Home » ராணி லக்ஷ்மி பாய்
Life History சுதந்திர போராட்ட வீரர்கள்

ராணி லக்ஷ்மி பாய்

ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மதிப்பார்ந்த மாநிலமான ‘ஜான்சியின்’ ராணியாக இருந்தவர்.

இவர் 1857 ல் தொடங்கிய இந்தியாவின் சுதந்திரத்திற்கான முதல் போரில் மிக முக்கியமான நபர்களில் ஒருவராவார். வீரம் மற்றும் தைரியத்தின் மறுவடிவமாக இருந்த ராணி லட்சுமிபாய் அவர்களின் வாழ்க்கை வரலாறு, சாதனைகள் மற்றும் வீரச்செயல்கள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: 19 நவம்பர் 1828

பிறந்த இடம்: வாரணாசி, இந்தியா 

இறப்பு: 18 ஜூன் 1858

தொழில்: ஜான்சியின் ராணி, விடுதலைப் போராட்ட வீரர்

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், 19 நவம்பர் 1828 ஆம் ஆண்டு காசியில் (இப்போதைய வாரணாசி) ஒரு மராத்தியர் குடும்பத்தில் பிறந்தார். அவரது குழந்தை பருவத்தில், அவரை ‘மணிகர்ணிகா’ என்ற பெயரில் அழைக்கப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரை அன்போடு ‘மனு’ என்று அழைத்தனர்.

ஆரம்ப வாழ்க்கை

தனது நான்காவது வயதிலேயே அவரது தாயை இழந்ததால், குடும்பப் பொறுப்புகளனைத்தும் அவரின் தந்தை மீது விழுந்தது. பள்ளிப்பாடம் படித்து கொண்டிருந்த சமயத்தில், லக்ஷ்மிபை அவர்கள் அவர் குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல் மற்றும் கத்தி சண்டை போன்ற தற்காப்புக்  கலைகளை முறையாக பயிற்சி மேற்கொண்டு கற்றார்.

இல்லற வாழ்க்கை

1842 ஆம் ஆண்டு, ஜான்சியின் மகாராஜாவாக இருந்த ‘ராஜா கங்காதர் ராவ் நிவால்கர்’ என்பவரை மணமுடித்தார். திருமணத்திற்கு பின், அவருக்கு ‘லட்சுமி பாய்’ என்ற பெயர் வழங்கப்பட்டது. அவரது திருமண விழா, பழைய ஜான்சி நகரில் அமைந்துள்ள, விநாயகர் கோவிலில் நடைபெற்றது. 1851ல்,  அவர்கள் இருவருக்கும் ஒரு மகன் பிறந்தான். துரதிருஷ்டவசமாக,  அந்த குழந்தையால் நான்கு மாதங்களுக்கு மேல் உயிர்வாழ முடியவில்லை.

1853 ல், மகாராஜா கங்காதர் ராவின் உடல்நிலை பலவீனமானதால், அவர்கள் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்தனர். இந்தத் தத்தெடுப்பின் மீது ஆங்கிலேயர்கள் பிரச்சனை எழுப்பக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்த லட்சுமிபாய் அவர்கள், உள்ளூர் ஆங்கிலேய பிரதிநிதிகளை சாட்சியாக வைத்து இந்த தத்தெடுப்பை நடத்தினார். நவம்பர் 21 ஆம் தேதி, 1853 ஆம் ஆண்டு மகாராஜா கங்காதர் ராவ் மரணமடைந்தார். அந்த காலகட்டத்தில்,  பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ‘லார்ட் தல்ஹௌசீ’ என்பவர் ஆட்சியில் இருந்தார்.

படையெடுப்பு

ராணி லட்சுமிபாய் அவர்கள், தத்தெடுத்த குழந்தைக்கு ‘தாமோதர் ராவ்’ என்று பெயரிட்டார். இந்துமத மரபின் படி, அக்குழந்தையே லட்சுமிபாய் அவர்களின் சட்ட வாரிசாக இருந்தது. இருப்பினும், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அந்த குழந்தையை சட்ட வாரிசாக ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். மறுப்பு கோட்பாட்டின் (Doctrine of Lapse) படி,  லார்ட் தல்ஹௌசீ அவர்கள் ஜான்சி அரசைப் பறிமுதல் செய்ய முடிவுசெய்தார். ராணி லட்சுமிபாய் அவர்கள், ஒரு ஆங்கிலேய வழக்கறிஞரிடம் சென்று ஆலோசனைக் கோரினார். அதன்பிறகு, அவர் லண்டனில் அவரது வழக்கிற்கான ஒரு முறையீட்டை மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. ஆங்கிலேய அதிகாரிகள், லட்சுமிபாய் அவர்களின் அரசு நகைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், ராணி லட்சுமிபாய் அவர்களை ஜான்சி கோட்டையை விட்டு செல்லுமாறு ஒரு ஆணை நிறைவேற்றப்பட்டதால், ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், ஜான்சியிலுள்ள ‘ராணி மஹாலுக்கு’ சென்றார். அந்நேரத்திலும், லட்சுமிபாய் அவர்கள், ஜான்சி அரசைப் பாதுகாப்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.

போர்

ராணி லக்ஷ்மி பாய் அவர்களை ஜான்சியை விட்டு வெளியேறி சொல்லி பிறப்பித்த ஆணை, ஜான்சியை எழுச்சியின் இடமாக மாற்றியது. ஜான்சி ராணி அவர்கள் தனது நிலையை வலுப்படுத்த தொடங்கினார். பிறரது ஆதரவை நாடிய அவர், அவரது ஆதரவாளர்களைக் கொண்டு ஒரு தொண்டர் படையை உருவாக்கினார். அவர் உருவாக்கிய இராணுவத்தில் ஆண்கள் மட்டும் முக்கிய பங்கு வகிக்கவில்லை, அதில் பெண்களும் கூட தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது நடந்த கிளர்ச்சியில், ராணி லட்சுமிபாய், அவரது தளபதிகளுடன் இணைந்து போர் புரிந்தார்.

1857 ஆம் ஆண்டு செப்டம்பரிலிருந்து அக்டோபர் வரை இருந்து,  ராணி லக்ஷ்மி பாய் அவர்கள் அவரது அண்டை நாடுகளான ஓர்ச்சா மற்றும் டாடியாவை படையெடுத்து, அந்நாட்டுப் படைகளின் மூலமாக ஜான்சியைப் பாதுகாத்தார். இதுவே, ஜனவரி 1858ல், பிரிட்டிஷ் இராணுவம், ஜான்சியை நோக்கி படையெடுத்தற்கான காரணமாகும். ஜான்சிக்கும், பிரிட்டிஷ் ராணுவத்திற்குமான மோதல் ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தது. இறுதியாக, இரண்டே வாரங்களில் ஆங்கிலேய அரசு ஜான்சி நகரத்தைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. எனினும், அவர் ஒரு ஆண்மகன் வேடம் பூண்டிருந்ததால், அவரை யாரும் அடையாளம் காணவில்லை. தனது வளர்ப்பு மகனை மடியில் ஏந்தியபடியே தப்பித்தார்.

இறப்பு

ஆங்கிலேயர் பிடியிலிருந்து தப்பித்த ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், கல்பியில் தஞ்சம் அடைந்தார். அங்கு அவர், 1857ல் நடந்த கிளர்ச்சியில் பங்கேற்ற ஒரு மாவீரரான ‘தந்தியா டோப்’ என்பவரை சந்தித்தார். ஆங்கிலேயர்களின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. ஆங்கிலேயப் படையை எதிர்த்து, கோட்டாகி சேராய் என்ற இடத்தில் ஜான்சிராணி போரிட்டார். ஆனால், ஆங்கிலேயர்களின் நவீன போர்க்கருவிகளை எதிர்க்க முடியாமல், 18 ஜூன் 1858 ஆம் ஆண்டு ஜான்சி ராணி அவர்கள் இறந்தார். போர்க்களத்தில் அவர் மயக்கமாக இருந்த போது, ஒரு பிராமணர் அவரை அவரது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கே அவர் மரணமடைந்தார் என்றும் சிலர் கூறுகின்றனர். அவரது மரணத்திற்குப் பின், மூன்று நாட்களில், குவாலியரை ஆங்கிலேய அரசு கைப்பற்றியது.

ராணி லட்சுமிபாய் அவர்களின் வீரமும், மகத்தான முயற்சியும், அவரை ‘இந்திய தேசிய இயக்கத்தின் உருவம்’ என்று குறிப்பிட வைத்தது. தனது வளர்ப்பு மகனான தாமோதரைப் பாதுகாப்பதே ராணி லட்சுமிபாய் அவர்களின் நோக்கமாக இருந்தது. அவரது கதை எதிர்வரும் சுதந்திர போராட்ட வீரத் தலைமுறைகளுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக ஆனது என்றால் அது மிகையாகாது.

காலவரிசை

1828: ராணி லட்சுமிபாய் அவர்கள், 19 நவம்பர் 1828 ஆம் ஆண்டு காசியில் ஒரு மராத்தியர் குடும்பத்தில் பிறந்தார்.

1842:  ஜான்சியின் மகாராஜா ‘ராஜா கங்காதர் ராவ் நிவால்கர்’ என்பவரை மணமுடித்தார்.

1851:  அவரது மகன் பிறந்து, பின்பு நான்கு மாதங்களிலேயே காலமானான்.

1853: ஒரு குழந்தையைத் தத்தெடுத்தார்.

1853: நவம்பர் 21 ஆம் தேதி, 1853 ஆம் ஆண்டு மகாராஜா கங்காதர் ராவ் மரணமடைந்தார்.

1857: ஜான்சி ராணி அவர்கள், அவரது அண்டை நாடுகளைப் படையெடுத்தார்.

1858: ஜனவரி 1858ல், பிரிட்டிஷ் இராணுவம் ஜான்சியை நோக்கி படையெடுத்தது.

1858: ஆங்கிலேயர்களின் போர்க்கருவிகளை எதிர்க்க முடியாமல், 18 ஜூன் 1858 ஆம் ஆண்டு ஜான்சி ராணி அவர்கள் போர்க்களத்திலேயே இறந்தார்

About the author

Julier

Add Comment

Click here to post a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.