மதுபாலா
மதுபாலா
Life History நடிகை

மதுபாலா

மதுபாலா அவர்கள், ஒரு புகழ்பெற்ற இந்தித் திரைப்பட நடிகை ஆவார். சுமார் எழுபது திரைப்படங்களுக்கும் மேல் நடித்து, இந்திய சினிமாவில் புகழ்பெற்ற முன்னோடிகளில் ஒருவராக விளங்கியவர். இவருடைய அழகிய தோற்றமும், வசீகரமான நடிப்பும், அனைவரையும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல், ரசிகர்களாலும், திரைப்பட ஊடகங்களாலும், மதுபாலாவை திரையில் தோன்றும் “வீனஸ்” என வர்ணிக்கவும் செய்தது. 1990 ஆம் ஆண்டு திரைப்படப் பத்திரிக்கை நடத்திய வாக்கெடுப்பில், எல்லா காலத்திலும் மிகவும் பிரபலமான இந்தி நடிகையாக 58 சதவிகித ஓட்டுகளை பெற்றார். இத்தகைய சிறப்புப் பெற்ற மதுபாலாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: பிப்ரவரி 14, 1933

பிறப்பிடம்: தில்லி, இந்தியா

பணி: நடிகை

இறப்பு: பிப்ரவரி 23, 1969

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

“மும்தாஜ் பேகம் ஜெகான் தேஹலவி” என்ற இயற்பெயர் கொண்ட மதுபாலா அவர்கள், 1933  ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14  ஆம் நாள், இந்தியாவிலுள்ள புது தில்லியில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு எட்டு சகோதிரிகளும், இரண்டு சகோதரர்களும் இருந்தனர்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

இவர் பிறந்த ஒரு சில ஆண்டுகளுக்குள் இவருடைய தந்தை வேலை இழந்தது மற்றும் மதுபாலாவின் நான்கு சகோதரிகளும், இரண்டு சகோதரர்களும் மரணம் அடைந்தது என ப்பல பிரச்சனைகளும், சோதனைகளும் இவருடைய குடும்பத்திற்கு வந்து சேர்ந்தது. வறுமை சூழலில் தள்ளப்பட்ட இவருடைய குடும்பம், பிறகு மும்பைக்குக் குடிபெயர்ந்தது. அவரது தந்தை, பல திரைப்பட நிறுவனங்களில் சினிமாவில் வாய்ப்புத் தேடி அலைந்தார். அவரின் பல வருடப் போராட்டத்திற்குப் பிறகு, மதுபாலா தன்னுடைய ஒன்பது வயதில், 1942 ஆம் ஆண்டு சினிமா துறையில் நுழைந்தார்.

ஆரம்பகால திரைப்பட வாழ்க்கை

1942 ஆம் ஆண்டு வெளிவந்த “பஸந்த்” என்ற இந்தித் திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதில் புகழ்பெற்ற நடிகையான “மும்தாஜ் ஷாந்தியின்” மகளாக நடித்திருப்பார். இவருடைய நடிப்பால் கவரப்பட்ட “தேவிகா ராணி”, அவருடைய பெயரை மதுபாலா என்று மாற்றி வைத்து கொள்ளும்படி கூறினார். அதன் பிறகு, ‘மும்தாஜ் மஹல்’ (1944),  ‘தான்னா பஹத்’ (1945),  ‘ராஜ் புதானி’ (1946), ‘பூஜாரி’ (1946),  ‘பூல்வாரி’ (1946), ‘சாத் சமுந்திரன் கி மல்லிகா’ (1947), ‘மேரே பகவான்’ (1947), ‘கூப்சூரத் துனியா’ (1947), ‘தில்-கி-ராணி ஸ்வீட் ஹார்ட்’ (1947), ‘சித்தோர் விஜய்’ (1947) போன்ற திரைப்படங்களில் நடித்த இவருக்கு, 1947 ஆம் ஆண்டு கீதர் சர்மா இயக்கத்தில் வெளிவாத “நீல் கமல்” என்ற திரைப்படம், இவருக்கு முன்னேற்றத்தைத் தந்தது எனலாம். அன்று வரை ‘மும்தாஜ்’ என்று குறிப்பிடப்பட்டு வந்திருந்த அவர், இத்திரைப்படத்திற்கு பிறகு, ‘மதுபாலா’ எனப் பெயர்பெற்றார்.

வெற்றிப் பயணம்

1949 ஆம் ஆண்டு “பாம்பே டாக்கிஸ்” தயாரிப்பில் வெளிவந்த “மஹலில்” என்ற திரைப்படம் இவருக்கு பெரும் வெற்றியை தேடித்தந்தது. இவ்வெற்றியினைத் தொடர்ந்து, இந்தித் திரையுலகில் ஒரு முன்னணி நட்சத்திரமாக மாறினார். தன்னுடைய அழகிய தோற்றத்தினாலும், வசீகர நடிப்பாலும் அனைவரையும் கவர்ந்த அவருக்கு, ‘தரானா’ (1951), ‘பாதல்’ (1951), ‘சங்தில்’ (1952),  ‘அமர்’ (1954), ‘மிஸ்டர் அண்டு மிஸஸ் 55’ (1955),  ‘கல் ஹமாரா ஹை’ (1959) போன்ற திரைப்படங்கள் இவருக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தது. ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடிக்க அவருக்கு விருப்பம் தேன்றியது மட்டுமல்லாமல், தியேட்டர் ஆர்ட்ஸ் போன்ற அமெரிக்கப் பத்திரிக்கைகளிலும் அவருடைய புகைப்படம் வெளியிடப்பட்டது. இது அந்த காலக்கட்டத்தில், ஹிந்தித் திரைப்படத் துறையில் பெருமைமிக்கதாகப் பார்க்கப்பட்டது. அமெரிக்க இயக்குனரான “பிரான்க் கப்ரா” இவரை ஹாலிவுட்டில் அறிமுகம் செய்ய விரும்பினார், ஆனால் மதுபாலாவின் தந்தை மறுத்ததால், அந்த வாய்ப்புக் கைவிடப்பட்டது. பிறகு, 1960 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “முகல்-ஏ-ஆஸம்” மற்றும் “பர்ஸாத் கி ராத்” என்ற திரைப்படங்கள், இவருக்கு மிகப் பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது மட்டுமல்லாமல், புகழின் உச்சிக்கே கொண்டுசென்றது எனலாம். அசோக் குமார், ராஜ் கபூர், பிரதீப் குமார், திலீப் குமார், ரெஹ்மான், ஷம்மி கபூர், குரு தத், தேவ் ஆனந்த் போன்ற கதாநாயகர்களுடன் நடித்த மதுபாலா, தொடர்ச்சியாக பல வெற்றிப் படங்களைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், இந்தித் திரைப்படத்துறையில் மிகப் பெரிய ஸ்டார் அந்தஸ்தையும் பெற்றார்.

மதுபாலா நடித்த பிறதிரைப்படங்கள்

‘பரய் ஆக்’ (1948), ‘லால் துப்பட்டா’ (1948), ‘தேஷ் சேவா’ (1948), ‘அமர் பிரேம்’ (1948), ‘சிப்பாயா’ (1948), ‘சிங்கார்’ (1949),  ‘பரஸ்’ (1949), ‘நேகி அவுர் பதி’ (1949), ‘இம்திஹான்’ (1949),  ‘துலாரி’ (1949), ’தௌலத்’ (1949), ‘அப்ராதி’ (1949), ‘பரதேஷ்’ (1950),  ‘நிஷானா’ (1950),  ‘மதுமாலா’ (1950), ‘ஹன்ஸ்தே ஆன்சூ’ (1950), ‘பேகசூர்’ (1950), ‘சயான்’ (1951), ‘நஸ்னீன்’ (1951), ‘நாதான்’ (1951), ‘கஸானா’ (1951),  ‘சகி’ (1952),  ‘ரெயில் கா டிப்போ’ (1953), ‘அர்மான்’ (1953), ’பஹீத் தின் ஹூவே’ (1954), ‘தீரன்தேஷ்’ (1955), ‘நவாப்’ (1955), ‘நாதா’ (1955), ‘ஷ்ரின் பர்ஹத்’ (1956), ‘ராஜ் ஹாத்’ (1956), ‘தேகே கி மால்மால்’ (1956), ‘யாஹீதி கி லத்கி’ (1957), ‘கேட்வே ஆப் இந்தியா’ (1957), ‘ஏக் ஸால்’ (1957), ‘போலிஸ்’ (1958), ‘பேகன்’ (1958), ‘காலாபானி’ (1958), ‘ஹௌரா பிரிட்ஜி’ (1958), ‘சல்தி கா நாம் காடி’ (1958),  ‘பகி சிப்பாய்’ (1958),  ‘இன்ஸான் ஜாக் உடா’ (1959),  ‘உஸ்தாத்’ (1959),  ‘மெலோன் கே க்வாப்’ (1960),  ‘ஜாலி நோட்’ (1960), ‘பர்ஸாத் கி ராத் ’(1960),  ‘முகல்-ஏ-ஆஸம்’ (1960),’ பாஸ்போர்ட்’ (1961), ‘ஜூம்ரோ’ (1961), ‘பாய் பிரண்ட்’ (1961), ‘ஹாப் டிக்கெட்’ (1962), ‘ஷராபி’ (1964), ‘ஜ்வாலா’ (1971) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காதல் பிரச்சனையும், இல்லற வாழ்க்கையும்

1944 ஆம் ஆண்டு “ஜவார் பாடா” என்ற திரைப்படத்தில் முதன் முதலாக திலீப்குமாருடன் இணைந்து நடித்தார். பிறகு, ‘ஹர் சிங்கர்’ (1949), ‘தரானா’ (1951), போன்ற திரைப்படங்களில் இணைந்த இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இருந்தாலும், அதை வெளிகாட்டிக் கொள்ளாதபடி இருந்த அவர்கள், 1950 ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் வெளிபடுத்தினர். பல பிரச்சனைக்கு மத்தியில் பயணம் செய்த அவர்களுடைய காதல், 1957 ஆம் ஆண்டு “நயா தௌர்” என்ற திரைப்பட படப்பிடிப்பு போபாலுக்கு செல்வதாக இருந்தது, ஆனால் இவர்களுடைய காதலை விரும்பாத மதுபாலாவின் தந்தை இந்தப் படப்பிடிப்பை நிராகரித்தார். இதனால், இந்தத் திரைப்படத்தின் இயக்குனரான பி. ஆர். சோப்ரா மதுபாலாவின் மீது வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில், திலீப்குமார் மதுபாலாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி கூறியதால், இவர்களுக்குள்ளே பிளவும் ஏற்பட்டு காதல் முடிவுக்கு வந்தது. பிறகு, 1960 ஆம் ஆண்டு நடிகரும் பின்னணி பாடகருமான கிஷோர்குமாரை திருமணம் செய்துகொண்டார்.

இறப்பு

சிறு வயதிலிருந்தே உடல் ரீதியாலும், மனரீதியாலும் பல பிரச்சனைகளை சந்தித்த மதுபாலா அவர்கள், 1960 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் உடல் நிலை மிகவும் மோசமடையத் தொடங்கியது. இளம் வயதிலிருந்தே இருதயப் பிரச்சனையில் அவதிப்பட்டு வந்த மதுபாலா அவர்கள், 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி தன்னுடைய 36வது வயதில் காலமானார். இவரை கௌரவிக்கும் வகையில் 2008 ஆம் ஆண்டு ‘மதுபாலா உருவம் பதித்த தபால்தலை’ வெளியிடப்பட்டது.

மதுபாலா அவர்கள், குறுகிய காலமே திரையுலகில் நடித்திருந்தாலும், தன்னுடைய அழகாலும், வசீகர நடிப்பாலும் ரசிகர்கள் நெஞ்சில் நீங்காது இடம்பிடித்தார். இன்று வரையில் பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் அவர், நவீன இந்தி நடிகைகளின் முன்னோடியாக இருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

காலவரிசை:

1933 – பிப்ரவரி மாதம் 14 ஆம் நாள், இந்தியாவிலுள்ள புது தில்லியில் பிறந்தார்.

1942 – ‘பஸந்த்’ என்ற இந்தித் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

1960 – நடிகரும், பின்னணிப் பாடகருமான கிஷோர்குமாரை திருமணம் செய்துகொண்டார்.

1960 – ‘முகல்-ஏ-ஆஸம்’ என்ற திரைப்படம் “ஃபிலிம்ஃபேர் விருதுக்காக” பரிந்துரைக்கப்பட்டது.

1969 – பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி தன்னுடைய 36வது வயதில் காலமானார்.

2008 – மதுபாலா உருவம் பதித்த தபால்தலை வெளியிடப்பட்டது.