Life History பாடகர்கள்

கவிதா கிருஷ்ணமூர்த்தி

பாலிவுட்டின் சிறந்த பின்னணிப் பாடகிகளுள் பிரசித்திப் பெற்று, அனைவராலும் அறியப்படுபவர், கவிதா கிருஷ்ணமூர்த்தி அவர்கள். திரையுலகிற்கு மட்டும் தனது குரலைக் கொடுக்காமல், பல்வேறு கலந்திணைப்பு பாடல்கள், பாப், பக்திப் பாடல்கள் என பலவிதமான பாடல்களை தனது குரலில் பாடி இசையுலகில் முத்திரைப் பதித்தவர். இந்தியாவின் நான்காவது உயரிய விருதான ‘பத்மஸ்ரீ விருதினை’ வென்ற இவர், சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகளை நான்குமுறை பெற்றவர். அது மட்டுமல்லாமல், திரையுலகில் அவரது பங்களிப்பிற்காகப் பல விருதுகளைப் பெற்று, இன்றளவும் தனது ரசிகர்களைத் தனது காந்தக் குரலால் ஈர்த்து வரும் கவிதா கிருஷ்ணமுர்த்தி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் பின்னணித் திரையுலகில் அவர் படைத்த சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: ஜனவரி 25, 1958

பிறப்பிடம்: புது தில்லி, இந்தியா

பணி: பின்னணிப் பாடகி, கலந்திணைப்பு கலைஞர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

கவிதா கிருஷ்ணமூர்த்தி அவர்கள், இந்தியாவின் தலைநகரமான புதுதில்லியில், ஜனவரி மாதம் 25 ஆம் தேதி, 1958 ஆம் ஆண்டில் ஒரு கலைப் பின்னணியில் வந்த தமிழ் ஐயர் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை, கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சகத்தில் பணிபுரிந்து வந்தார், மற்றும் அவரது தாயார் பாரம்பரிய இந்திய இசை மற்றும் நடனத்தின் மீது அதீத பற்றுடைவராக இருந்தார். அவருக்குப் பெற்றோரிட்ட பெயர் ‘சாரதா கிருஷ்ணமூர்த்தி’ என்பதாகும்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்  

கவிதா கிருஷ்ணமூர்த்தி அவர்கள், ஒரு கலைப் பின்னணியில் இருந்து வந்ததாலும், அவரது அன்னைக்கு கர்நாடக இசை மீது உள்ள ஆர்வத்தாலும், கவிதாவை பாரம்பரிய இசை மற்றும் நடனம் கற்கப் பயிற்சியில் சேர்க்க எண்ணினார். அந்நேரத்தில் சிறந்த பாரம்பரிய இசைப் பயிற்சியாளர்கள் இல்லாததால், அவர் இந்துஸ்தானி இசையைக் கற்றார். மேலும், அவர் தனது அத்தையிடமிருந்து ‘ரபீந்திர சங்கீத்’ இசைமுறையைப் பயின்றார். பள்ளியில் பயிலும் காலங்களில், பல்வேறு இசைப் போட்டிகளில் கலந்துகொண்டு பலமுறை தங்கப்பதக்கங்களையும் வென்றுள்ளார். தனது பதினோராவது வயது வரை, டெல்லியில் இருந்த அவர், மும்பையில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ ஹானர்ஸ்) பெற்றார்.

இசையுலகப் பிரவேசம்

தனக்கு ஒன்பது வயதிருக்கும் போது, பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடகரான ‘ஹேமந்த் குமார்’ இசையில் ஒரு பெங்காலி பாடலை, புகழ்பெற்ற லதா மங்கேஷ்கருடன் பாடினார். அதுவரை, டெல்லியில் இருந்த அவர், திரையுலகின் பின்னணித் துறையில் கால்பதிக்க எண்ணி மும்பைக்கு சென்றார். தனது கல்லூரியில் நடந்த இசைப் போட்டிகளில் பங்கேற்ற அவர், ஹேமந்த் குமார் அவர்களின் மகளான ‘ரணு முகர்ஜி’ என்பவரை சந்தித்தார். அவர் மூலமாக ஹேமந்த் குமாரை மீண்டும் சந்தித்த அவர், மேடைக் கச்சேரிகளில் பாடகியாகப் பாடும் வாய்ப்பைப் பெற்றார். அவரது அத்தையின் தோழியும், நடிகையும், ஹேமாமாலினி அவர்களின் அன்னையுமான ஜெயா சக்கரவர்த்தி, பிரபல இசையமைப்பாளர் லக்ஷ்மிகாந்த்திடம் அவரை அறிமுகப்படுத்தி வைத்தார்.

தொழில் வாழ்க்கை

திரையுலகில் கடுமையாகப் போராடியதற்குப் பின்னர், 1980ல் ‘மாங் பரோ சஜ்னா’ என்ற படத்தில் தனது சொந்த குரலில் முதல் பாடலைப் பாடினார். துரதிருஷ்டவசமாக அந்தப் பாடல், அப்படத்தில் இடம் பெறவில்லை. மீண்டும், ஐந்து ஆண்டுகள் போராடிய அவர், ‘ப்யார் ஜுக்தா நஹி’ என்ற படத்தில் ‘தும்சே மில்கர் நா ஜானே க்யூன்’ என்ற பாடலைப் பாடினார். அப்பாடல் பெரும் வெற்றிப் பெற்றதால், அவருக்குத் தொடர்ந்து பாட வாய்ப்புகள் கிடைத்தது. ‘மிஸ்டர். இந்தியா’ (1987) படத்தில், அவர் பாடிய ‘ஹவா ஹவா’ மற்றும் ‘கர்தே ஹைன் ஹம் ப்யார் மிஸ்டர். இந்தியா சே’ பாடல்கள் அவரை மிகவும் பிரபலபடுத்தியது. லக்ஷ்மிகாந்த்-ப்யாரேலாலுடன் இணைந்து பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்த அவர், ‘1942: எ லவ் ஸ்டோரி’, ‘யாரானா’, ‘அக்னி சாக்ஷி’, ‘பைரவி’, மற்றும் ‘காமோஷி’ போன்ற படங்களில் பல பாடல்களைப் பாடி 90களில் முன்னணி பின்னணிப் பாடகியென்ற முத்திரைப் பதித்தார். பப்பி லஹரி, ஆனந்த்-மிலிந்த், ஏ. ஆர். ரகுமான், இஸ்மாயில் தர்பார், நதீம்-ஷ்ரவன், ஜதின் லலித், விஜூ ஷா மற்றும் அனு மாலிக் எனக் கிட்டத்தட்ட அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் அவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளது எனலாம்.

இல்லற வாழ்க்கை

கவிதா கிருஷ்ணமூர்த்தி அவர்கள், ஏற்கனவே திருமணமாகி மனைவியை இழந்து, மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான வயலின் வித்வான் டாக்டர். எல். சுப்ரமணியம் என்பவரை நவம்பர் மாதம் 11 ஆம் தேதி, 1999 ஆம் ஆண்டில் மணமுடித்தார். அவர்கள் இருவருக்கும் குழந்தைகள் ஏதும் இல்லை.

பிற கலைப் பங்களிப்புகள்

திருமணத்திற்குப் பின்னர் சினிமாவில் பின்னணிப் பாடுவதைக் குறைத்து கொண்டு, இசைக்குழுவில் பாடத்தொடங்கினார். கஜல், ஜாஸ், பாப், பாரம்பரிய இசை, பக்தி பாடல்கள் தொகுப்புகள் போன்றவற்றையும் வெளியிட்டார்.

விருதுகளும், அங்கீகாரங்களும்

  • 2000 – ‘பாலிவுட் விருது’
  • 2005 – இந்தியாவின் நான்காவது உயரிய விருதான ‘பத்ம ஸ்ரீ விருது’ வென்றார்.
  • 2008 – ‘யேசுதாஸ் விருது’
  • சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான ஃபிலிம்ஃபேர் விருதினை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பெற்ற அவர், 1995ல், ‘பியார் குவா சுப்கே சே’ என்ற பாடலுக்காகவும், 1996ல், ‘மேரா பியா கர் ஆயா’ என்ற பாடலுக்காகவும், 1997ல், ‘ஆஜ் மெய்ன் ஊபர்’  என்ற பாடலுக்காகவும், 2003ல், ‘டோலா ரெ டோலா’ என்ற பாடலுக்காகவும் பெற்றார்.
  • ஸ்டார் ஸ்கிரீன் விருதுகளை 1997ல், ‘ஆஜ் மெய்ன் ஊபர்’ என்ற பாடலுக்காகவும், 2000 ஆம் ஆண்டில் ‘ஹம் தில் தே சுகே சனம்’ என்ற பாடலுக்காகவும் பெற்றார்.
  • ஜீ சினி விருதுகளை 2000 ஆம் ஆண்டில், ‘நிம்பூடா’ என்ற பாடலுக்காகவும், 2003ல், ‘டோலா ரெ டோலா’ என்ற பாடலுக்காகவும் கிடைத்தது.

காலவரிசை

1958: புதுதில்லியில், ஜனவரி மாதம் 25 ஆம் தேதி, 1958 ஆம் ஆண்டில் ஒரு கலை பின்னணியில் வந்த தமிழ் ஐயர் குடும்பத்தில் பிறந்தார்.

1980: ‘மாங் பரோ சஜ்னா’ என்ற படத்தில் தனது சொந்த குரலில் முதல் பாடலைப் பாடினார்.

1987: அவர் பாடிய முதல் படமான ‘மிஸ்டர். இந்தியா’ வெளியாகி, அவரை மிகவும் பிரபலபடுத்தியது.

1999: வயலின் வித்வானான டாக்டர். எல். சும்ரமனியம் என்பவரை நவம்பர் மாதம் 11 ஆம் தேதி, 1999 ஆம் ஆண்டில் மணமுடித்தார்.

2005: இந்தியாவின் நான்காவது உயரிய விருதான ‘பத்ம ஸ்ரீ விருது’ வென்றார்.

2008: ‘யேசுதாஸ் விருது’ பெற்றார்.