தற்போதைய செய்தி தலைப்பு செய்திகள்

ஜெர்மனி பெண் கற்பழிப்பு: குற்றவாளியின் கம்ப்யூட்டர் வரைபடம் வெளியீடு

மாமல்லபுரத்தில் ஜெர்மனி நாட்டு பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றவாளிகளில் ஒருவரின் உருவ படத்தை கம்ப்யூட்டர் மூலம் வரைந்த போலீசார், அதை வைத்து அவரை தேடி வருகின்றனர்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் ஜெர்மனி நாட்டு பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றவாளிகளில் ஒருவரின் உருவ படத்தை கம்ப்யூட்டர் மூலம் வரைந்த போலீசார், அதை வைத்து அவரை தேடி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட ஜெர்மனி பெண்ணிடம், ஜெர்மனி தூதரக அதிகாரிகள் விசாரித்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற மாமல்லபுரத்துக்கு ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், டென்மார்க், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இவர்கள் காலை, மாலை நேரங்களில் கடற்கரையில் நடைபயிற்சி செல்வதும், கடற்கரையில் சூரிய குளியலில் ஈடுபடுவதும் வழக்கம்.

இதற்காக கடற்கரை பகுதிக்கு செல்வர். தொந்தரவு இல்லாத தனிமையான சூழல், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியையே வெளிநாட்டு பெண்கள் பலர் தேர்வு செய்வர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஜெசீனா (வயது 35) என்ற இளம்பெண், மாமல்லபுரத்தை அடுத்த பட்டிபுலம் என்ற இடத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத கடற்கரை பகுதியில் நீச்சல் உடையில் குளித்து விட்டு, கடற்கரை மணலில் படுத்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த 2 மர்ம நபர்கள், அந்த பெண்ணை அருகில் உள்ள சவுக்கு தோப்புக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கற்பழித்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

ஜெர்மனி நாட்டில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த ஜெசீனா, மாமல்லபுரம் ஒத்தவாடை தெருவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்தார்.

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதிமானி, மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் வீரமணி, தனிப்படையில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் மாமல்லபுரம் சிரஞ்சீவி, கேளம்பாக்கம் கோவிந்தராஜ், தாழம்பூர் ராஜாங்கம், திருக்கழுக்குன்றம் அனுமந்தன் ஆகியோர் நேற்று அந்த தனியார் விடுதிக்கு சென்று கற்பழிக்கப்பட்ட ஜெர்மனி நாட்டு பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

அவரிடம், கிழக்கு கடற்கரை சாலையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளின் படத்தை காட்டி அடையாளம் காட்ட செய்தனர்.

அப்போது போலீசாரிடம் ஜெர்மனி நாட்டு பெண் கூறியதாவது:-

28 வயதுடைய ஒருவனும், 30 வயதுடைய ஒருவனும் என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர். இருவரும் டி-சர்ட் மற்றும் அரைக்கால் டிரவுசர் (சார்ட்ஸ்) அணிந்து இருந்தனர். இருவரும் கருப்பு நிறத்தில் காணப்பட்டனர்.

அவர்கள், என் வாயில் துணியை திணித்து, நான் சத்தம் போடாத வகையில் என்னை தூக்கிச் சென்று அருகில் உள்ள சவுக்கு தோப்பில் உள்ள ஒரு மறைவான இடத்தில் வைத்து என்னை கற்பழித்துவிட்டு ஓடிவிட்டனர். பிறகு நான் சுதாரித்து கடற்கரை பகுதிக்கு வந்து என் துணிமணிகள், கைப்பையை எடுத்துக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலைக்கு வந்தேன்.

அங்கிருந்து ஒரு ஆட்டோ மூலம் மாமல்லபுரம் வந்து சேர்ந்தேன். என்னிடம் இருந்த பணம், பாஸ்போர்ட் எதையும் அவர்கள் எடுத்துச் செல்லவில்லை.

இவ்வாறு போலீசாரிடம் அவர் கூறினார்.

மேலும் அந்த பெண் தங்கி உள்ள விடுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் மதுபோதையில் இருந்த கேரள மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட விடுதி ஊழியர் ஒருவரின் புகைப்படத்தையும் அந்த பெண்ணிடம் காட்டி, இந்த சம்பவத்தில் இவர் ஈடுபட்டாரா? எனவும் விசாரித்தனர்.

இதையடுத்து அந்த பெண் கூறிய அங்க அடையாளங்களை வைத்து மர்மநபர்களில் ஒருவரின் படத்தை போலீசார் கம்ப்யூட்டர் உதவியுடன் வரைந்தனர். அந்த மாதிரி வரைபடத்தை நேற்று போலீசார் வெளியிட்டனர். அதை வைத்து தனிப்படை போலீசார் மர்ம ஆசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் சந்தேகப்படும்படியான 2 பேரை பிடித்து மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடந்த பட்டிபுலம் சவுக்கு தோப்பு பகுதிக்கு தனிப்படை போலீசார் சென்று குற்றவாளிகள் குறித்து ஏதாவது தடயம் உள்ளதா? என ஆராய்ந்தனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஞாயிற்றுக்கிழமை பதிவாகிய காட்சிகளில் சந்தேக நபர்களின் நடமாட்டம் பதிவாகி உள்ளதா? எனவும் ஆராய்ந்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டது 2 பேரா? அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்களா? என்ற கோணத்திலும் விசாரித்தனர். குறிப்பாக சென்னை புறநகர் பகுதியில் இருந்து விடுமுறை தினமான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை நாடி வருவதுண்டு. அப்படி வந்த காமக்கொடூரன்கள் யாராவது இந்த பாலியல் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.

போலீசார் நேற்று விசாரணை செய்துவிட்டு சென்ற உடனேயே ஜெர்மனி நாட்டு தூதரக அதிகாரிகள் அந்த விடுதிக்கு சென்று, பாதிக்கப்பட்ட ஜெசினாவை சந்தித்து ஆறுதல் கூறினர். அவருக்கு நேர்ந்த கொடூரம் குறித்து விசாரித்தனர்.

பின்னர் அவரிடம் விரிவான அறிக்கையை எழுத்து மூலம் எழுதி வாங்கிக்கொண்டனர். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி போலீசாரிடமும் வலியுறுத்தினர். இந்தியாவுக்கான ஜெர்மனி தூதருக்கும் இது குறித்து தகவல் தெரிவித்தனர்.

சுற்றுலா வந்த இடத்தில் ஜெர்மனி பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், சுதந்திரமாக வெளிநாட்டினர் நடமாடமுடியாத நிலை ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஜெர்மனி பெண் ஜெசினா இன்று (செவ்வாய்க்கிழமை) விமானம் மூலம் ஜெர்மனி செல்ல இருப்பதால் எப்படி இந்த வழக்கை கையாள்வது?, எப்படி குற்றவாளிகளை அடையாளம் காண்பது? தெரியாமல் போலீசார் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால்தான் நடந்த சம்பவம் குறித்து முழு விவரம் தெரிய வரும். ஒரு வேளை குற்றவாளி பிடிபட்டால் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக அந்த பெண் மூலம் அடையாளம் காணச் செய்ய வேண்டும். தற்போது அவர், ஜெர்மனி செல்ல உள்ளார். மிகுந்த மன உளைச்சலில் உள்ள அவரை நாங்கள் கட்டாயப்படுத்தி தங்கி இருக்க செய்ய முடியாது.

வழக்கு நடக்கும் போது அவர் இங்கிருந்தால் குற்றவாளிகளை பிடிக்க எங்களுக்கு உறுதுணையாக இருக்கும். வெளிநாட்டு பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டு உள்ளது. மருத்துவ பரிசோதனை சான்று கிடைக்க பெற்றவுடன் எந்த மாதிரியான முறையில் பாலியல் சம்பவம் நிகழ்ந்து உள்ளது என்ற விவரமும் தெரிய வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று மாலை 6 மணி அளவில் காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. நஜ்மல்ஹோடா, மாமல்லபுரம் டி.எஸ்.பி. எட்வர்ட் மற்றும் தனிப்படை போலீசாருடன் தனது அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது நாளைக்குள் (அதாவது இன்று) குற்றவாளிகளை பிடிக்க இந்த வழக்கில் தீவிரமாக துப்பு துலக்க வேண்டும் என்று தனிப்படையினருக்கு உத்தரவிட்டார்.

சம்பவம் நடந்த கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தவும், போலீசாருக்கு அவர் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். இதையடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீனவர் பகுதிகளில் குற்றவாளிகள் பதுங்கி உள்ளனரா? என போலீசார் அலசி ஆராய்ந்தனர். வாகன தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடித்து தண்டிக்க ஜெர்மனி தூதரகத்தில் இருந்து அதிக நெருக்கடி கொடுப்பதால் போலீசார் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரித்து வருகின்றனர்.