திருமதி. பிரதிபா தேவிசிங்க் பாட்டில் இந்தியாவின் பன்னிரண்டாம் ஜனாதிபதியும், இந்தியாவின் அரசியல் அலுவலகத்திற்கு மிக உயரிய பதவியில் நியமனமான முதல் பெண்மணியும் ஆவார்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினரான திருமதி பிரதிபா பாட்டில் அவர்கள், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமை வென்று, ஒரு வரலாற்றை உருவாக்கி, இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதியாகவும் பதவியேற்றார். தொழில்ரீதியாக ஒரு வழக்கறிஞரான அவர் ராஜஸ்தானின் கவர்னர் பதவியிலும் பணிபுரிந்திருக்கிறார். ஆனால், இத்துடன் அவருடைய பணிகள் முடிந்துவிடவில்லை. தனது 28 ஆண்டுகால நீண்ட அரசியல் வாழ்க்கையில், பிரதிபா பாட்டில் அவர்கள் துணை கல்வியமைச்சர் பதவியிலிருந்து சமூக நலத்துறை, சுற்றுலாத்துறை, மற்றும் வீட்டுவசதித் துறை போன்ற பல்வேறு வசீகரிக்கும் அமைச்சர் பதவிகளிலும் பணிபுரிந்திருக்கிறார். ஒவ்வொரு பதவியிலும், தனது துணிவையும், சாமர்த்தியத்தையும் நிரூபித்ததால், திருமதி. பிரதிபா பாட்டில் அவர்களின் அசாதாரண அரசியல் வாழ்க்கையில் அவர் இந்திய ஜனாதிபதியாகவும் நியமிக்கப்பட்டார் என்பதற்கான உறுதியான காரணம் எனவும் கூறலாம். அரசியலில் நுழைய வேண்டுமென்ற ஆர்வமும், ஊக்கமும், பிரதிபா பாட்டில் அவர்களுக்கு அவரது தந்தையிடமிருந்து வந்தது. தனது உறுதி, செயல் மற்றும் சேவைகளால், வரும் நாட்களில் அனைவரும் நினைவு கூர்ந்து, மதிக்கப்படும் வகையில் தனக்கென்று இந்திய வரலாற்றின் புகழ்பெற்ற பக்கங்களில் அவரது பெயரைப் பொறித்தார். அவரது வாழ்க்கை, அவர் ஆற்றிய பணிகள் மற்றும் சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: டிசம்பர் 19, 1934
பிறந்த இடம்: நாத்கோன், மகாராஷ்டிரா
தொழில்: வழக்கறிஞர், இந்திய ஜனாதிபதி
தாய்மொழி: மராட்டி
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
திருமதி. பிரதிபா பாட்டில் அவர்கள், மகாராஷ்டிராவிலுள்ள ஜல்கோன் மாவட்டத்தில் இருக்கும் போட்வத் தாலுகாவிலுள்ள நத்கோன் என்ற கிராமத்தில் டிசம்பர் 19, 1934 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது தந்தை நாராயண் ராவ் ஒரு உள்ளூர் அரசியல்வாதி ஆவார்.
ஆரம்ப கால வாழ்க்கையும், கல்வியும்
திருமதி. பிரதிபா பாட்டில் அவர்கள், அவரது முதன்மைக் கல்வியை, ஜல்கோனிலிருக்கும் ஆர்.ஆர். வித்யாலயாவில் பெற்றார். பின்னர், மும்பையிலுள்ள அரசு சட்டக் கல்லூரியில் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் வென்றார். அவர் ஜல்கோனிலிருக்கும் மூல்ஜி ஜேதா கல்லூரியில், அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் தனது முதுகலைப் பட்டத்தைத் தொடர்ந்தார். தனது கல்லூரி நாட்களில், விளையாட்டுத் துறையில் தீவிரமாக கவனம் செலுத்திய அவர், டேபிள் டென்னிஸில் சிறந்து விளங்கினார். 1962ல், எம்.ஜே. கல்லூரியின் ‘கல்லூரி ராணி’ என்று பெயரிடப்பட்டு, அப்பட்டத்தையும் வென்றார்.
இல்லற வாழ்க்கை
திருமதி. பிரதிபா பாட்டில் அவர்கள், ஜூலை 7, 1965 ஆம் ஆண்டு, டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத் என்பவரை மணமுடித்தார். அவர்களுக்கு ராஜேந்திர சிங் என்ற ஒரு மகனும், ஜோதி ரத்தோர் என்ற ஒரு மகளும் பிறந்தனர்.
அரசியல் வாழ்க்கை
திருமதி. பிரதிபா பாட்டில் அவர்கள், ஜல்கோன் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு பயிற்சி வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவரது 27வது வயதில், அவர் ஜல்கோன் சட்டமன்ற தொகுதியிலிருந்து, மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக, அவர் எட்லாபாத் (முக்தாய் நகர்) தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், அரசின் பல்வேறு பதவிகளிலும், மகாராஷ்டிரா சட்டமன்றத்திலும் வெவ்வேறு பதவிகள் வகித்து வந்தார். 1967 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை, கல்வித் துணை அமைச்சராகப் பணியாற்றிய அவர், பொது சுகாதாரத்துறை இலாக்காவிலிருந்து சுற்றுலாத்துறை, பாராளுமன்ற விவகாரத் துறை போன்ற பல அமைச்சர் பதவிகளிலும் செம்மையாக செயல்பட்டார். திருமதி. பிரதிபா பாட்டில் அவர்கள், மகாராஷ்டிராவின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் பணியாற்றினார். இதைத்தவிர, அவர் சிறப்புரிமைகள் குழுவின் தலைவராகவும், மாநிலங்களவையின் வர்த்தக ஆலோசனை குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார். திருமதி. பிரதிபா பாட்டில் அவர்கள், நவம்பர் 8, 2004 அன்று ராஜஸ்தான் கவர்னராகப் பொறுப்பேற்று, ஜூன் 2007 வரை அப்பதவியில் இருந்தார். ஜூலை 25, 2007 ஆம் ஆண்டு, அவர் இந்தியாவின் 12 வது குடியரசு தலைவராகப் பதவியேற்றார். ஜனாதிபதி தேர்தலில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பைரோன் சிங் ஷெகாவத்தை 300,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
அரசியல் அல்லாத சாதனைகள்
அரசியலில் திருமதி. பிரதிபா பாட்டில் அவர்கள் ஆற்றிய சாதனைகள் தவிர, அவர் பல்வேறு நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டிருந்தார் மற்றும் 1982 முதல் 1985 வரை, மகாராஷ்டிரா மாநில நீர் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராகவும் செயல்பட்டார். 1988 முதல் 1990 வரை, அவர் மகாராஷ்டிரா பிரதேச காங்கிரஸ் கமிட்டி (PCC) தலைவராக பணியாற்றினார். தேசிய கூட்டமைப்பின் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களின் இயக்குனராகவும், துணைத் தலைவராகவும் இருந்ததைத் தவிர, திருமதி. பிரதிபா பாட்டில் அவர்கள் தேசிய கூட்டுறவு இந்திய யூனியனின் நிர்வாக உறுப்பினராகவும், மகாராஷ்டிரா அரசின் 20 புள்ளி நிரல் நடைமுறைப்படுத்தல் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார். இதை தவிர, அவர் நைரோபி மற்றும் பியூர்டோ ரிகோ சர்வதேச குழுவின் சமூகநல மாநாடுகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1985 ஆம் ஆண்டில், பல்கேரியாவிற்கு சென்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஐ) பிரதிநிதிகளின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1988 ஆம் ஆண்டில், லண்டனில் நடந்த காமன்வெல்த் தலைமை அதிகாரிகள் மாநாட்டின் உறுப்பினராகவும் ஆனார். ‘பெண்களின் தகுதி’ (Status of Women) என்ற தலைப்பில் ஆஸ்திரியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில், இந்திய தூதுக்குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். செப்டம்பர் 1995ல், சீனாவிலுள்ள பெய்ஜிங்கில் நடந்த ‘உலக பெண்கள் மாநாட்டின்’ பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டார்.
பங்களிப்பு
திருமதி. பிரதிபா பாட்டில் அவர்கள், இந்தியாவின் வளர்ச்சிக்காக முக்கிய பங்கு வகித்ததோடு மட்டுமல்லாமல், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காகவும், சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டோரின் பொது நலனுக்காகவும் பாடுபட்டார். இன்னும். அவர் பல்வேறு நிறுவனங்கள் அமைத்து, அதன் முன்னேற்றத்தை நோக்கி பயணம் செய்கிறார். அவர் மும்பை மற்றும் தில்லியில், பணிபுரியும் பெண்களுக்காக விடுதிகளும், கிராமப்புற இளைஞர்களுக்காக ஜல்கானில் ஒரு பொறியியல் கல்லூரியும், பெண்களின் முன்னேற்றத்திற்காக பல நலன்புரி நடவடிக்கைகளில் ஈடுபடும் ‘ஷ்ரம் சாதனா டிரஸ்ட்’ என்ற அமைப்பையும் நிறுவினார். அவர் அமராவதி மாவட்டத்தில், பார்வையற்ற குழந்தைகளுக்காக ஜல்கோனில் ஒரு தொழில்துறைப் பயிற்சிப் பள்ளியையும், விமுக்தா ஜடிஸ் என்ற நாடோடி பழங்குடியினரின் ஏழை குழந்தைகள் மற்றும் பின்தங்கிய வகுப்பு குழந்தைகளுக்காகவும், பள்ளிகள் அமைத்துக் கொடுத்தார். மேலும், மகாராஷ்டிராவிலுள்ள அமராவதியில், ‘கிருஷி விக்யான் கேந்திரா’ என்ற விவசாயிகளின் பயிற்சி மையத்தையும் திறந்து வைத்தார். அவர் ‘மஹிலா விகாஸ் மகாமண்டல்’ என்ற அமைப்பை அமைக்க புரட்சிகரமான நடவடிக்கை மேற்கொண்டார். இந்த அமைப்பின் கீழ், மகாராஷ்டிரா மாநில அரசு, மாநிலத்தில் உள்ள பெண்களின் வளர்ச்சிக்கு பொறுப்பாகும். மகாராஷ்டிராவில், அமராவதியிலுள்ள ஏழை மற்றும் தேவைமிகுந்த பெண்களுக்கு இசை, கணினி மற்றும் தையல் வகுப்புகளுக்கும் ஏற்பாடு செய்தார்.
காலவரிசை
1934: மகாராஷ்டிராவிலுள்ள நாத்கோனில் டிசம்பர் 19, 1934 ஆம் ஆண்டு பிறந்தார்.
1962: எம்.ஜே. கல்லூரியின் ‘கல்லூரி ராணி’ (College Queen) என்ற பட்டத்தை வென்றார்.
1965: டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத் என்பவரைத் திருமணம் செய்தார்.
1967-72: பிரதி அமைச்சராகப் பணியாற்றினார். மேலும், மகாராஷ்டிரா அரசின் கீழ் பொது சுகாதார, தடை, சுற்றுலா, வீடமைப்பு பாராளுமன்ற விவகாரம் போன்ற பல்வேறு துறைகளிலும் பணிபுரிந்தார்.
1972-74: சமூகநல அமைச்சரவை மந்திரியானார்.
1974-75: பொது சுகாதார மற்றும் சமூகநல அமைச்சரவை மந்திரியானார்.
1975-76: மகாராஷ்டிரா அரசின் கீழ் மதுவிலக்கு தடை, புனர்வாழ்வு மற்றும் கலாச்சார அலுவல்களின் மந்திரியானார்.
1977-78: மகாராஷ்டிரா அரசின் கல்வி அமைச்சரானார்.
1979-1980: மகாராஷ்டிரா சட்டமன்ற அவையின் சிடிபி (ஐ) யின் எதிர்க்கட்சி தலைவரானார்.
1982-83: நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறையின் அமைச்சரானார்.
1983-85: சிவில் சப்ளைஸ் மற்றும் சமூக நல அமைச்சரானார்.
1986-88: ராஜ்ய சபாவின் துணைத் தலைவராகவும், சிறப்புரிமைகள் குழு கூட்டத்தலைவராகவும், ராஜ்ய சபாவின் வர்த்தக ஆலோசனை குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.
1988-90: மகாராஷ்டிரா பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (PCC) தலைவரானார்.
1991-96: மக்களவை மளிகைக் குழுவின் தலைவரானார்.
2004-2007: ராஜஸ்தான் ஆளுநராக பணிபுரிந்தார்.
2007 – 2011: இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதியாக சேவையாற்றி வருகிறார்.