Home » குன்னக்குடி வைத்தியநாதன்
Life History இசைக்கலைஞர்கள்

குன்னக்குடி வைத்தியநாதன்

வயலின்’ என்றால் முதலில் நினைவுக்கு வருவது, குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் தான். வயலின் இசையால், தனது ரசிகர்களை 61 ஆண்டுகளாக மெய்மறக்க வைத்து, அத்துறையில் முடிசூடாமன்னனாகத் திகழ்ந்த இவர், வயலினுக்கே பெருமை சேர்த்தவர் என்று கூறலாம். கர்நாடக இசை, மெல்லிசை, திரையிசை போன்ற பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்து, தனது விரல் லாவகத்தினால் தனக்கே உரித்தான பாணியில் மக்களை மயக்கி, அவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ‘பத்மஸ்ரீ விருது’, ‘கலைமாமணி விருது’, ‘இசைபெரறிஞர் விருது’, ‘கர்நாடக இசைஞானி விருது’ எனப் பல்வேறு விருதுகளைப் பெற்ற குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: 2 மார்ச், 1935

பிறந்த இடம்: குன்னக்குடி சென்னை மாகாணம், பிரிட்டிஷ் இந்தியா

இறப்பு: 8 செப்டம்பர், 2008

தொழில்: வயலின் வித்வான், இசையமைப்பாளர்

நாட்டுரிமை: இந்தியா

 

பிறப்பு

குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள், இந்தியாவில் தென்தமிழ்நாட்டில், இறைவன் முருகனின் கோவில் நகரமான குன்னக்குடியில் மார்ச் 2ஆம் தேதி, 1935 ஆம் ஆண்டில், ஸ்ரீ ராமஸ்வாமி சாஸ்த்ரி என்பவருக்கும், திருமதி மீனாட்சி என்பவருக்கும் மகனாகப் பிறந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை

இவருடைய தந்தை தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் ஒரு அறிஞராகத் திகழ்ந்ததால், கர்நாடக இசை மற்றும் கதாகாலக்ஷேபத்தில் ஒரு இசையமைப்பாளராகவும், நுட்பத்திறமை மிக்கவராகவும் இருந்தார். இதன் காரணமாகவே, வைத்தியநாதன் அவர்கள், அவரது இளம் வயதிலேயே, அவரது தந்தையிடமிருந்து தென்னிந்திய பாரம்பரிய இசை கற்கத் தொடங்கினார். தனது 12வது வயதிலிருந்து கச்சேரிகளில் பங்கேற்றார். அவரது மூத்த சகோதரியான குன்னக்குடி சுப்புலட்சுமியும், மிகச் சிறந்த கர்நாடக இசைப் பாடகியாகவும், கைத்தேர்ந்த வயலின் வித்வானாகவும் இருந்தவர்.

இசையுலக வாழ்க்கை

தனது இசைப்பயணத்தை, தனது பிறப்பிடமான குன்றக்குடியிலுள்ள ஷண்முகநாதர் ஆலயத்தில் இசைக்கபடும் பக்தி இசையைப் பயின்று, பக்திப் பாடல்களை, ஆலய அர்ச்சகர்களுடன் இணைந்து பாடுவதிலிருந்து தொடங்கினார். ஆரம்பத்தில் தனது சமகாலத்தவர்களான செம்மங்குடி சீனிவாசய்யர், மகாராஜபுரம் சந்தானம், சூலமங்கலம் சகோதரிகள், சீர்காழி கோவிந்தராஜன், டி.என். ராஜரத்தினம் பிள்ளை, திருவெண்காடு சுப்ரமணிய பிள்ளை ஆகியோருடன் இணைந்து குழுவாக கச்சேரிகளில் பங்கேற்றார். சிறிது காலத்திற்குப் பின்னர், தனிக் குழு ஒன்றை நிறுவி, தனித்து செயல்பட்டார். மேலும், 1976ல் இருந்து, அவர் தனியாகவும் கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தார்.

காரைக்குடியில் நடந்த அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் அவர்களின் இசைக் கச்சேரியில், பக்க வாத்தியமாக வயலின் வாசித்ததே, இவரின் முதல் வயலின் அரங்கேற்றமாகும். வலயப்பட்டி சுப்பிரமணியம் என்ற தவில் வித்வானுடன் இணைந்து, பெருமளவு வயலின் கச்சேரிகளை அரங்கேற்றிய அவர், 3000க்கும் மேற்பட்ட கச்சேரிகளை அவரது கூட்டணியில் அரங்கேற்றியுள்ளார். இவர், கர்நாடக இசை, திரைப்பட இசை போன்றவையோடு நிறுத்திக் கொள்ளாமல், பறவைகள் மற்றும் மிருகங்களின் ஓசைகள் போன்ற இயற்கை ஒலிகளையும், சிறிதளவு கூட மாற்றமில்லாமல், அப்படியே வயலினில் வாசித்தார்.

திரையுலக வாழ்க்கை

தமிழில் பக்திப் பாடல்களுக்காக அவரது சிறப்பான பங்களிப்பை அளித்து வந்தார். இத்துடன் அவரது இசையுலக வாழ்க்கை நின்று விடாமல், அவர் திரைத்துறையிலும் கால் பதித்தார். திரைத்துறையில் அவர், முதன்முதலில் இசையமைத்த படம், 1969ல் வெளியான ‘வா ராஜா வா’ என்ற திரைப்படமாகும். மேலும், அவர், ‘தெய்வம்’, ‘ராஜராஜசோழன்’, ‘கந்தன் கருணை’, ‘மேல்நாட்டு மருமகள்’, ‘திருவருள்’, ‘திருமலை தென்குமரி’, ‘அகத்தியர்’, ‘மனிதனும் தெய்வமாகலாம்’ உள்ளிட்ட 22 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்தார். 1970ல் வெளியான ‘திருமலை தென்குமரி’ என்ற திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக, தமிழக அரசின் ‘சிறந்த இசையமைப்பாளர் விருதைப்’ பெற்றார். பின்னர், 1983ல், அவரது சொந்தத் திரைப்படமான ‘தோடிராகம்’ என்னும் திரைப்படத்தைத் தயாரித்தார். தெய்வீக மணம் கமழும், பக்திச் சுவை சொட்டும் பாடல்கள் மட்டுமல்லாமல், அவர் பல தமிழ்த் திரைப்படங்களில் பின்னணியும் பாடி இருக்கின்றார். மேலும், ஒரு சில திரைப்படங்களில் (2005ல் வெளியான ‘அந்நியன்’ திரைப்படத்தில்) கௌரவ வேடங்களிலும் நடித்துள்ளார்.

பிறப்பணிகள்

இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றினார். 28 ஆண்டுகளாக, தஞ்சாவூரிலுள்ள திருவையாறு தியாகராஜா சபாவின் செயலாளராக செயல்பட்ட அவர், ‘தியாகராஜா ஆராதனைகளை பல ஆண்டுகளாக நடத்தி வந்தார். ‘இசைக்கு நோய்த்தீர்க்கும் மருத்துவ குணம் உள்ளது’ என்பதை உணர்ந்து, அதில் மிகத் தெளிவாக இருந்த அவர், ‘ராக ஆராய்ச்சி மையம்’ என்ற அமைப்பை நிறுவி, ‘இசை மூலமாக, சில நோய்களுக்கு தீர்வு காண முடியுமா?’ என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார். அவர், ஆல் இந்தியா ரேடியோவுடன் நீண்ட நாட்கள் நட்புறவில் இருந்து வந்தார்.

விருதுகளும், அங்கீகாரங்களும்

நெற்றியில் நீண்ட திருநீற்றுப் பட்டையும், பெரிய குங்குமப் பொட்டும் தனது அடையாளங்களாகக் கொண்ட குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களுக்கு, இந்தியாவின் மிக உயரிய விருதான, “பத்மஸ்ரீ விருது”, இந்திய அரசால் வழங்கப்பட்டது.

‘கலைமாமணி விருது’

1970ல் வெளியான ‘திருமலை தென்குமரி’ என்ற திரைப்படத்திற்காக, ‘தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது’ பெற்றார்.

1989ல், ‘இசைப்பேரறிஞர் விருது’ வழங்கப்பட்டது.

1993 ஆம் ஆண்டில், சங்கீத நாடக அகாடமி மூலம் ‘சங்கீத் நாடக அகாடமி விருது’, மற்றும் ‘கர்நாடக இசைஞானி விருது’ பெற்றார்.

இறப்பு

குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவர், சென்னையிலுள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். பின்னர், அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், செப்டம்பர் 8ஆம் தேதி, 2௦௦8 ஆம் ஆண்டில், மரணமடைந்தார். அவர் இறக்கும் போது, அவருக்கு வயது, 75.

காலவரிசை

1935: குன்னக்குடியில் மார்ச் 2, 1935 ஆம் ஆண்டில், ஸ்ரீ ராமஸ்வாமி சாஸ்த்ரிக்கும், திருமதி மீனாட்சிக்கும் மகனாகப் பிறந்தார்.

1947: தனது 12வது வயதிலிருந்து கச்சேரிகளில் பங்கேற்றார்.

1969: அவர் திரைத்துறையில், முதன்முதலில் ‘வா ராஜா வா’ என்ற திரைப்படத்திற்காக இசையமைத்தார்.

1970: 1970ல் வெளியான ‘திருமலை தென்குமரி’ என்ற திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக, தமிழக அரசின் ‘சிறந்த இசையமைப்பாளர் விருதைப்’ பெற்றார்.

1976: தனியாகவும் கச்சேரிகள் நடத்த ஆரம்பித்தார்.

1983: அவரது சொந்தத் திரைப்படமான ‘தோடிராகம்’ என்னும் திரைப்படத்தைத் தயாரித்தார்.

1989: ‘இசைப்பேரறிஞர் விருது’ வழங்கப்பட்டது.

1993: சங்கீத நாடக அகாடமி மூலம் ‘சங்கீத் நாடக அகாடமி விருது’, மற்றும் ‘கர்நாடக இசைஞானி விருது’ பெற்றார்.

2005: ஷங்கர் அவர்களின் படமான ‘அந்நியன்’ திரைப்படத்தில், அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.

2௦௦8: சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், செப்டம்பர் 8ஆம் தேதி,  மாரடைப்பால் மரணமடைந்தார்.