National

மத்திய அரசு உத்தரவு அமலுக்கு வந்தது: ஓ.பன்னீர்செல்வத்துக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக பிரிந்து சென்றார். சசிகலா ஆதரவாளர்கள் தனியாக செயல்பட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடந்து வந்தன.

அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் வசித்து வந்தபோது அவரது வீட்டில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்துக்கு சென்றபோது அங்கும் அவரது கார் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மத்திய உளவு பிரிவு போலீசார், ஓ.பி.எஸ். செல்லும் இடங்களில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பினர். அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் முன்னாள் முதல்-அமைச்சர் என்கிற முறையில் அவருக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த மைத்ரேயன் எம்.பி. டெல்லியில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்தும் முறையிட்டார்.

இதையடுத்து மத்திய அரசு ஓ.பன்னீர் செல்வத்துக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்தது. இதற்கான உத்தரவு இந்த மாத தொடக்கத்தில் பிறப்பிக்கப்பட்டது. இதன்படி ஓ.பன்னீர்செல்வத்துக்கு மத்திய போலீஸ் மற்றும் துணை ராணுவ படையினரின் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 12 துணை ராணுவ படையினர் சென்னை வந்துள்ளனர். அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 ஷிப்டுகளாக அவர்கள் பணியில் இருப்பார்கள்.