Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

தென்ஆப்பிரிக்காவில் மகாத்மா காந்தி சிலை அவமதிப்பு

ஜோகன்னஸ்பர்க்,

தென் ஆப்பிரிக்காவில் உள்ள காந்தி சிலையை மர்ம நபர்கள் வெள்ளை பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர்.

நேற்று மதியம் நடைபெற்ற இந்த சம்பவம் பற்றி தென் ஆப்பிரிக்காவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது:- “ காரில் வந்த மர்ம நபர்கள் சிலர், காந்தி சிலை மீதும் அதன் அருகில் தென் ஆப்ரிக்காவில் காந்தியின் வரலாறு பற்றி எழுதப்பட்டிருந்த பெயர்ப்பலகை மீதும் வெள்ளை பெயிண்ட் ஊற்றி அவமதித்துள்ளனர். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் போல் வந்திருந்த அந்த கும்பல், காந்திக்கு எதிரான கருத்துக்கள் கொண்ட பதாகைகளையும் வைத்திருந்தனர். காந்தி ஒரு இனவாதம் கொண்டவர். எனவே அவருக்கு எதிரான செயல்பாடுகளை நிறுத்த மாட்டோம் என்று அவர்கள் கூறினர்” என்று தெரிவித்தார். அந்த கும்பலை சேர்ந்த ஒருவரை போலீசார் பிடித்து வைத்துள்ளனர். எனினும், தனது அரசியல் எஜமானர்கள் விரைவில் என்னை விடுவித்து விடுவார்கள் என போலீசாரிடம் அவர் வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி , காந்தி சிலை அவமதிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், தங்கள் கட்சி பங்களிப்பு இதில் இல்லை என்று தெரிவித்துள்ள அக்கட்சியின் செய்தி தொடர்பாளர், கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி நபர்கள் போன்று சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தை போற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

சட்டம் படித்த வக்கீலாக தொழில் செய்ய 1893-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு சென்ற மகாத்மா காந்தி, 1903 முதல் 1914-ம் ஆண்டு வரை தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் அலுவலகம் அமைத்து சுமார் 11 ஆண்டுகாலம் அங்கே வாழ்ந்து வந்தார். கருப்பின மக்கள் மீது வெள்ளையர்களால் தொடுக்கப்பட்ட அடக்குமுறைக்கு எதிராக போராடிய காந்தியின் நினைவை போற்றும் வகையில் தென் ஆப்பிரிக்கா முழுவதும் அவருக்கு ஏராளமான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.ஜோகன்னஸ்பர்க் நகரின் மையப்பகுதியில் இருக்கும் இந்த சிலை, காந்தி இளைமைக்காலத்தில் நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றிய உடையுடன் காணப்படுகிறது. இதுபோன்று இந்த ஒரேசிலைதான் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த சிலை வைக்கப்பட்டுள்ள பரபரப்பான பகுதி காந்தி சதுக்கம் எனவும் அழைக்கப்படுகின்றது.

பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனியில் மகாத்மா காந்தியின் சிலையை திறந்து வைத்த அதேநாளில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

Exit mobile version