Home » எஸ்.வி. சேகர்
Life History நடிகர்

எஸ்.வி. சேகர்

எஸ். வி. சேகர் அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற மேடைநாடகக் கலைஞர் மற்றும் நடிகர் ஆவார். நாடகத்துறையில் மிகவும் சிறப்பு பெற்று விளங்கிய இவர், சுமார் இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை தயாரித்து, கிட்டத்தட்ட 5000 முறைக்கும் மேலாக நாடகங்களை மேடையில் அரங்கேற்றி உள்ளார். இவருடைய நாடக வசனங்கள் பெரும்பாலும் நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்டவைகள் ஆகும். ‘அருக்கானி’, ‘பெரியதம்பி’, ‘வால் பையன்’, ‘சிரிப்பு உங்கள் சாய்ஸ்’ போன்ற நாடகங்கள் எஸ். வி. சேகரின் சிறந்த நாடகப் படைப்புகளாகும். அதுமட்டுமல்லாமல், 1979 ஆம் ஆண்டு ‘நினைத்தாலே இனிக்கும்’ என்ற திரைப்படத்தில், ஒரு சிறு கதாபத்திரத்தில் முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன இவர், சுமார் 90-க்கும் மேற்பட்டத் திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘ஸ்பரிசம்’, ‘சுபமுகூர்த்தம்’, ‘பூவே பூச்சுடவா’, ‘சிதம்பர ரகசியம்’, ‘சகாதேவன் மகாதேவன்’, ‘பிறந்தேன் வளர்ந்தேன்’, ‘திருமதி ஒரு வெகுமதி’, ‘வேடிக்கை என் வாடிக்கை’, ‘ஜீன்ஸ்’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘தங்கமணி ரங்கமணி’, ‘குடும்பம் ஒரு கதம்பம்’, ‘மணந்தால் மகாதேவன்’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘சிங்கமணி ரங்கமணி’ போன்றவை இவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் ஆகும். மேலும், 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். ஒலிப்பதிவு, நிகழ்ச்சி தயாரிப்பு, நிழல்படம் எடுப்பது, தொகுத்தல், இயக்குதல், அரசியல், நடிகர் எனப் பன்முகம் கொண்டவராக விளங்கிய எஸ். வி. சேகர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: டிசம்பர் 26, 1950

இடம்: தஞ்சாவூர், தமிழ்நாடு மாநிலம், இந்தியா

பணி: நடிகர், இயக்குனர் மற்றும் அரசியல்வாதி  

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு 

எஸ். வி. சேகர் என அறியப்படும் சட்டநாதபுரம் வெங்கட்டராமன் சேகர் அவர்கள், 1950  ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26  ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தஞ்சாவூர் என்ற இடத்தில் எஸ். வெங்கடராமன் என்பவருக்கு மகனாக, ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தன்னுடைய ஆரம்பக் கல்வியை தஞ்சாவூரில் உள்ள தொடக்கப்பள்ளியில், மூன்றாம் வகுப்பு வரை படித்த அவர், பிறகு திருவல்லிக்கேணியிலுள்ள இந்து மேல்நிலைப்பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். பள்ளியில் படிக்கும் பொழுதே, நாடகக்கலையில் ஈடுப்பாடு கொண்டவராக விளங்கிய அவர், தன் தந்தையுடன் இணைந்து அவ்வப்போது ஒரு சில நாடகப் பணிகளையும் செய்துவந்தார். நாடகப் கலையோடு படிப்பையும் தொடர்ந்த அவர், விவேகானந்தா கல்லூரியில் பி.யூ.சி முடித்தார். அதன் பிறகு, இயந்திரவியல் துறையில் பட்டயப்படிப்பையும், காற்றுப் பதனாக்க கருவி மற்றும் குளிர்சாதனப் பெட்டி சரிசெய்தல் போன்றவற்றில் பட்டயப்படிப்பையும் முடித்தார்.

ஆரம்ப காலத்தில் மேற்கொண்ட பணிகள்

ஆரம்பத்தில் ஒரு ஒலிப்பதிவாளராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய அவர், அதன் பிறகு, நாடகக் கலையில் ஏற்பட்ட ஈடுபாட்டால், தன்னுடைய தந்தை நடத்திவந்த ‘கற்பகம் கலாமந்திர்’ என்ற நாடக நிறுவனத்தில் மேடை உதவியாளராகப் பணிபுரிய தொடங்கினார். பின்னர், புகைப்டக் கலையிலும் கற்றுத் தேர்ந்தவராக விளங்கிய அவர், ஒலிப்பதிவிலும் புதுமைகள் செய்தார். அவர், இலங்கை வானொலிக்காக சுமார் 275 – க்கும் மேற்பட்ட ஒலித்சித்திரங்களைத் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிப்பதிவு, நிகழ்ச்சித் தயாரிப்பு, நிழல்படம் எடுப்பது, தொகுத்தல், இயக்குதல், எனப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுவந்த அவர், ‘நாரதர்’ என்ற தமிழ் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

நாடகத்துறையில் அவரின் பயணம்       

1974 ஆம் ஆண்டு ‘நாடகப்ரிய’ என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவை தொடங்கிய அவர், சுமார் இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்களைத் தயாரித்து, கிட்டத்தட்ட 5000 முறைக்கும் மேலாக மேடையில் அரங்கேற்றியுள்ளார். அது மட்டுமல்லாமல், அமெரிக்கா, கனடா, துபாய், அபுதாபி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பாங்காக் என வெளிநாடுகளிலும் தன்னுடைய நாடகத்தினை மேடையேற்றி உள்ளார். ‘அருக்கானி’, ‘பெரியதம்பி’, ‘வால் பையன்’, போன்ற நாடகங்கள் எஸ். வி. சேகரின் சிறந்த நாடகப் படைப்புகளாகும். நாடகக்கலையில் சிறந்து விளங்கிய எஸ். வி. சேகர் அவர்கள், ‘நாடக சூப்பர்ஸ்டார்’, ‘காமெடி கிங்’, ‘சிரிப்பலை சிற்பி’, ‘நாடக வசூல் சக்ரவர்த்தி’, ‘நகைச்சுவை தென்றல்’, ‘நகைச்சுவை இளவரசர்’, ‘நகைச்சுவை நாயகன்’, ‘சிரிப்பு செல்வன்’, ‘நகைச்சுவை வேதநாயகன்’, ‘நாடகரத்னா’ எனப் பல சிறப்பு பெயர்கள் நாடக சபாக்களாலும், நிறுவனங்களாலும் இவருக்கு வழங்கப்பட்டது. மேலும், மைலாப்பூர் அகாதமி இவரை மூன்று வருடம் ‘சிறந்த சிரிப்பு நடிகராக’ தேர்தெடுத்தது. 1990 ஆம் ஆண்டு ‘விஸ்டம்’ என்ற பத்திரிக்கை, ‘சிறந்த சிரிப்பு நடிகர்’ என்ற பட்டத்தை அளித்தது. இதைத் தவிர்த்து, ‘கலைமாமணி’, ‘கலைவாணர்’ போன்ற சிறந்த விருதுகளையும் பெற்றுள்ளார்.

சினிமாவில் அவருடைய பயணம்

நடிப்பையும், படிப்பையும் ஒருங்கே செய்துகொண்டிருந்த எஸ். வி. சேகர் அவர்ளுக்கு, கே. பாலச்சந்தர் மூலமாக ‘நிழல்கள் நிஜமாகிறது’ என்ற படத்திலும், எஸ். பி. முத்துராமன் மூலமாக ‘ஒரு கோயில் இரு தீபங்கள்’ என்ற படத்திலும் நடிக்க வாய்ப்புகள் வந்தது. ஆனால், எஸ். வி. சேகர் அவர்கள், ‘நான் இப்பொழுதுதான் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறேன், சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை’ எனக் கூறி மறுத்த அவர், 1979 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘வறுமையின் நிறம் சிவப்பு’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடிகராகத் தன்னுடைய பெயரைப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து, பல படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், சுமார் 90 திரைப்படங்களுக்கு மேல் நடித்து, ஒரு பன்முக நடிகராகவும் வலம்வந்தார்.

அவர் இயக்கிய புகழ்பெற்ற நாடகங்கள்

‘வால்பையன்’, ‘பெரியப்பா’, ‘காட்டுல மாலை’, ‘காதுல பூ, அதிர்ஷ்டக்காரன்’, ‘அல்வா’, ‘ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’, ‘சின்னமாப்ளே பெரியமாப்ளே’, ‘அன்னம்மா பொன்னம்மா’, ‘கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’, ‘ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது’, ‘யாமிருக்க பயமேன்’, ‘பெரிய தம்பி’, ‘இது ஆம்பளைங்க சமாச்சாரம்’, ‘மனைவிகள் ஜாக்கிரத்தை’, ‘சிரிப்பு உங்கள் சாய்ஸ்’, ‘குழந்தை சாமி’, ‘வண்ணக் கோலங்கள்’, ‘எப்பவும் நீ ராஜா’, ‘சாதல் இல்லையேல் காதல்’, ‘மகாபாரதத்தில் மங்காத்தா’, ‘அமெரிக்காவில் அருக்காணி’, ‘எல்லோரும் வாங்க’, ‘எல்லாமே தமாஸ் தான்’, ‘நம் குடும்பம்’, ‘காட்டுல மழை’, ‘காதுல பூ’.

அவர் நடித்த சில திரைப்படங்கள்

‘நினைத்தாலே இனிக்கும்’ (1979), ‘வறுமையின் நிறம் சிவப்பு’ (1980), ‘குடும்பம் ஒரு கதம்பம்’ (1981), ‘மிஸ்டர் பாரத்’ (1986), ‘மணல்கயிறு’ (1982), ‘ஸ்பரிசம்’ (1982), ‘சுபமுகூர்த்தம்’ (1983), ‘பிரம்மச்சாரிகள்’ (1983), ‘பூவே பூச்சுடவா’(1985), ‘நாம்’ (1985), ‘சிதம்பர ரகசியம்’ (1986), ‘சகாதேவன் மகாதேவன்’ (1988), ‘டௌரி கல்யாணம்’ (1983), ‘சிம்லா ஸ்பெஷல்’ (1982), ‘சர்வம் சக்திமயம்’ (1986),  ‘பிறந்தேன் வளர்ந்தேன்’ (1986), ‘அடுத்த வீடு’ (1986), ‘பயணங்கள் முடிவதில்லை’ (1982), ‘திருமதி ஒரு வெகுமதி’ (1987), ‘எங்கவீட்டு ராமாயாணம்’ (1987), ‘கதாநாயகன்’ (1988), ‘வீடு மனைவி மக்கள்’ (1988), ‘தங்கமான புருஷன்’ (1989), ‘தங்கமணி ரங்கமணி’ (1989), ‘‘மணந்தால் மகாதேவன்’ (1989), வேடிக்கை என் வாடிக்கை’ (1990), ‘பொண்டாட்டியே தெய்வம்’ (1994), ‘ஜீன்ஸ்’(1998), ‘கந்தா கடம்பா கதிரவேலா’ (2000), ‘‘கிருஷ்ணா கிருஷ்ணா’ (2001), சிங்கமணி ரங்கமணி’ (2001) ‘வல்லவன்’ (2006), ‘ஜித்தன்’ (2005), ‘வேகம்’ (2007)

தனிப்பட்ட வாழ்க்கை

எஸ். வி. சேகர் அவர்கள், உமா என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டார். இவர் தமிழ் திரைப்படத்துறையில் புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் ஜி. ராமநாதன் என்பவரின் மகள் ஆவார். இவர்களுக்கு, அனுராதா என்கிற மகளும், அஷ்வின் என்கிற மகனும் உள்ளனர். இவர்களில் அஷ்வின் தனது தந்தையின் தயாரிப்பில் ‘வேகம்’ என்ற திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

விருதுகளும் மரியாதைகளும்

  • 1991 – ‘கலைவாணர்’ பதக்கம்.
  • 1993 – ‘கலைமாமணி’ பட்டம்.
  • மைலாப்பூர் அகாதமி மூலம் ‘சிறந்த நகைச்சுவையாளர்’ விருது.
  • விஸ்டன் பத்திரிக்கையின் மூலம் ‘சிறந்த நகைச்சுவையாளர்’ விருது.
  • நான்கு முறை ‘சிறந்த அனைத்திந்திய நிகழ்ச்சி தயாரிப்பாளர்’ விருதை வென்றுள்ளார்.

அரசியல்

2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு, அக்கட்சியுடன் ஏற்பட்ட மோதலால் 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் நாள் அ.தி.மு.க-விலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பொதுவாக நாடகத்தில் இருந்து சினிமா துறைக்கு போகிறவர்கள், நாடகங்கள் நடிப்பதை குறைத்துக்கொள்வார்கள், ஆனால் இவர், சினிமாவில் நடித்தாலும், இடைவிடாமல் நாடகங்களிலும் நடித்து வந்தார். குறிப்பாக சொல்லப்போனால், நாடகம் அவரைக் கலையுலகில் நிலைப்படுத்தியது எனலாம், சினிமா அவரை பெருமைப்படுத்தியது எனலாம். நாடகமாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி, ரசிகர்களின் நகைச்சுவை ரசனையைப் புரிந்து, தன்னுடைய நடிப்பிலும், நாடகங்களிலும் அதை சிறப்பாக பூர்த்தி செய்துள்ளார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே.

About the author

Julier

Add Comment

Click here to post a comment