990களில் வெளியான ‘அபூர்வ சகோதர்கள்’, ‘குணா’, ‘தேவர் மகன்’, ‘மகாநதி’, ‘குருதிப்புனல்’, ‘இந்தியன்’, ‘அவ்வை ஷண்முகி’ போன்ற படங்கள், வெற்றிகரமான பாக்ஸ் ஆஃபிஸ் திரைப்படங்களாக உருவெடுத்தன. 1990ல், அவரின் அற்புதமான நடிப்புத் திறமைக்காக, இந்திய அரசு அவருக்கு மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருதை வழங்கியது. அன்று முதல், இவர் ‘பத்மஸ்ரீ கமல்ஹாசன்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

இரண்டு ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்குப்பின் வெளியான திரைப்படம், ‘ஹே ராம்’. இது அவருடைய சொந்தத் தயாரிப்பான ‘ராஜ்கமல் பட நிறுவனத்தின்’ படைப்பாகும். அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ், இந்த படத்திற்குத் தடை விதித்தாலும், இப்படம் பெருமளவு வெற்றியை அடைந்தது. பின்னர், ‘தெனாலி’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, ‘பஞ்சதந்திரம்’, ‘வசூல் ராஜா MBBS’ போன்ற திரைப்படங்கள் அவருடைய நகைச்சுவை உணர்வுக்காகப் பெரிதும் பேசப்பட்டவை. கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வேட்டையாடு விளையாடு’, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த ‘தசாவதாரம்’ உலகளவில் பெரும் வெற்றியைத் தேடித்தந்தது. அண்மையில் அவர் நடித்து, இயக்கி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியான ‘விஸ்வரூபம்’ பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றிப் பெற்று வெளிவந்த சில நாட்களிலேயே 120 கோடி வருவாயை ஈட்டியுள்ளது.

நடிப்பைத் தவிர, அவர் பல படங்களுக்கு, பாடல்களும் எழுதியிருக்கிறார். மேலும், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மற்றும் ஆங்கிலத்தில் எழுபதுக்கும் மேற்பட்டப் பாடல்களைப் பாடியும் உள்ளார். திறமைசாளியான கமல்ஹாசன் அவர்கள், பரதநாட்டிய கலைஞர் என்பதால், பல படங்களுக்கு நடனக்கலைஞராகவும் இருந்துள்ளார்.

இலக்கிய படைப்புகள்

தமிழ் இலக்கியத்தில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தாலும், எழுத்துத் திறனாலும் ‘மையம்’ என்ற பத்திரிக்கையை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இவ்விதழைக் ‘கமல்ஹாசன் நற்பணி மன்றம்’ இயக்கி வருகிறது. தனது ரசிகர் சங்கம் மூலமாக, சினிமா, குழந்தை வசவு, காஷ்மீர் மோதல், போதை மருந்துப் போன்ற சமுதாயப் பிரச்சனைகளை, தனது புத்தகமான ‘தேடித் தீர்ப்போம் வா’ என்ற தலைப்பில் சேகரித்து வெளியிட்டார்.

பொதுநலப் பணிகள்

‘கமல் நற்பணி இலக்கியம்’ என்ற அமைப்பின் கீழ் பல சமுதாயப் பொது நல அமைப்புகள் அமைத்து சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள், அவரது ரசிகர்கள். ஏழை எளியோருக்கு உதவுவது, பள்ளிக் குழந்தைகளுக்குப் புத்தகம், கணினிப் போன்றவற்றை வழங்குவது போன்ற நற்பணிகளும் செய்கிறார்கள். ஹ்ருதயராகம் 2010 என்ற திட்டத்தின் தூதராக இருந்த அவர், எய்ட்ஸினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதன் பொருட்டாக ஒரு அனாதை இல்லத்தை அமைத்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரண நிதித் திரட்டி, சென்னை போரூரிலிருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 2010ஆம் ஆண்டு வழங்கினார்.

விருதுகள்

  • சிறந்த நடிப்பிற்காக மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன் போன்ற படங்களுக்காக இந்திய அரசின் தேசிய விருதுகளைப் பெற்றார்.
  • சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்காக ‘இந்திய தேசிய விருது’ அவரது முதல் படமான ‘களத்தூர் கண்ணம்மாவிற்காக’ வழங்கப்பட்டது.
  • 18 முறை  ஃபிலிம்பேர் விருதுகள் பெற்ற பெருமை, கமல்ஹாசன் அவர்களையே சேரும்.
  • 1990ல், ‘பத்மசிறீ விருது’ பெற்றார்.
  • 2005ல், சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவித்தது.

முக்கியமான திரைப்படங்கள்

கமல்ஹாசன் அவர்களின், திரையுலக வரலாற்றில் பெரிதும் பேசப்பட்டத் திரைப்படங்களுள் சில…

  • களத்தூர் கண்ணம்மா
  • 16 வயதினிலே
  • மூன்றாம் பிறை
  • நாயகன்
  • அபூர்வ சகோதரர்கள்
  • மைக்கேல் மதன காமராஜன்
  • குணா
  • மகாநதி
  • தேவர் மகன்
  • இந்தியன்
  • அவ்வை சண்முகி
  • ஆளவந்தான்
  • தெனாலி
  • தசாவதாரம்

cairocorps