Life History நடிகர்

பிரித்விராஜ் கபூர்

பிரிட்டிஷ் இந்தியாவிலுள்ள பஞ்சாபில் இருக்கும் ஒரு இளவயது காவல்துறை அதிகாரியின் இளமையான, துருதுருப்பான மற்றும் அழகான மகனான பிரித்விராஜ் கபூர், பாலிவுட்டில் தனது வாழ்க்கையை தொடங்குவதன் நோக்கமாக மும்பைக்கு ஓடி வந்தார். அவர் இன்றும் இந்திய திரைப்பட துறையில் மிக பிரபலமாக நினைவு கூறப்படும் நடிகர்களில் ஒருவராக திகழப்படுகிறார். அவரது கூர்மையான அறிவும், திறமையான அம்சங்களும், இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பே அவரை இந்திய சினிமாவில் அவரது வழியில் செல்ல முற்பட செய்தது. அவர் உயர்வான வெற்றியை சுவைக்காவிட்டாலும், நினைவில் நிற்கக் கூடிய சில சிறந்த சிறிய கதாபாத்திரங்களைக் கொடுத்துள்ளார். இந்திய சினிமாவின் அமைதியான காலங்களிலேயே அவரது சினிமா தொழில் வாழ்க்கையை தொடங்கினாலும், படிப்படியாக அதில் வளர்ந்து, இறுதியில் பாலிவுட்டில் தனது சொந்த சினிமா செட் நிறுவனமான ‘பிருத்வி தியேட்டர்சை’ நிறுவினார். சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், அவர், ஹிந்தி திரையுலகில் ஐந்து தலைமுறை நடிகர்களைக் கொடுத்திருக்கும், இந்தியாவின் முதல் திரைப்பட குடும்பமான ‘கபூர்ஸ்’ என்பதன் நிறுவனராவார். இத்தகைய சிறப்புமிக்க ஹிந்தி திரையுலக ஜாம்பவானான ‘ப்ரித்விராஜ் கபூர்’ அவர்களைப் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: நவம்பர் 3, 1906

பிறந்த இடம்: லையல்பூர், பஞ்சாப்

இறப்பு: மே 29, 1972

தொழில்: நடிகர்

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

ப்ரித்விராஜ் கபூர் அவர்கள், பிரிட்டிஷ் இந்தியாவிலுள்ள பஞ்சாபில் இருக்கும் லையல்பூர் நகரத்தின் (இப்போது ஃபைஸலாபாத் நகரமாக பாகிஸ்தானில் உள்ளது) அருகிலிருக்கும் சாமுந்த்ரி என்ற இடத்தில் ஒரு நடுத்தர வர்க்க இந்துமத பஞ்சாபி கத்ரி குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தையான திவான் பஷேஸ்வர்நாத் சிங் கபூர், காவல்துறை துணை ஆனையாளராக இருந்தார். ப்ரித்விராஜ் அவர்கள், தனது முறையான கல்வியை, லையல்பூர் மற்றும் லாகூரில் உள்ள கால்சா கல்லூரியில் பெற்றார். அந்த நேரத்தில், அவரது தந்தை பெஷாவருக்குப் பதவிமாற்றம் பெற்றதால், அவர், பாகிஸ்தானிலுள்ள பெஷாவரிளிருக்கும் எட்வர்ட்ஸ் கல்லூரியில் தனது உயர் கல்வியைத் தொடர்ந்தார். அவருள் ஒரு நடிகர் ஆவதற்கு ஆர்வம் இருந்தாலும், அவர், ஒரு வழக்கறிஞராக வேண்டுமென்பதன் நோக்கமாக சட்டத்தில் ஒர் ஆண்டு பயிற்சித் திட்டத்தில் சேர்ந்தார்.

திரையுலக வாழ்க்கை

பிரித்விராஜ் கபூர், அவரது அத்தையிடம் கடன் வாங்கிய பணத்தை கொண்டு, ஹிந்தி திரையுலகின் சுவையை சுவைப்பதற்காக 1928ல் மும்பைக்கு சென்றார். அவர் தனது முதல் படத்திலேயே கூடுதல் பங்கு வகிக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்தார். மேலும், 1929ல் வெளியான “சினிமா கேர்ள்” என்ற அவரது மூன்றாவது ஊமைப்படத்தில், முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒன்பது ஊமைப்படங்களில் நடித்து, தனது திரையுலக வாழ்க்கையில் போராடிய பின்னர், இந்தியாவில் முதன்முதலாக 1931 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட “ஆலம் ஆரா” என்ற முதல் பேசும் படத்தில், ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படம் நன்கு கட்டணம் வசூலிக்கவில்லை என்ற காரணத்தால், அவர் அவரை தேடி வந்த பட வாய்ப்புகளில் மட்டும் சிறிய கதாபாத்திரங்களிலேயே நடிக்கத் தொடங்கினார். “ராஜ்ராணி”, “சீதா”, “மன்ஸில்”, “பிரசிடென்ட்”, “வித்யாபதி”, “பாகல்”, மற்றும் “சிக்கந்தர்”, போன்ற திரைப்படங்கள் அவரது நடிப்புத் திறமைக்காக மிகவும் பாராட்டப்பட்டவை. அவர் சோரப் மோடியின் படமான “சிக்கந்தர்” படத்தில் ‘அலெக்சாண்டர் தி கிரேட்’ கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக இன்றைக்கும் நினைவு கூறப்படுகிறார்.

நாடக வாழ்க்கை

திரைப்படங்களில் நடித்து வந்தாலும், தனது முதல் ஆர்வமும், காதலும் கொண்ட  மேடை நாடகங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். கடைசியில், அவர் ஒரு சிறந்த மேடை கலைஞர் என்றும் திரையுலக நடிகர் என்றும் நிரூபித்தார். வெள்ளித் திரையில், அவ்வப்பொழுது போதுமான வெற்றியை ருசித்த பிறகு, 1944ல் தனது சொந்த நாடக குழுவான ‘பிருத்வி தியேட்டரை’ உருவாக்கினார். 16 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த இந்த தியேட்டரில், ப்ரித்விராஜ் அவர்கள் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த 2,662 காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. எனினும், 1950களின் பிற்பகுதியில், நாடக சகாப்தம் படிப்படியாக சீரழிய தொடங்கியதால், 80 நாடக நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் திரைப்பட துறையில் உள்வாங்கப்பட்டனர். இந்த பட்டியலில், திரையில் தங்களுக்கென்று ஒரு சிறந்த நிலையை உருவாக்கியவர்கள் ப்ரித்விராஜ் அவர்களின் சொந்த மகன்கள் ஆவார்.

பிந்தைய வாழ்க்கை

முதலில் நாடகத்துறையிலும், வணிகத்திலும் கவனம் செலுத்த தொடங்கினாலும், ஹிந்தி திரைப்பட துறையில் சில சிறந்த பாத்திரங்களை கையாளவும் செய்தார். “முகல் ஏ ஆஜாம்”, “அரிச்சந்திரன் தாராமதி”, “சிக்கந்தர் இ ஆஸம்”, மற்றும் “கல் ஆஜ் அவுர் கல்” போன்ற திரைப்படங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் மிகவும் மறக்க முடியாதவை மற்றும் பெரிதும் பேசப்பட்டவை.   அவர் புகழ்பெற்ற பஞ்சாபி திரைப்படங்களான “நானக் நாம் ஜஹஸ் ஹை”, “நானக் துக்கியா சப் சன்சார்”, மற்றும் “மீலே மித்ரன் தே” போன்றவற்றிலும் நடித்துள்ளார். 1954ல், “பைசா” என்ற திரைப்படத்தை இயக்கும் போது, அவர் தனது குரலை இழந்ததால், படங்களில் நடிப்பதைக் கைவிட்டார். இத்துடன், பிருத்வி தியேட்டரும் கூட, நிரந்தரமாக மூடும் நிலைக்கு வந்தது. 1954ல், மிகவும் பிரபலமான ‘சங்கீத் நாடக அகாடமி விருதும்’, 1969ல் ‘பத்ம பூஷன் விருதும்’ அவருக்கு வழங்கப்பட்டது. பின்னர், ஷஷி கபூர் மற்றும் அவரது மனைவி ஜெனிபர் கெண்டல் நடத்தும் ‘ஷேக்ஸ்பியர்’ நிறுவனத்துடன், பிருத்வி தியேட்டர் இணைக்கப்பட்டு, “ஷேக்ஸ்பியரானா” என்ற பெயரில் புதுப்பித்து மீண்டும் நிறுவப்பட்டது. இந்த நிலையில், அந்த நிறுவனத்திற்கு நவம்பர் 5, 1978 ஆம் ஆண்டு மும்பையில் ஒரு நிரந்தர அங்கீகாரம் கிடைத்தது.

இல்லற வாழ்க்கை

அப்போது நிலவிய குழந்தை திருமணம் அமைப்பின் காரணமாக, பிரித்விராஜ் கபூர், அவர்களின் 18வது வயது ஆரம்பத்தில், 15 வயது ராம்சர்னி மெஹ்ரா என்ற பெண்ணை 1924 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். அவர் மும்பைக்குக் குடியேறும் போது, இந்த தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். இருப்பினும், இரண்டு குழந்தைகள் காலமானார். எனவே, அவ்விருவரும் மீண்டும் மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தார்கள். அவரது நான்கு குழந்தைகளான ராஜ் கபூர், ஷம்மி கபூர், சஷி கபூர் மற்றும் ஊர்மிளா சியால் தங்களை முழுவதுமாக ஹிந்தி திரைப்பட துறையில் அர்பணித்து, ‘முதல் ஹிந்தி பட குடும்பம்’ என்ற தலைப்பிற்கு பிரித்விராஜ் கபூர் அவர்களை ‘குலபதி’ ஆக்கினார்கள். ஓய்வுக்குப் பின்னர், அவர் பம்பாயில் இருக்கும் ஜுஹு கடற்கரையிலுள்ள ஒரு குடிலில் தனது மனைவியுடன் தங்கியிருந்தார்.

இறப்பு

ப்ரித்விராஜ் அவர்களும், அவரது மனைவியான ராம்சர்னியும் வயதான காலத்தில் புற்றுநோயால் அவதிப்பட்டனர். அதன் காரணமாக மே 29, 1972 அன்று இறந்த இரு வாரங்களுக்கு பின்னர், அவரது மனைவி ஜூன் 14 ம் தேதியன்று காலமானார்.

மறைவுக்குப் பின்

அவருடைய மரணத்திற்குப் பின்னர், இந்திய சினிமாவில் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படும் விருதான, 1971 ஆம் ஆண்டுக்கான ‘தாதாசாகேப் பால்கே விருது’ வழங்கப்பட்டது. இந்த நிலையில், இந்திய திரைப்பட துறையில் இந்த விருதைப் பெற்ற மூன்றாவது நபர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றார். பிருத்வி தியேட்டரின் ‘தங்க விழாவைக்’ குறிக்கும் விதமாக, 1996ல் இந்திய அஞ்சல், பிருத்வி தியேட்டர் முத்திரையோடு அதன் வருடமான 1945-1995 இடம்பெற்ற ஒரு சிறப்பு இரண்டு ரூபாய் தபால்தலையை வெளியிட்டது. அவரது முகமே, அப்பேற்பட்ட கலைஞரை அங்கீகரிக்க போதுமானது என்று நம்பி, தபால்தலையில் அவரது பெயர் இல்லாமல், ப்ரித்விராஜ் அவர்களின் புகைப்படம் மட்டும் இருக்குமாறு அச்சிடப்பட்டது.

மரபுரிமை

ஹிந்தி திரைப்பட துறைக்காக அர்பணித்த, ‘முதல் ஹிந்தி பட குடும்பம்’ என்ற பெருமை பிரித்விராஜ் கபூர் அவ்ரகளையே சேரும். பெஷாவர் நகரில் ஓய்வு பெற்ற காவல்துறை துணை ஆய்வாளரான அவரது தந்தை, திவான் பஷேஸ்வர்நாத் சிங் கபூரும், அவரது நடிப்புத் திறமையை வெளிக்காட்டும் ஆர்வமுள்ளவர். அதை வெளிக்கொண்டு வர, அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால், அவர் தனது பேரன், ராஜ் கபூர் படமான “ஆவாராவில்” ஒரு கௌரவ கதாபாத்திரத்தில் தோன்றினார். இத்துடன், கபூர் குடும்பம், இந்திய சினிமா உலகில், ஐந்து தலைமுறையை வழங்கியது. ப்ரித்விராஜ் கபூர் அவர்களின், மூன்று மகன்களான ராஜ் கபூர், சசி கபூர், மற்றும் ஷம்மி கபூர், புகழ்பெற்ற நடிகர்களாக மாறினர். அதே நேரத்தில், அவரது இரண்டு மருமகள்களும் கூட, திரைப்பட துறையில் பணிபுரிந்தவர்கள். அவரது பேரக்குழந்தைகளான ரந்தீர் கபூர், ரிஷி கபூர், ராஜீவ் கபூர், கரண் கபூர், குணால் கபூர், மற்றும் சஞ்சனா கபூர் ஆகியவர்கள் நடிகர்களாகவோ அல்லது திரைப்பட தயாரிப்பாளர்களாகவோ அல்லது இரண்டுமாக செயல்பட்டு, வெற்றி அடைந்தவர்கள். அவரது கொள்ளு பேரக்குழந்தைகளான கரிஷ்மா கபூர், கரீனா கபூர், மற்றும் ரன்பீர் கபூர் அதே துறையில் ஒரு முன்னணி புள்ளிகளாகத் திகழ்கின்றனர்.

குறிப்பிடத்தக்க படங்கள்

  • சினிமா கேர்ள் (1929)
  • ஆலம் அரா (1931)
  • இராமாயண் (1933)
  • ராஜ்ராணி மீரா (1933)
  • சீதா (1934)
  • மன்ஜில் (1936)
  • வித்யாபதி (1937)
  • அதூரி கஹானி (1939)
  • பாகல் (1940)
  • சிக்கந்தர் (1941)
  • இஷாரா (1943)
  • கவுரி (1943)
  • ஆங்க் கி ஷரம் (1943)
  • தஹெஜ் (1950)
  • ஆவாரா (1951)
  • ஆனந்த் மடம் (1952)
  • சத்ரபதி சிவாஜி (1952)
  • பைசா (1954)
  • பர்தேசி (1957)
  • முகல் இ ஆஸம் (1960)
  • ஜிந்தகி (1964)
  • ஜஹான் ஆரா (1964)
  • ராஜ்குமார் (1964)
  • சிக்கந்தர் இ ஆஸம் (1965)
  • ஆஸ்மான் மஹால் (1965)
  • தகு மங்கல் சிங் (1966)
  • தீன் பஹுராணியான்  (1968)
  • நானக் நாம் ஜஹஸ் ஹை (1969)
  • ராஞ்சா ஹீர் (1970)
  • கல் ஆஜ் அவுர் கல் (1971)
  • சக்ஷத்கரா – (கன்னடம்) (1971)

காலவரிசை

1906: பிரித்விராஜ் Lyallpur, பஞ்சாப் பிறந்தார்

1924: ராம்சர்னி மெஹ்ராவைத் மணமுடித்தார்.

1928: நடிப்புத் தொழிலை தொடங்கும் நோக்கமாக மும்பைக்குப் பயணித்தார்

1929: அவரது முதால் படமான ‘சினிமா கேர்ள்’ வெளியானது

1931: இந்தியாவின் முதல் பேசும் படமான ‘ஆலம் ஆரா’ வெளியானது

1944: பிருத்வி திரையரங்கு துவங்கப்பட்டது

1972: மே 29ல் புற்றுநோயால் மரணமடைந்தார்.

1972: இறப்பிற்குப் பின்னர், ‘தாதாசாகே பால்கே விருது’ வழங்கப்பட்டது

1978: பிருத்வி தியேட்டர் ஷேக்ஸ்பியர் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு  “ஷேக்ஸ்பியரானா” என்று மீண்டும் நிறுவப்பட்டது

1996: ப்ருத்வி தியேட்டரின் தங்க விழாவைக் குறிக்கும் விதமாக ப்ரித்விராஜ் கபூரின் புகைப்படமும், பிருத்வி தியேட்டரும் இரண்டு ரூபாய் தபால்தலையில் வெளியானது