News Sports

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார்?

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார்? என்பது குறித்து கொல்கத்தாவில் வருகிற 26-ந் தேதி நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.

2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கேரி கிர்ஸ்டன் (தென் ஆப்பிரிக்கா) அந்த பதவியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து ஜிம்பாப்வே முன்னாள் வீரர் டங்கன் பிளட்சர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டில் (2014) அன்னிய மண்ணில் டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவிய போது டங்கன் பிளட்சர் கடும் விமர்சனத்துக்கு ஆளானார். அத்துடன் அவரது முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவிசாஸ்திரி அணியின் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார்.

செயற்குழு கூட்டம்

தலைமை பயிற்சியாளர் டங்கன் பிளட்சரின் பதவி காலம் உலக கோப்பை போட்டியுடன் முடிவுக்கு வந்தது. அவரது பதவி காலத்தை நீட்டிக்க கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை. இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக யாரை? நியமிக்கலாம் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை செய்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் கொல்கத்தாவில் வருகிற 26-ந் தேதி நடக்கிறது. ஜக்மோகன் டால்மியா புதிய தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் நியமனம் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படுகிறது. பிரவின் ஆம்ரே உள்பட சில முன்னாள் வீரர்களின் பெயர்கள் பயிற்சியாளர் பட்டியலில் உள்ளது. அவர்களில் யாரை தேர்வு செய்வது என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

புதிய பயிற்சியாளர் தேர்வில் அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரியின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. சஞ்சய் பங்கர், பரத் அருண், ஸ்ரீதர் ஆகியோர் அணியின் உதவி பயிற்சியாளர்களாக தொடருவார்கள்.

About the author

Sajin Prabhu