Life History ஆன்மீக தலைவர்கள் சமூக சீர்திருத்தவாதிகள் சமூக சேவகர்கள்

ராஜா ராம் மோகன் ராய்

ராஜா ராம் மோகன் ராய்’ என்றும், ‘ராம் மோகன் ராய்’ என்றும் போற்றப்படும், ராஜா ராம் மோகன் ராய் அவர்கள் ‘நவீன இந்தியாவை உருவாக்கியவர்’ என்று அழைக்கப்பட்டார். அவர், முதல் இந்திய சமூக சமய சீர்திருத்த இயக்கமான ‘பிரம்ம சமாஜத்தை’ நிறுவியவர் ஆவார். நாட்டில் “சதி” என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகித்தார். ராஜா ராம் மோகன் ராய் அவர்கள், ஒரு பெரும் கல்வியாளராகவும், சுயாதீன சிந்தனையாளராகவும் இருந்தார். அவர் ஆங்கிலம், அறிவியல், மேற்கத்திய மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற அனைத்துத் துறைகளிலும் தேர்ந்து விளங்கினார். இதனாலேயே, ‘ராஜா’ என்ற பட்டத்தை, அவருக்கு முகலாய பேரரசர் வழங்கினார். நாட்டில் பெண்ணுரிமைக்காகப் போராடி, சதியை ஒழித்த அந்த மாபெரும் சீர்திருத்தவாதியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெரிந்துக் கொள்ள தொடர்ந்துப் படிக்கவும்.

பிறப்பு: மே 22, 1772

பிறந்த இடம்: ராதாநகர் கிராமம், ஹூக்லி, வங்காளம்

இறப்பு: செப்டம்பர் 27, 1833

தொழில்: கல்விமான், சீர்திருத்தவாதி

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

ராஜா ராம் மோகன் ராய் அவர்கள், வங்காளத்திலுள்ள ஹூக்ளி மாவட்டத்தில் இருக்கும் ராதாநகர் என்ற கிராமத்தில் மே 22, 1772 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தை, ராம்காந்தோ ராய், ஒரு வைஷ்ணவர் மற்றும் அவரது தாய் தாரிணி, சைவம் மதம் பின்னணியில் இருந்து வந்தவர்.

ஆரம்ப வாழ்க்கை

உயர் படிப்புகளுக்காக ‘பாட்னா’ அனுப்பப்பட்ட அவர், பதினைந்து வயதிலேயே, பங்களா, பாரசீகம், அரபு மற்றும் சமஸ்கிருத மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்.

அவரது தந்தை ஒரு ஆச்சாரமான இந்துமத பிராமணராக இருந்தாலும், இவர் சிலை வழிபாடு மற்றும் ஆச்சாரமான இந்துமத சடங்குகளுக்கு எதிராகவே செயல்பட்டார். மேலும் அனைத்து வகையான சமூக மதவெறி, பழைமைபேண்வாதம் மற்றும் மூடநம்பிக்கைகளை எதிர்த்து உறுதியாக நின்றார். இதுவே அவருக்கும், அவரது தந்தைக்குமிடையே கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுத்தது. இந்தத் தொடர் வேறுபாடுகளின் காரணமாக, அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் இமயமலையில் வழியறியாமல் அலைந்துத் திறிந்து, திபெத் சென்றார். விசாலமான பயணம் மேற்கொண்ட பின்னர், அவர் வீடு திரும்பினார்.

தொழில்

வீடு திரும்பிய அவருக்கு, அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். ஆனால், இது அவரை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. திருமணத்திற்குப் பிறகு வாரணாசி சென்ற அவர், வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் இந்துமத தத்துவங்களை மிக ஆழமாகப் பயின்றார். 1803ல், அவரது தந்தை இறந்தவிடவே, அவர் மூர்ஷிதாபாத்திற்குத் திரும்பினார். பின்னர், கொல்கத்தாவில் உள்ள ஒரு வட்டிக்கடையில் பணியாற்றினார். 1809 முதல் 1814 வரை, அவர் கிழக்கு இந்திய நிறுவனத்தின் வருவாய்த் துறையில் பணியாற்றினார்.

சீர்திருத்தப் பணிகள்

சமூகத்தில் நடக்கும் முறைகேடுகளைக் கண்டு வெகுண்டெழுந்த அவர், 1814ல், சமுதாயத்தில் சமூக மற்றும் சமய சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் முயற்சியாக ‘ஆத்மிய மக்களவை’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். பின்னர், பெண்கள் உரிமைக்காகவும், விதவைகள் மறுமண உரிமைக்காகவும், பெண்களுக்கான சொத்து உரிமைக்காகவும், பல பிரச்சாரங்களில் ஈடுபட்டார். அவர் அக்காலத்தில் பெண்களுக்கு கட்டாய பழக்கமாக இருந்த  உடன்கட்டை ஏறுதல் மற்றும் பலதார மணம் புரிதல் போன்ற நடைமுறைகளைத் தீவிரமாக எதிர்த்தார்.

பெண்களுக்கானக் கட்டாயக் கல்வி முறைக்குப் பெரிதும் ஆதரவு காட்டிய அவர், பாரம்பரிய இந்திய கல்வி முறையை விட ஆங்கில மொழி கல்வி மேன்மையானது என்று நம்பினார், அதுமட்டுமல்லாமல், சமஸ்கிருதம் கற்றுத் தரும் பள்ளிகளில், அரசாங்க நிதிகளை பயன்படுத்தக் கூடாது என்று மிகக் கடுமையாக எதிர்த்தார். மேலும் 1822 ஆம் ஆண்டு ஆங்கிலக் கல்வியின் அடிப்படையில் ஒரு பள்ளியை நிறுவினார்.

பிரம்மா சமாஜ்

1828ல், ராஜா ராம் மோகன் ராய் அவர்கள், ‘பிரம்ம சமாஜம்’ என்ற அமைப்பை  நிறுவினார். பிரம்மா சமாஜ் மூலம், அவர் போலித்தனமான மத பாசாங்குகளை அம்பலப்படுத்தவும், இந்து மத சமூகத்தின் மீது கிறித்துவம் அதிகரித்து வரும் செல்வாக்கை சரிபார்க்கவும் எண்ணினார். மேலும் இந்த அமைப்பின் மூலம், பலதார மணம், சாதி அமைப்பு, குழந்தை திருமணம், சிசுக்கொலை, தீண்டாமை, பெண்கள் தனிமைப்பட்டிருப்பது, பர்தா முறை போன்ற சமூக முறைகேடுகளுக்கு எதிராக குரல் எழுப்பினார்.

‘கடவுளைத் தந்தையாகவும், மனித குலத்தில் சகோதரத்துவத்தை மேலோங்கச் செய்வதே’ பிரம்ம சமாஜின் தலையாய கொள்கையாகும். மேலும் இவர், மனிதர்களிடையே அன்பு செலுத்த வேண்டும்; மற்றும் சிலை வழிபாட்டை நிறுத்தி, கோயில்களில் பிரசாதம் வழங்குவதையும், விலங்குகளை பலி கொடுப்பது போன்ற பிற சடங்குகளை நிறுத்த வேண்டுமென்று போதித்தார். இந்த பிரம்மா சமாஜம், மனிதர்களிடையே தர்மம், நீதி, கடவுள் பக்தி, கருணை, நல்லொழுக்கம் மற்றும் அனைத்து மதத்தவரிடையே உள்ள பாச உணர்வைத் தூண்டி, அவர்களின் பந்தத்தை மேலும் வலுப்படுத்தும் ஒரு தூண்டுகோலாக இருந்தது.

சதி ஒழிப்பு

பிரம்ம சமாஜ் மூலம், சமூகத்தில் நிலவும் மோசமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய ராஜா ராம் மோகன் ராய் அவர்கள், இந்து மத இறுதி நடைமுறையான கணவரின் இறப்புக்குப் பின்னர், மனைவி அவரின் சிதையில் உயிருடன் விழ வேண்டுமென்ற ‘சதி’ என்னும் உடன்கட்ட ஏறும் பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க எண்ணினார். அவரது அனைத்து முயற்சிகளுக்கும் வெற்றிக் கிட்டும் வகையில், 1833ல், அப்போது ஆட்சியிலிருந்த லார்ட் வில்லியம் பென்டிக் ஒரு சட்டம் இயற்றி, அதன் மூலம் சதி முறையை ஒழித்தார்.

இறப்பு

நவம்பர் 1830ல், ராஜா ராம் மோகன் ராய் அவர்கள், தனது ஓய்வூதிய மற்றும் உதவித்தொகைகளைப் பெறுவதற்காக, முகலாய பேரரசரின் ஒரு தூதராக ஐக்கிய ராஜ்யத்திற்குப் பயணித்தார். பின்னர், அவர் மூளைக்காய்ச்சல் காரணமாக, பிரிஸ்டல் அருகிலுள்ள ஸ்டேபிள்டன் என்ற இடத்தில் செப்டம்பர் 27, 1833 அன்று காலமானார்.

காலவரிசை:

1772: வங்காளத்திலுள்ள ஹூக்ளி மாவட்டத்தில் இருக்கும் ராதாநகர் என்ற கிராமத்தில் மே 22, 1772 ஆம் ஆண்டு பிறந்தார்.

1803: அவரது தந்தையின் மறைவின் காரணமாக மூர்ஷிதாபாத்திற்குத் திரும்பினார்.

1809 – 1814: கிழக்கு இந்திய நிறுவனத்தின் வருவாய்த் துறையில் பணியாற்றினார்.

1814: ‘ஆத்மிய மக்களவையை’ உருவாக்கினார்.

1822: ஆங்கிலக் கல்வியின் அடிப்படையில் ஒரு பள்ளியை நிறுவினார்.

1828: ‘பிரம்ம சமாஜம்’ என்ற அமைப்பை நிறுவினார்.

1833: ‘சதி என்னும் உடன்கட்டை ஏறுதல்’ என்ற இந்துமத நடைமுறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது

1830: முகலாய பேரரசரின் ஒரு தூதராக ஐக்கிய ராஜ்யத்திற்குப் பயணித்தார்.

1833: மூளைக்காய்ச்சல் காரணமாக, பிரிஸ்டல் அருகிலுள்ள ஸ்டேபிள்டன் என்ற இடத்தில் செப்டம்பர் 27, 1833 அன்று காலமானார்