‘தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘அபிநய சரஸ்வதி’ என அழைக்கப்படும் சரோஜாதேவி அவர்கள், தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில், தன்னுடைய கலைப் பயணத்தைத் தொடர்ந்த இவர், சுமார் 200–க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ‘மகாகவி காளிதாஸ்’, ‘நாடோடி மன்னன்’, ‘கல்யாணப்பரிசு’, ‘பாலும் பழமும்’, ‘ஆலயமணி’, ‘பெரிய இடத்துப் பெண்’, ‘தர்மம் தலைக்காக்கும்’, ‘நீதிக்குப் பின் பாசம்’, ‘படகோட்டி’, ‘புதிய பறவை’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘நான் ஆணையிட்டால்’, ‘நாடோடி’, ‘பறக்கும் பாவை’, ‘அன்பே வா’ போன்ற படங்கள் இவரின் நடிப்பில் முத்திரைப் பதித்த திரைப்படங்களாகும். தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த ‘எம்.ஜி.ஆர்’, ‘சிவாஜி’ மற்றும் ‘ஜெமினிகணேசன்’ போன்ற ஜாம்பவான்களுடன், தொடர்ந்து பல படங்களில் நடித்த பெருமை இவருக்கு உண்டு. திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்திய அரசால் இவருக்கு ‘பத்ம ஸ்ரீ’, மற்றும் ‘பத்ம பூஷன்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல், கர்நாடக அரசால் ‘அபிநய சரஸ்வதி’ என்னும் பட்டமும், தமிழக அரசால் ‘எம்.ஜி.ஆர் விருது’, ஆந்திர அரசால் ‘என்.டி.ஆர் தேசிய விருது’, பெங்களூர் பல்கலைக்கழகம் சார்பில் ‘கௌரவ டாக்டர் பட்டமும்’, 2008-ல் வாழ்நாள் சாதனையாளருக்கான இந்திய அரசின் ‘தேசிய விருது’ என மேலும் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார். தன்னுடைய முதல் படத்திலேயே கதாநாயகியாகத் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கி, தென்னிந்திய ரசிகர்களால் ‘கன்னடத்து பைங்கிளி’ மற்றும் ‘அபிநய சரஸ்வதி’ எனப் போற்றப்பட்ட சரோஜாதேவி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: ஜனவரி 07, 1938
பிறப்பிடம்: பெங்களூர், கர்நாடகம் மாநிலம், இந்தியா
பணி: திரைப்பட நடிகை
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
சரோஜாதேவி அவர்கள், 1938 ஆம் ஆண்டு ஜனவரி 07 ஆம் நாள் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரில் பைரப்பா என்பவருக்கும், ருத்ரம்மாவிற்கும் நான்காவது மகளாகப் பிறந்தார். இவருடைய தந்தை பெங்களூரில் ஒரு காவல்துறை துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
சரோஜாதேவி அவர்கள், பெங்களூரில் உள்ள ‘புனித தெரசா’ பள்ளிக்கூடத்தில் தன்னுடைய பள்ளிப்படிப்பைத் தொடங்கினார். அப்பொழுது, பள்ளிகளுக்கிடையே நடந்த, ஒரு இசைப்போட்டியில் இந்திப் பாடல் ஒன்றைப் பாடினார். அந்த நிகழ்ச்சிக்கு கன்னடத் திரை உலகின் பிரபல நடிகரும், பட அதிபருமான ஹன்னப்ப பாகவதர் வந்திருந்தார். சரோஜாதேவி பாடலைக் கேட்ட அவர், ‘இந்தப் பெண் நன்றாக பாடுகிறாள், இவரை சினிமாவில் பின்னணிப் பாட வைக்கலாம்’ என நினைத்து, அவரை ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று குரல் வளத்திற்கான சோதனை செய்தார். அப்பொழுது அவருக்கு, ‘சரோஜாதேவியை நடிகையாக்கினால் என்ன?’ என்ற எண்ணம் தோன்றியது. அதனால், ஹன்னப்ப பாகவதர் தான் தயாரித்த ‘மகாகவி காளிதாஸ்’ என்ற கன்னடப் படத்தில், கதாநாயகியாக சரோஜாதேவியை சினிமாத் துறையில் முதன் முதலாக அறிமும் செய்தார். 1955 ஆம் ஆண்டு ஹன்னப்ப பாகவதர் தயாரிப்பில் வெளியிடப்பட்ட ‘மகாகவி காளிதாஸ்’ திரைப்படம் சினிமா ரசிகர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அவருடைய முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றிப் படமாக அமைந்ததால், தொடர்ந்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. குறுகிய காலத்திற்குள் தமிழ், தெலுங்கு போன்ற பிற மொழித் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ‘அபிநய சரஸ்வதி’ என அழைக்கப்பட்டார்.
தமிழ் திரைப்படத்துறையில் சரோஜாதேவியின் பயணம்
கன்னடத்தில் தாம் நடித்த முதல் படத்திலேயே கதாநாயகியாகப் புகழ்பெற்ற அவர், 1958 ஆம் ஆண்டு ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இருந்தாலும், தமிழ் சினிமாவில் சரோஜாதேவிக்கு ஒரு அங்கீகாரத்தைப் தேடித்தந்த படம், எம்.ஜி.ஆர் தயாரிப்பில் வெளிவந்த ‘நாடோடி மன்னன்’ திரைப்படமாகும். இதன் பின், 1959 ஆம் ஆண்டு ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த ‘கல்யாணப்பரிசு’ திரைப்படம், தமிழ் சினிமாவில் அவருக்கு நட்சத்திர அந்தஸ்து பெற்றுத்தந்தது. இதனைத் தொடர்ந்து, ‘வாழவைத்த தெய்வம்’, ‘பார்த்திபன் கனவு’, ‘பாலும் பழமும்’, ‘குடும்பத்தலைவன்’, ‘பாசம்’, ‘ஆலயமணி’, ‘பெரிய இடத்துப் பெண்’, ‘தர்மம் தலைக்காக்கும்’, ‘நீதிக்குப் பின் பாசம்’, ‘படகோட்டி’, ‘புதிய பறவை’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘நான் ஆணையிட்டால்’, ‘நாடோடி’, ‘பறக்கும் பாவை’, ‘அன்பே வா’, ‘குல விளக்கு’, ‘தாய்மேல் ஆணை’ போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரமாக வெற்றிக் கொடி நாட்டினார்.
இவர் நடித்த சில திரைப்படங்கள்
‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ (1958), ‘நாடோடி மன்னன்’ (1958), ‘சபாஷ் மீனா’ (1958), ‘தேடி வந்த செல்வம்’ (1958), ‘பாகப்பிரிவினை’ (1959), ‘கல்யாண பரிசு’ (1959), ‘வாழவைத்த தெய்வம்’ (1959), ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’ (1960), ‘இரும்பு திரை’ (1960), ‘பார்த்திபன் கனவு’ (1960), ‘மணப்பந்தல்’ (1960), ‘பாலும் பழமும்’ (1961), ‘பனித்திரை’ (1961), ‘திருடாதே’ (1961), ‘குடும்பத்தலைவன்’ (1962), ‘பாசம்’ (1962), ‘ஆலயமணி’ (1962), ‘இருவர் உள்ளம்’ (1963), ‘பெரிய இடத்துப் பெண்’ (1963), ‘பணத் தோட்டம்’ (1963), ‘தர்மம் தலைக்காக்கும்’ (1963), ‘நீதிக்குப் பின் பாசம்’ (1963), ‘படகோட்டி’ (1964), ‘தெய்வத்தாய்’ (1964), ‘புதிய பறவை’ (1964), ‘என் கடமை’ (1964), ‘எங்க வீட்டுப் பிள்ளை’ (1965), ‘கலங்கரை விளக்கம்’ (1965), ‘நான் ஆணையிட்டால்’ (1966), ‘நாடோடி’ (1966), ‘பறக்கும் பாவை’ (1966), ‘அன்பே வா’ (1966), ‘குல விளக்கு’ (1969), ‘தேனும் பாலும்’ (1971), ‘தாய்மேல் ஆணை’ (1988), ‘தர்ம தேவன்’ (1989), ‘ஒன்ஸ் மோர்’ (1997), ‘ஆதவன்’ (2009), ‘இளங்கதிர் செல்வன்’ (2010).
தனிப்பட்ட வாழ்க்கை
‘அபிநய சரஸ்வதி’ சரோஜாதேவி அவர்கள், 1967 ஆம் ஆண்டு ஸ்ரீஹர்ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஸ்ரீஹர்ஷா பி.ஈ பட்டம் பெற்ற ஒரு என்ஜினியர் ஆவார்.
விருதுகளும், மரியாதைகளும்
1965 – கர்நாடக அரசால் ‘அபிநய சரஸ்வதி’ என்னும் பட்டம்.
1969 – இந்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ’ விருது.
1980 – கர்நாடக அரசால் ‘அபினண்டன் காஞ்சனா மாலா’ விருது.
1989 – கர்நாடக அரசின் ‘ராஜ்யோத்சவ’ விருது.
1992 – மத்திய அரசால் ‘பத்ம பூஷன்’ விருது.
1997 – சென்னை சினிமா எக்ஸ்பிரஸ் மூலம் ‘சாதனையாளர் விருது’.
1997 – தமிழக அரசால் ‘எம்.ஜி.ஆர்’ விருது.
2001 – ஆந்திர அரசால் ‘என்.டி.ஆர் தேசிய’ விருது.
2003 – ‘தினகரன் சாதனையாளர்’ விருது.
2006 – பெங்களூர் பல்கலைக்கழகம் சார்பில் ‘கௌரவ டாக்டர் பட்டம்’.
2007 – ரோட்டரி ‘சிவாஜி’ விருது.
2007 – ‘என்.டி.ஆர்’ விருது.
2008 – வாழ்நாள் சாதனையாளருக்கான ‘இந்திய அரசின் தேசிய விருது’.
2009 – நாட்டிய ‘கலாதர்’ விருது.
2009 – கர்நாடக அரசின் ‘ராஜகுமார்’ தேசிய விருது.
2010 – தமிழ்நாடு அரசின் ‘வாழ்நாள் சாதனையாளருக்கான’ விருது.
திரைப்படத்துறையில் சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேல் முன்னணிக் கதாநாயகியாக விளங்கிய இவர், சினிமாவில் தன்னுடைய நடிப்பிற்கென தனி பாணியை உறவாக்கிக் கொண்டவர். ஆடை, அணிகலன்கள், சிகை அலங்காரம் என அனைத்திலும் புதுமையைப் புகுத்தியவர். நடை, உடை, பாவனையில் கூட பல அபிநயங்களை நடிப்பில் வெளிபடுத்தி ‘அபிநய சரஸ்வதி’ எனப் பெயர் பெற்றவர். குறிப்பாக சொல்லப்போனால், சரோஜாதேவி அவர்கள், சினிமா துறைக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்!