தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது.
பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், ‘பெரும் தலைவர்’, ‘தென்னாட்டு காந்தி’, ‘படிக்காத மேதை’, ‘கர்ம வீரர்’, ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். சமுதாயத்தில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கு நல்லது செய்யும் அவரின் தன்னலமற்ற தொண்டிற்காக, இந்திய அரசு, அவரின் மறைவிற்கு பின்னர் 1976 ஆம் ஆண்டு “பாரத ரத்னா” விருதினை வழங்கியது. இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்கி, இந்தியாவின் ‘கிங்மேக்கராகப்’ போற்றப்படும் காமராஜரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: ஜூலை 15, 1903
இடம்: விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா
பணி: அரசியல் தலைவர், தமிழக முதல்வர்.
இறப்பு: அக்டோபர் 2, 1975
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு:
கு. காமராஜர் அவர்கள், 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “விருதுநகரில்” குமாரசாமி நாடாருக்கும் சிவகாமியம்மாவுக்கும் மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர் ‘காமாக்ஷி’. அவருடைய தாயார் மிகுந்த நேசத்துடன், அவரை “ராஜா” என்று அழைப்பார். அதுவே, பின்னர் (காமாக்ஷி + ராஜா) ‘காமராஜர்’ என்று பெயர் வரக் காரணமாகவும் அமைந்தது.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:
காமராஜர் அவர்கள், தனது ஆரம்பக்கல்வியை தனது ஊரிலேய தொடங்கி, 1908 ஆம் ஆண்டில் “ஏனாதி நாராயண வித்யா சாலையில்” சேர்க்கப்பட்டார். பின்னர் அடுத்த வருடமே விருதுப்பட்டியிலுள்ள உயர்நிலைப்பள்ளியான “சத்ரிய வித்யா சாலா பள்ளியில்” சேர்ந்தார். அவருக்கு ஆறு வயதிருக்கும் பொழுது, அவருடைய தந்தை இறந்ததால், அவரின் தாயாரின் நகைகளை விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட காமராஜர், தன்னுடைய மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.
விடுதலைப் போராட்டத்தில் காமராஜரின் பங்கு:
டாக்டர் வரதராஜுலு நாயுடு, கல்யாணசுந்தர முதலியார் மற்றும் ஜார்ஜ் ஜோசப் போன்ற தேசத்தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்ட காமராஜர் சுதந்திரப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். “ஹோம் ரூல் இயக்கத்தின்” ஒரு அங்கமாக மாறிய அவர், பல போராட்டங்களிலும் கலந்துகொண்டார். பிறகு, இந்திய நேஷனல் காங்கிரஸில் முழு நேர ஊழியராக, 1920 ஆம் ஆண்டில், தனது 16வது வயதில் சேர்ந்தார். உப்பு சத்யாக்ரஹத்தின் ஒரு பகுதியாக, 1930 ஆம் ஆண்டு, சி. ராஜகோபாலாச்சாரி தலைமையில் வேதாரண்யத்தை நோக்கி நடந்த திரளணியில் பங்கேற்று, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த ஆண்டே, ‘காந்தி இர்வின் ஒப்பந்தத்தின்’ அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டார்.
மேலும், ‘ஒத்துழையாமை இயக்கம்’, ‘வைக்கம் சத்தியாக்கிரகம்’, ‘நாக்பூர் கொடி சத்தியாகிரகம்’ போன்றவற்றில் பங்கேற்ற காமராஜர் அவர்கள், சென்னையில், ‘வாள் சத்தியாக்கிரகத்தைத்’ தொடங்கி, நீல் சிலை சத்தியாகிரகத்திற்குத் தலைமைத் தாங்கினார். மேலும், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த அனைத்து போராட்டங்கள், மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற அவர், ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்தார்.
காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்தியுடன் ஏற்பட்ட நல்லுறவு:
‘காங்கிரஸ் தலைவர்’, ‘இந்திய விடுதலை வீரர்’, ‘இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகளை ஆழமாக வேரூன்ற செய்தவர்’, ‘மிகச் சிறந்த பேச்சாளர்’ எனப் புகழப்பட்ட சத்தியமூர்த்தி அவர்களை தன்னுடைய அரசியல் குருவாக மதித்தார். 1936 ஆம் ஆண்டு சத்திய மூர்த்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற போது, காமராஜரை செயலாளராக நியமித்தார். இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே, சத்திய மூர்த்தி அவர்கள் இறந்துவிட்டார், ஆனால் காமராஜர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதலில் சத்திய மூர்த்தி வீட்டிற்குச் சென்று தேசியக்கொடியை ஏற்றினார். அதுமட்டுமல்லாமல், காமராஜர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன், சத்திய மூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து வணங்கி, தன்னுடைய பணியைத் தொடர்ந்தார்.
தமிழக முதல்வராக காமராஜர்:
1953 ஆம் ஆண்டு, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தால், எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், ராஜாஜியின் செல்வாக்கு குறைந்ததோடு மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சி உள்ளேயும் மதிப்புக் குறைந்தது. இதனால், ராஜாஜி அவர்கள் பதவியிலிருந்து விலகி, தன் இடத்திற்கு சி. சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார். ஆனால், கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், காமராஜர் பெருவாரியான வாக்குகளைப் பெற்றதால், 1953 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.
முதல்வராக காமராஜர் ஆற்றியப் பணிகள்:
காமராஜர், தன்னுடைய அமைச்சரவையை மிகவும் வித்தியாசமாகவும் வியக்கும் படியும் அமைத்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கினார். முதல்வரான பின்னர், தன்னுடைய முதல் பணியாக ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தினை கைவிட்டு, அவரால் மூடப்பட்ட 6000 பள்ளிகளைத் திறந்தார். மேலும், 17000த்திற்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்தோடு மட்டுமல்லாமல், பள்ளிக்குழந்தைகளுக்கு “இலவச மதிய உணவு திட்டத்தினை” ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். இந்திய அரசியலில் தலைச்சிறந்த பணியாக கருதப்பட்ட இந்தத் திட்டம், உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகவும் அமைந்தது எனலாம். இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்விக் கற்போரின் எண்ணிக்கை, இவருடைய ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது.
தொழில்துறையின் வளர்ச்சிக்காக காமராஜர் மேற்கொண்ட திட்டங்கள்:
காமராஜர் கல்வித் துறையில் மட்டுமல்லாமல், தொழில்துறை, நீர்பாசனத் திட்டங்கள், மின் திட்டங்கள் போன்றவற்றிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார். தமிழகத்தில் தொழில் துறைகளை வளர்ப்பதை குறிக்கோளாகக் கொண்டு, பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தத் தொடங்கினார். ‘நெய்வேலி நிலக்கரித் திட்டம்’, ‘பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை’, ‘திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்’, ‘கல்பாக்கம் அணு மின்நிலையம்’, ‘ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை’, ‘கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை’, ‘மேட்டூர் காகிதத் தொழிற்சாலை’, ‘சேலம் இரும்பு உருக்கு ஆலை’, ‘பாரத மிகு மின் நிறுவனம்’, ‘இரயில் பெட்டித் தொழிற்சாலை’, ‘நிலக்கரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை’ என மேலும் பல தொழிற்சாலைகள் காமராஜரால் உருவாக்கப்பட்டன. இதைத் தவிர, ‘மேட்டூர் கால்வாய்த்திட்டம்’, ‘பவானி திட்டம்’, ‘காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்’, ‘மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு போன்ற நீர்பாசன திட்டங்களையும்’ ஏற்படுத்தினார். காமராஜர் ஆட்சியின் இறுதியில், தமிழகம் தொழில் வளத்தில் வடநாட்டு மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி, இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராஜர்:
மூன்று முறை தமிழக முதலமைச்சராக தேர்தெடுக்கப்பட்ட காமராஜர் அவர்கள், பதவியை விட தேசப்பணியும், கட்சிப்பணியுமே முக்கியம் என கருதி “கே-ப்ளான் (K-PLAN)” எனப்படும் “காமராஜர் திட்டத்தினை” கொண்டுவந்தார். அதன்படி, கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை, இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு, கட்சிப்பணியாற்ற வேண்டும் என்பது இதன் நோக்கமாகும். அதன் பேரில் அக்டோபர் 2, 1963 ஆம் ஆண்டு தன்னுடைய முதலமைச்சர் பதவியைத் துறந்த காமராஜர் பொறுப்பினை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்துவிட்டு, தில்லிக்குச் சென்றார். பிறகு, அதே ஆண்டில் அக்டோபர் 9 ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். இத்திட்டத்தினை நேரு போன்ற பெரும் தலைவர்கள் ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், லால்பகதூர் சாஸ்திரி, மொரார்சி தேசாய் செகசீகன்ராம், எசு.கே. பட்டேல் போன்றோர் பதவியைத் துறந்து இளைஞர்களிடம் ஒப்படைத்தனர். இதனால், கட்சியினரிடமும், தொண்டர்களிடமும், மக்களிடமும் மரியாதைக்குரிய ஒருவராக மாறி, அனைவருக்கும் முன்மாதிரியாகவும் திகழ்ந்தார். 1964 ஆம் ஆண்டு, ஜவர்ஹலால் நேரு மரணமடைந்தவுடன், லால்பதூர் சாஸ்திரி அவர்களை இந்திய பிரதமராக முன்மொழிந்தார். பிறகு, 1966 ஆம் ஆண்டு லால்பதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தைத் தழுவ, 48 வயது நிரம்பிய நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதம மந்திரியாக்கினார், காமராஜர்.
இறப்பு:
தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் சமூகத்தொண்டு செய்வதிலேயே அர்பணித்துக்கொண்ட காமராஜர் அவர்கள், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தன்னுடைய 72 வது வயதில் காலமானார். அதற்கு அடுத்த ஆண்டு, இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது மத்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்து வாழ்ந்த அவர், கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்தார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபொழுதும் இறுதிவரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்து இருந்தார். அவருக்காக அவர் சேர்த்து வைத்த சொத்து சில கதர் வேட்டிகள், சட்டைகள், புத்தகங்கள் மற்றும் 150 ரூபாய் மட்டுமே. இப்படிப்பட்ட உன்னதமான நேர்மையான இன்னொரு தலைவனைத் தமிழக வரலாறு மட்டுமல்ல, உலக வரலாறும் இனி சந்திக்குமோ என்பது சந்தேகமே?
இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதமர்களை உருவாக்கி, ‘இந்தியாவின் கிங்மேக்கராகத்’ திகழ்ந்த பெருந்தலைவர் காமராஜர், ‘பகைவர்களும் மதிக்கும் பண்பாளராகவும்’, ‘படிக்காத மேதையாகவும்’, ‘கல்வியின் நாயகனாகவும்’, ‘மனிதநேயத்தின் மறுஉருவமாகவும்’ திகழ்ந்தார். சினிமாவில் நாம் பார்த்து ஆச்சரியப்படும் ஹீரோக்களைப் போல இல்லாமல், நிஜ வாழ்க்கையில் உண்மையான ஹீரோவாக வாழ்ந்துக் காட்டியவர். அரசியலில் நேர்மை, வாய்மை, தூய்மை, நாணயம் என அனைத்தையும் கற்பித்த மாமனிதராக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வழிகாட்டும் தலைவராக விளங்கியவர்.
“உன்னைப்போல அரசியல்வாதி உலகில் இல்லை, நிச்சயமாக உன்னைத்தவிர உனக்கு நிகர் வேறுயாரும் இல்லை!!!