இந்திய பொருளாதாரத்தின் சிறந்த நிபுணராக போற்றப்பட்ட ஆர். கே. சண்முகம் செட்டியார், ஒரு சிறந்த பேச்சாளரும், வழக்கறிஞரும் ஆவார்.
அதுமட்டுமல்லாமல், சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்திய சுதந்திரத்திற்காக போராடியவரும் ஆவார். தமிழ் மேல் அளவற்ற மோகம் கொண்டு தமிழ் இலக்கியங்களைப் படித்துத் தேர்ந்து விளங்கிய ஆர். கே. சண்முகம் செட்டியார் தமிழ் இசை இயக்கத்தைத் தோற்றுவித்தவர். இதுமட்டுமல்லாமல் இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக இருந்த பெருமையும் அவருக்குண்டு.
பிறப்பு: அக்டோபர் 17, 1892
இடம்: தமிழ் நாடு மாநிலம், இந்தியா
பணி: பொருளாதார நிபுணர்,
இறப்பு: மே 5, 1953
நாட்டுரிமை: இந்தியன்
ஆரம்ப வாழ்க்கை
சண்முகம் செட்டியார் அவர்கள், 1892 ஆம் ஆண்டு, ஆர். கந்தசாமி செட்டியாருக்கும், ஸ்ரீரங்கம்மாளுக்கும் மூத்த மகனாக ஒரு வாணிய செட்டிக் குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரனும், இரண்டு சகோதிரிகளும் உள்ளனர். கோயமுத்தூரில் இவருக்கு சொந்தமாக பல தொழிற்சாலைகள் இருந்தன. கோவை யூனியன் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்த இவர் பிறகு, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டப் படிப்பையும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்தார்.
ஆர். கே. சண்முகம் செட்டியார் பொது வாழ்க்கை
இந்திய சுயாட்சிக்காக சண்முகம் செட்டியார் அவர்கள், தமது கருத்துகளை பல பொதுக் கூட்டங்களில் வெளியிட்டுள்ளார், அவர் போராட்டங்களின்றி சட்டவழியே தன்னாட்சி மற்றும் விடுதலை பெறுவதை விரும்பினார். நீதி கட்சியின் உறுப்பினராக இருந்த இவர், பின்னர் தலைவராகவும் பணியாற்றினார். கோவை நகரமன்ற உறுப்பினர் மற்றும் நகரமன்றத் துணைத் தலைவராகவும், சென்னை ராஜதானியின் சட்டமன்ற உறுப்பினராவும், இந்திய தேசிய சட்ட சபையின் உறுப்பினராகவும் பணியாற்றினார். 1923 முதல் 1929 வரை வரை, மத்திய சட்டமன்ற கீழவையில் உறுப்பினராக இருந்தார். 1929ல் பன்னாட்டு தொழிலார்கள் நிறுவன மாநாட்டில் இந்திய பிரதிநிதியாகவும் கலந்து கொண்டார். மத்திய சட்டமன்ற கீழவையில் உறுப்பினராக பணியாற்றிய பிறகு, இவர் அந்த அவையின் துணைத்தலைவராக 1931- ல் பதவியேற்றார். துணைத்தலைவர் பதவியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய இவர், 1933-ல் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதுமட்டுமல்லாமல், இந்திய அரசியலமைப்பு சட்டமன்றத்திலும் உறுப்பினராகப் பணியாற்றினார். 1931 முதல் 1945 வரை கொச்சி அரசின் திவானாகப் பணிபுரிந்த அவரது ஆட்சிக்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் நிர்வாக முன்னேற்றம் காணப்பட்டது. இந்திய தேசிய சட்ட சபையின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர் என்ற பெருமையையும் பெற்றார். 1944-ல் பிரிட்டன் வுட்ஸ் உலக நாணய மாநாட்டிலும் கலந்து கொண்டார்.
சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர்
1947-க்கு பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக சண்முகம் செட்டியார் அவர்கள் நியமிக்கப்பட்டார். இவர் நிதியமைச்சராக பதவியேற்ற அந்த காலத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்சிக்காக பல திட்டங்களை கொண்டுவந்து, சுதந்திர இந்தியாவின் பொருளாதார நிலையை உயர்த்த பெரும்பங்காற்றினார். முதல் இந்திய பட்ஜெட்டை 1947 ஆம் ஆண்டு தாக்கல் செய்தார். 1952 ஆம் ஆண்டு, சென்னை சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிற பணிகள்
- 1951-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார்.
- இந்திய வணிக மற்றும் தொழில் சங்கத்தின் கோவை கிளையின் நிறுவனராகவும், தலைவராகவும் பணியாற்றினார்.
- தேசிய செய்தித்தாள் மற்றும் காகித ஆலையின் செயல் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
- 1943-ல் இந்திய தொழில் ஆய்வு நிலைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
- 1950-ல் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக நிறுவனத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தமிழ் இலக்கிய பங்களிப்பு
தமிழிசை இயக்கத்தை உருவாக்கி தமிழின் வளர்ச்சிக்காக பாடுபட்ட சண்முகம் செட்டியார் அவர்கள், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு எளிய தமிழில் உரை எழுதினார். தேவாரப் பண்ணிசை ராகங்களை முறைப்படுத்தினார். குற்றாலக் குறவஞ்சிக்கு, அழகிய தமிழில் உரை எழுதினார். கம்பராமாயணப் பாடல்களை எளிய முறையில் படிக்கும் வகையில் கட்டுரைகளாக வெளியிட்டார். “வசந்தம்” என்ற இலக்கிய மாத இதழைத் தொடங்கி, அதன் பதிப்பாசிரியராக இறுதிவரை பணியாற்றினார்.
தமிழ் மொழியில் புகழ்பெற்று, தமிழ் இலக்கியங்களை கற்றுத் தேர்ந்த ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்கள், ஆங்கில மொழியிலும் புலமைப்பெற்று விளங்கினார்.
இறப்பு
இந்திய பொருளாதாரத்தின் சிறந்த நிபுணராகவும், சிறந்த பேச்சாளராகவும், தமிழ் இலக்கிய எழுத்தாளராகவும் போற்றப்பட்ட ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்கள், மே மாதம் 5 ஆம் நாள் 1953 ஆம் ஆண்டு, தனது 61-வது வயதில் காலமானார். தன்னுடைய பொதுவாழ்வில் வியக்கத்தக்க சாதனைகள் புரிந்த இவர் உலகளாவிய பெருமைப் பெற்ற முதல் தமிழர் என்று சொல்லலாம். ‘தென்னாட்டுத் தாகூர்’ என்றும், ‘திராவிட மணி’ என்றும் அறிஞர் அண்ணா அவர்களால் மகுடம் சூட்டப்பட்டார். ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள், தமிழர்களால் என்றென்றைக்கும் பெருமைப்படத்தக்கவராக விளங்குகிறார்.
காலவரிசை
1892 – ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள் தமிழ்நாட்டில் பிறந்தார்.
1917 – கோயம்புத்தூர் நகராட்சி துணைத் தலைவராகவும், கவுன்சிலராகவும் பொறுப்பேற்றார்.
1920 – சென்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1923 – மத்திய சட்டமன்றத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
1929 – பன்னாட்டு தொழிலாளர் நிறுவன மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாக கலந்து கொண்டார்.
1931 – மத்திய சட்டமன்ற தலைவராகவும், கொச்சி மாகாண திவானாகவும் பொறுப்பேற்றார்.
1938 – ஜெனிவாவில் உலகநாடுகள் சங்க கூட்டத்திற்கு, இந்தியாவின் சார்பாக சென்றிருந்தார்.
1944 – பிரிட்டன் வுட்ஸ் உலக நாணய மாநாட்டிலும் கலந்து கொண்டார்.
1945 – இளவரசர்கள் சங்கத்திற்கு அரசியலமைப்பு ஆலோசகராகப் பணியாற்றினார்.
1947 – முதல் இந்திய பட்ஜெட் தாக்கல் செய்தார்.
1951 – அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார்.
1952 – சென்னை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், வர்த்தகம் மற்றும் தொழில் துறை இந்திய சேம்பரின தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1953 – மே மாதம் 5 ஆம் நாள் தனது 61-வது வயதில் காலமானார்